நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மூத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்துள்ளனர்.
அந்த வகையில் எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதானமாக வடக்கு மற்றும் கிழக்கில் பலம்பொருந்திய உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்துள்ளனர்.
எம்.ஏ.சுமந்திரன்
இவர் 2020 ஆம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் இம்முறை மக்களால் நிராகரிக்ககப்பட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டக்ளஸ் தேவானந்தா
அரசாங்கத்தில் பல பொறுப்புக்களை வகித்தவராகவும், மூத்த அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தப்படும் டக்ளஸ் தேவானந்தாவின் தோல்வியும் தமிழர் அரசியல் பரப்பில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.
அங்கஜன் இராமநாதன்
அங்கஜன் 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இருப்பினும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் இவருக்கு பாராளுமன்ற அங்கத்துவம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கைத் தமிழ் போராளியும், அரசியல்வாதியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அணியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்.
யாழ். மாவட்டத்தின் மூத்த அரசியல் வாதியான இவர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறத் தவறியமை குறிப்பிடத்தக்கது.
தர்மலிங்கம் சித்தார்த்தன்
சித்தார்த்தன் 2015 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 53,743 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 பாராளுமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.இவரும் இம்முறை பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த மற்றுமொரு மூத்த தமிழ் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்திற்கான வாக்கு வீதம்
பிள்ளையான்
பிள்ளையான் சிறையில் இருந்தவாறே 2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார்
இருப்பினும் அவர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாக தவறி விட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த வாக்கு வீதம்
மனோ கணேசன்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசளன் கொழும்பு மாவட்டத்தின் பிரதான தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்
இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த மனோ கணேசனின் தோல்வியைத் தொடர்ந்து கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பில் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் வீதம்
வேலுகுமார்
கண்டி மாவட்டத்தில் தமிழ் மக்களை பிரதிநித்துவம் படுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசித்த வேலுகுமார் இவ்வருடம் தனது ஆசனத்தினை பறிக்கொடுத்துள்ளார்.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இருந்த தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கண்டியில் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் வீதம்
அந்தவகையில் மத்திய மலைநாட்டை பொருத்தவரையில் பழைய பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் ஆகியோர் இம்முறையும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் பின்வருமாறு
- பழனி திகாம்பரம் – 48,018
- வேலுசாமி ராதாகிருஷ்ணன் – 42,273
- ஜீவன் தொண்டமான் – 46,478
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம் சாணக்கியன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து ஞானமுத்து ஸ்ரீநேசன்,இளைய தம்பி ஸ்ரீநாத் ஆகியோர் மீண்டும் மக்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவர்கள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் பின்வருமாறு
- இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458
- ஞானமுத்து ஸ்ரீநேசன் – 22,773
- இளைய தம்பி ஸ்ரீநாத் – 21,202
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற தவறிய மாவட்டம் இது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தை பொருத்தவரையில் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னப்பலம் ஆகியோர் இம்முறையும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்படத்தக்கது.
இவர்கள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் பின்வருமாறு
- சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135
அதேவேளை கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மூத்த பாராளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம் 30,883 வாக்குகளைப் பெற்று இம்முறை மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
வன்னி மாவட்டதில் துறைராசா ரவிகுமார்,செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான், அப்துல் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இம்முறை மீண்டும் மக்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் பின்வருமாறு
- அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018
- துறைராசா ரவிகுமார் – 11இ215
- செல்வம் அடைக்கலநாதன் – 5,695
- காதர் மஸ்தான் – 13,511
புதிய பாதையை நோக்கி பயணித்து, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பெரும்பான்மையான மக்களின் ஆசை இம்முறை நிறைவேறியுள்ளது என்றே கூற வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான புதிய தமிழ் உறுப்பினர்கள் விபரம்
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் உப செயலாளரான கிருஷ்ணன் கலைச்செல்வி 33,346 வாக்குகளைப் பெற்று இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் கந்தசாமி பிரபு 14,856 வாக்குகளைப் பெற்று இம்முறை புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்டத்தை பொருத்தவரையில் தேசிய மக்கள் சக்தி 2 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுள்ளது. அந்தவகையிக் செல்வத்தம்பி திலகநாதன் 10,652 வாக்குகளையும், ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் 9,280 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அதில் கருணநாதன் இளங்குமரன் 32,102 வாக்குகளையும், ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா 20,430 வாக்குகளையும், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் 17,579 வாக்குகளையும் பெற்று இம்முறை புதிய தமிழ் பிரநிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை 6 ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில் அகில இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் 60,041 வாக்குகளையும், அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளையும் பெற்று இம்முறை பதுளை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரியாஸ் மொஹமட் 64,043 வாக்குகளைப் பெற்று இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் மத்தியில் பல மாற்றங்களை ஏற்படுத்திய 2024 பாராளுமன்ற தேர்தல் மூலம் இம்முறை பல புதிய தமிழ் பிரதிநிதிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok