கடந்த நாட்களில் காலநிலை மாற்றங்களினால் நாட்டில் கடும் காற்றுடனான மழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டன இதன் பின்னணில் பல்வேறு தொற்றுநோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில் தற்போது நாட்டி எலிக்காய்ச்சல் (Leptospirosis) தீவிரமாக பரவி வருவதாகவும் இதனால் யாழ்ப்பானத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்து.
மேலும் இது தொடர்பான பல செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் யாழ். போதனா வைத்தியசாலையுடன் தொடர்புகொண்ட வினவிய போதிலும் அவர்களிடமிருந்து இது குறித்த தெளிவான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
இதேவேளை வட மாகாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 2 பேரின் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவர்கள் எலிக்காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதிஸ்வரன் நேற்று (2024.12.13) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரே
மேலும் வட மாகாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 7 பேரில் 2 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரே அறிவித்துள்ளார்.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவு
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவிற்கு தொடர்பு கொண்ட போது அவர்கள் பதில் வழங்குவதில் தாமதம் நிலவுகின்றது. எனவே அவர்களிடமிருந்து இது குறித்த தெளிவினை பெற்றவுடன் அது தொடர்பான தகவல்களை இந்த கட்டுரையில் இணைப்பதற்கு காத்திருக்கின்றோம்.
வட மாகாணத்தில் பரவிவரும் குறித்த காய்ச்சலின் தற்போதைய நிலை
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர்களில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது குறித்த காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதிஸ்வரன் குறிப்பிட்டார்
இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளவர்களாக விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்கள் கருதப்படுவதுடன், அவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று நேற்று (2024.12.12) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஆறுமுகம் கேதிஸ்வரன் குறிப்பிட்டார்.
எலிக்காய்ச்சல்
மக்கள் மத்தியில் பரவி வரும் பல விதமான காய்ச்சல்களில் அரிதான ஒருவகைக் காய்ச்சலே எலிக்காய்ச்சல். இந்தக் காய்ச்சல் Leptospira interrogans எனப்படுகின்ற ஒரு வகை பக்றீரியாவால் (Bacteria) ஏற்படுகிறது. இந்த நோய்க் கிருமி பொதுவாக எலி போன்ற மிருகங்களின் சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட நோய்க்கிருமி நீர்த் தேக்கங்களில் இருந்து மனிதனின் தோலில் உள்ள சிறு புண்கள் ஊடாகவோ அல்லது தோலின் மென்மையான பகுதிகள் ஊடாகவோ (Mucous Membrane) மனித உடலின் குருதிச் சுற்றோட்டத்தைச் சென்றடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்த நோய்க் கிருமி உள்ள நீரைப் பருகுவதாலும் மனித உடலைச் சென்றடைகின்றது. இந்த நோய் பெரும்பாலும் விவசாயிகளையும், கால்நடைகளுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களையும் பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நோய் அறிகுறிகள்
இந்த நோய்க்கிருமிகள் தொற்றுக்கு உள்ளானவர்களின் உடலுக்குள் சென்று 7–14 நாள்களில் நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கின்றன.
இந்த நோய்கிருமி தொற்றுக்கு உட்பட்டவர்களில் பெரும்பாலனோர் ( 90 – 95 வீதமானோர்) சிறிதளவு காய்ச்சலோடு அல்லது சிறிதளவு உடல் வலியுடன் குணமடையும் சந்தர்ப்பங்களும் உள்ளது.
மிகவும் குறைந்த வீதமானோருக்கு இந்த நோய்க்கிருமி பாரியளவிலான நோய்த்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
முதல் நிலை நோய் 7 – 10 நாட்கள் வரை நீடிக்கும். இந்தப் காலப் பகுதியில் இந்த நோய்க் கிருமி குருதிச் சுற்றோட்டத்தில் காணப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில பல வகையான நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன.
- கடுமையான தலைவலி
- காய்ச்சல்
- சோம்பல்
- சாப்பாட்டுக்கு மனம் இன்மை,
- வாந்தி
- கடுமையான தசை வலி,
- கண்மடலின் உட்புறத்தில் இரத்த கசிவுப் புள்ளிகள்
- ஈரல் மண்ணீரல், நிணநீர்க் கணுக்கள் வீக்கமடைதல்
- பல்வேறு வகையான சரும தொற்றுகள் என்பனவும் ஏற்படுகின்றன.
இந்த முதற்பகுதி நோய் 7 – 10 நாட்களின் பின்னர் இரண்டாவது நிலைக்கு மாறுகிறது.
இந்த இரண்டாவது நிலை (Immunological phase) என்று அழைக்கப்படுகின்றது.
இரண்டாவது கட்டத்தின் போது பெரும்பாலான நோயாளர்கள் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுகின்றனர். சிலர் மட்டும் நோயின் கடுமையான நிலைக்கு முகங்கொடுக்கின்றனர்.
இந்தப் பகுதியின் போது சிறு நீரகம் , ஈரல், இருதயம், சுவாசப்பை என்ற பெரும்பாலான உறுப்புகளின் தொழிற்பாடு குறைவடைவதுடன், இரத்தப் பெருக்கு ஏற்படுதல் செங்குருதி சிறுதட்டு உடைதல், சுவாசப்பையில் குருதிப் பெருக்கு ஏற்படுதல், இரத்த அழுத்தம் குறைவடைதல் போன்ற பல வகையான தாக்கங்களும் ஏற்படுகின்றன
இதேவை எலிக்காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையை பார்வையிட
2023 ஆம் ஆண்டின் நிலைமை
கடந்த ஆண்டு (2023) பதிவாகிய 9,000 எலிக்காய்ச்சல் நோயாளர்களில் கிட்டத்தட்ட 200 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
தெளிவுப்படுத்தல்
எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் வட மாகாணத்தில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 07 பேரின் மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியதன் அடிப்படையில் அவர்களில் 2 பேரின் மாதிரிகளின் முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் குறித்த இருவரும் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருக்கக் கூடும் என வைத்தியர்களின் கூற்றின் படி புலனாவதுடன். குறித்த காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு எலிகாய்ச்சல் தொற்று என கருதி சிகிச்சைகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதிஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:வட மாகாணத்தில் எலிக்காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்தமை தொடர்பான தெளிவுப்படுத்தல்
Fact Check By: suji shabeedharanResult: Insight
