ஹமாஸ் போராளிகளுக்குப் பயந்து காசாவுக்குள் நுழையத் தயங்கிய இஸ்ரேல் தரைப்படை வீரரை உயர் அதிகாரி அடித்து உள்ளே அனுப்பும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சில ராணுவ வீரர்கள் ஒரு சுற்றுக்கு அருகே பதுங்கி இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சில ராணுவ வீரர்களை உயர் அதிகாரி தலையில் அடிக்கும் வகையில் அந்த வீடியோவில் காட்சிகள் வருகிறது. நிலைத் தகவலில், "ஹமாஸ் ராணுவ போராளிகளுக்கு தரைப்படை தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலிய தீவிரவாதிகள் காசாவிற்குள் செல்ல மறுக்கும் இஸ்ரேல் படையினர் அதில் ஒருவன் புறமண்டையில் அடித்து தட்டி உள்ளே போக சொல்லும் இஸ்ரேல் தீவிரவாதி அதிகாரி .. !" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவானது 2023 நவம்பர் 5ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பயந்தது போன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அப்படி ஹமாஸ் போராளிகளின் தாக்குதலுக்கு பயந்து காசாவுக்குள் செல்ல மறுத்த இஸ்ரேல் ராணுவ வீரரை உயர் அதிகாரி அடித்து உள்ளே அனுப்பினார் என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2019ம் ஆண்டு இந்த வீடியோவை சில ஊடகங்கள் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு சோதனையிடச் சென்ற இஸ்ரேல் படை வீரர்கள் மீது சிறுவர்களும் இளைஞர்களும் கல்வீசித் தாக்கியதாகவும், அதை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் வீரர்கள் பதுங்கியதாகவும், அவர்களை இஸ்ரேல் ராணுவ கமாண்டர் அதட்டி, அடித்து உள்ளே அனுப்பினார் என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: ensonhaber.com I Archive

இந்த நிகழ்வின் தெளிவான வீடியோ யூடியூப் பக்கத்தில் 2019 அக்டோபர் 5ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில் இளைஞர்கள் பலரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் கற்களை எதிர்கொள்ளப் பாதுகாப்பு கவசம் எதுவும் இஸ்ரேல் ராணுவ வீரர்களிடம் இல்லை. இயந்திரத் துப்பாக்கியை அவர்கள் வைத்திருந்தனர். அந்த துப்பாக்கியை வைத்து சுட்டிருந்தால் அத்தனை இளைஞர்களும் கொள்ளப்பட்டிருப்பார்கள். ஆனால், தாக்குதல் நடத்தாமல் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மறைவாக இருந்து அதை எதிர்கொண்டதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் சில இஸ்ரேல் வீரர்களும் பதிலுக்குக் கற்களை வீசி தாக்குவதையும் காண முடிந்தது.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோவுக்கும் தற்போது நடந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காசாவுக்குள் நுழையும் வீடியோ இது இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மேற்கு கரை பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு சோதனைக்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்று 2019ம் ஆண்டு வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர்கள் ஹமாஸ் போராளிகளை கண்டு பயப்படவில்லை. தங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தும் பாலஸ்தீன சிறுவர்கள், இளைஞர்களை நோக்கி துப்பாக்கியால் சுடாமல் ஒதுங்கியிருப்பதை நாம் கண்டறிந்த வீடியோ உறுதி செய்கிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஹமாஸ் தாக்குதலுக்கு பயந்து காசாவுக்குள் நுழைய இஸ்ரேல் தரைப்படை வீரர்கள் தயங்கினர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2019ல் பாலஸ்தீனம் மேற்குக் கரை பகுதியில் சோதனைக்கு சென்ற இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வீடியோவை எடுத்து ஹமாஸ் தாக்குதலுக்கு பயந்து காசாவுக்குள் செல்ல தயங்கிய இஸ்ரேல் ராணுவ வீரரின் தலையில் தட்டி உள்ளே அனுப்பி வைத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஹமாஸ் தாக்குதலுக்கு பயப்படும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: MlSLEADlNG