INTRO
பல்வேறு நோய்கள் மற்றும் சிகிச்சைகளின் போது நோயாளர்களுக்கு தங்களால் ஈடு செய்ய முடியாத விதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதனால் அவர்கள் ஜனாதிபதி நிதியத்தி உதவியை நாடி தங்களின் மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
இதன் பின்னணியில் தற்போது குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரமே ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிந்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)
குறித்த பதிவில் ஜனாதிபதி நிதிய நிர்வாக சபையின் அனுமதியின் பேரில் நிதி உதவி வழங்கப்படும் நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் என தெரிவிக்கப்பட்ட அறிக்கையொன்று கடந்த 2024.11.28 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் உண்மைத் தன்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மை அறியும் நோக்கில் பிரதான ஊடகங்களில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி நிதியத்தினால் இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம். இருப்பினும் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
இதேவேளை நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவதற்காக நாம் 1978 ஆம் ஆண்டின் ஜனாதிபதி நிதிச் சட்டத்தை மீளாய்வு செய்தோம்.
இதன்போது நிதி ஒதுக்கீடு என்பது கட்டுப்பாட்டுக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலானது என்று குறித்த சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டுப்பாட்டுக் குழுவில் அங்கத்துவம் பெறுபவர்கள்:
- அதிமேதகு ஜனாதிபதி (கட்டுப்பாட்டுக் குழு தலைவர்)
- பிரதமர்
- சபாநாயகர்
- எதிர்க்கட்சித் தலைவர்
- ஜனாதிபதியின் செயலாளர்
- ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்
( வணக்கத்திற்குரிய கலாநிதி மெதகொட அபேதிஸ்ஸ தற்போது)
குறித்த சட்டத்தில் எந்த நோய்களையும் குறிப்பிட்டு நிதி ஒதுக்கீடு தொடர்பில் குறிப்பிடவில்லை எனினும் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் நிதியை ஒதுக்குவதற்கு கட்டுப்பாட்டுக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கப்படும் செயற்பாடுகள்
- பல்வேறு நோக்கங்களுக்கான மருத்துவ உதவி
- மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வறுமை ஒழிப்புத் திட்டம்
- மஹாபொல புலமைப்பரிசில் திட்டம்
- கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல்
- மத சீர்திருத்தம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மானியங்கள் வழங்குதல்.
- ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் மத நிகழ்வுகளுக்காக நிதியுதவி வழங்குதல்
- ஜனாதிபதி செயற்குழுவின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் நன்மைகள்
ஜனாதிபதி நிதியம்
மேலும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடக பகிர்வு தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் நாம் ஜனாதிபதி நிதியத்தின் உதவி செயலாளரான ரோஷான் சுபாஷை தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த பதிவில் உள்ள அறிவிப்பானது பல வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி நிதிய கட்டிடத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று எனவும், இது புதிய அரசாங்கத்தின் தீர்மானங்களோ அல்லது அறிவிப்புகளுடனோ தொடர்புடையது அல்ல எனவும் அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
இதேவேளை குறித்த சமூக ஊடக பதிவில் உள்ள அறிவிப்பு உண்மையாக இருந்த போதிலும் அது தற்போதை அரசாங்கத்தின் செயற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்ட ஒன்று அல்ல எனவும் குறித்த அறிவிப்பு பல வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஒன்று என்பதுவும் புலனாகின்றது.
இதேவேளை குறித்த பதிவில் உள்ள அறிவிப்பில் 13 விதமான நோய்களுக்கு மாத்திரமே ஜனாதிபதி நிதியத்தால் நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து நாம் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஆராய்ந்த போது அதில் 37 வகையான சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட நோய்களின் சிகிச்சைகளுக்காக நிதியுதவி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதனை எம்மால் அவதானிக்கமுடிந்தது.
குறித்த பட்டியலை பார்வையிட
ஜனாதிபதி நிதியத்தின் உதவிக்காக விண்ணப்பிக்கும் முறை
ஜனாதிபதி நிதியத்தின் உதவித் தொகையை பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என நாம் ஜனாதிபதி நிதியத்தின் உதவி செயலாளரான ரோஷான் சுபாஷிடம் வினவிய போது பின்வரும் படிமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கம் முடியும் என்பதனை அவர் எமக்கு தெளிவுப்படுத்தினார்.
- விண்ணப்பதாரர்கள் தேவையான விண்ணப்பங்களை ஜனாதிபதி நிதிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை கொழும்பிலுள்ள ஜனாதிபதி நிதிய அலுவலகத்திற்கு பதிவு தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ சென்றும் சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களின் நிலையை ஜனாதிபதி நிதிய இணையதளத்திலுள்ள நிலை சரிபார்ப்பு இணைப்பு மூலம் அறிந்துகொள்ளலாம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த சமூக ஊடக பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று தற்போதைய அரசாங்கத்தின் பணிப்பின் கீழ் ஜனாதிபதி நிதியத்தினால் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு மாத்திரமே நிதி வழங்கப்படுகின்றது என்ற தகவல் தவறான புரிதலுடன் பகிரப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
மேலும் குறித்த பதிவில் உள்ள அறிவிப்பு உண்மை எனினும், அது தற்போதை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்ல எனவும் பல வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி நிதியத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்ட அறிவிப்பு என்பதுவும் புலனாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரம் நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி நிதியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டதா?
Fact Check By: Suji ShabeedharanResult: Insight
