ஜியு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர் ஓவியம் பயன்படுத்தப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஜியு போப் தன்னுடைய புத்தகத்தில் வெளியிட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 

தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “ஜி யு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர். ஜி.யு.போப் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்றொரு பதிவில், “Tirukkural: The American English and Tamil Translations of an Ethical Masterpiece” என்ற ஆங்கில புத்தகத்தின் முகப்பு பக்கத்தின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜி யு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர் இந்து சங்கம் #thiruvalluvar “தென்இந்தியாவைச் சேர்ந்த முனிவர்” என குறிப்பிட்டுக் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் போட்டு திருக்குறள் புத்தகம்.. மொழி பெயர்ப்பு : ஜி.யு.போப்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு பதிவுகளையும் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜியு போப் எழுதிய திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பில் திருவள்ளுவர் காவி உடை அணிந்தது போன்ற படத்தைப் பயன்படுத்தியதாக தினமலர் வெளியிட்டதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த பதிவை தினமலர் வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில் தினமலர் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பது தெரிந்தது. பின்னர் அந்த பதிவை அவர்கள் அகற்றிவிட்டனர்.

அமெரிக்க ஆங்கிலத்தில் ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்ததாக எந்த தகவலும் இல்லை. எனவே, இந்த புத்தகம் சந்தேகத்தை ஏற்படுத்த, தலைப்பை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, Abhinav Publications என்ற பதிப்பகம் 2008ம் ஆண்டில் இந்த புத்தகத்தை வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் புத்தகத்தை எழுதியது ஜியு போப் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: abebooks.co.uk I Archive

அது மட்டுமின்றி அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலும் கூட இந்த புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து புத்தகத்தை எழுதியவர் ஜியு போப் என்று எடிட் செய்து தவறாக சேர்த்து அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது உறுதியானது. 

சரி, இந்த புத்தகத்தில் ஜியு போப் பற்றி ஏதேனும் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று அறிய இதன் பிடிஎஃப் பதிவு கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். Himalayan Academy-யின் இணையதளத்தில் tirukural.pdf நமக்குக் கிடைத்தது. அதை பதிவிறக்கம் செய்து பார்த்த போது அது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த புத்தகம் தான். அட்டைப் பகுதியில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் ஓவியத்தை பயன்படுத்திவிட்டு, மூன்றாவது பக்கத்திலேயே திருநீறு பூசிய வெள்ளை உடை அணிந்திருப்பது போன்ற திருவள்ளுவர் ஓவியத்தை பயன்படுத்தியிருந்தனர். 

ஜியு போப் பற்றிக் குறிப்பு ஏதும் உள்ளதா என்று அறிய Find பகுதியில் தேடிப் பார்த்தோம். அப்போது திருக்குறளை இந்த புத்தகம் வெளியாகும் வரையில் மொழிபெயர்த்தவர்கள் பற்றி சிறு குறிப்பு பகுதியில் ஜியு போப்பின் பெயரும் இருந்தது. இதைத் தவிர இந்த புத்தகத்துக்கும் ஜியு போப்புக்கும் தொடர்பில்லை என்பது தெளிவானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜியு போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் காவி உடையில் திருவள்ளுவர் ஒவியம் பயன்படுத்தப்பட்டது என்று பரவும் அட்டைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜியு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர் ஓவியம் பயன்படுத்தப்பட்டதா?

Written By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *