சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி காடு என்று தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)

குறித்த பதிவில் சீனாவில் 192 மீட்டர் ஆழத்தில் ஒரு பெரிய நிலத்தடி காடு கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.15 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவின் கீழ் குறித்த தகவல் பொய் என தெரிவிக்கும் வகையிலான பல கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
மேலும் இது குறித்த உண்மை அறியும் நோக்கில் குறித்த படத்தினை நாம் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்திய போது தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள லேயே கவுண்டி எனும் பகுதியில் மூழ்கும் குழி இருப்பதை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக 2022 ஆம் ஆண்டு பல செய்திகள் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.
அது தொடர்பில் the archaeologist இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றும் வெளியாகியிருந்தது.

மேலும் அது தொடர்பில் வெளியான செய்தி கட்டுரைகளை பார்வையிட Link | Link | Link
குறித்த மூழ்கும் குழிகள் கண்டுபிடிக்கப்பட்ட போது வெளியான காணொளி பின்வருமாறு
தெற்கு சீனாவின் லுயோக்ஸி நகரத்தின் கீழ் பிங்கே கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மூழ்கும் குழி (sinkhole) 306 மீற்றர் நீளம், 150 மீற்றர் அகலம் மற்றும் 192 மீற்றர் ஆழம் கொண்டது எனவும் 5 மில்லியன் கன மீற்றரைத் தாண்டிய மேலுமொரு பெரிய மூழ்கியாக குறிப்பிடலாம் என சீனாவின் கார்ட்ஸ் புவியியல் ஆய்வு நிறுவனத்தின் (Karst Geology of China) மூத்த பொறியாளர் ஜாங் யுவான்ஹாய் கூறியுள்ளதாக சீனாவை தளமாகக் கொண்ட Xinhua செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த குழியின் சுவரில் மூன்று பெரிய குகைகள் உள்ளதாகவும் அவை மூழ்கியின் ஆரம்பகால பரிணாமத்தின் எச்சங்கள் என்று கருதப்படுகிறது என்று அதன் அடிப்பகுதியில் நன்கு பாதுகாக்கப்பட்ட பழமையான காடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதாக Xinhua செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை சீன அரசாங்கத்தின் கருத்துப்படி இந்த குழியானது சீனாவில் உள்ள 30 மூழ்கும் குழிகளில் ஒன்றாக கருதப்படுவதாக the archaeologist இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சமீபத்தில் சீனாவில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மூழ்கும் குழிகள் தொடர்பில் BBC செய்தி நிறுவனம் அறிக்கையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூழ்கும் குழிகள் என்றால் என்ன?
மூழ்கும் குழிகள் அல்லது சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளம் (sinkhole) என்பது இயற்கையிலேயே நிலத்தின் மேற்பரப்பில் தோன்றும் இறக்கம் அல்லது குழியாகும். இது கார்ட்ஸ் செயற்பாட்டினால் (karst process) ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டாக, புவியின் அடியில் உள்ள சுண்ணாம்புக்கல் போன்ற கார்பனேட் பாறை அடுக்குகள் கரைவதனால் இந்த மூழ்கும் குழிகள் ஏற்படுகின்றன.
உலகின் பல பகுதிகளில் இக்குழிகள் காணப்படுகின்றன, மேலும் இவை 1 மீற்றர் முதல் 6000 மீற்றர்ர் வரை அகலத்திலும் ஆழத்திலும் மாறுபடுகின்றன. இவை அடிநிலப்பாறையை பக்கங்களாகக் கொண்ட அகன்ற குழிகளாகவும் மற்றும் மணலை விளிம்புகளில் கொண்ட சிறு குழிகளாகவும் அமைந்துள்ளன.
இவை திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ உருவாகலாம். உலகின் பல இடங்களில் பல்வேறு பெயர்கள் கொண்டு இக்குழிகளைக் குறிக்கின்றனர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த பேஸ்புக் பதிவில் காணப்பட்ட புகைப்படம் உண்மை என்றாலும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று அது நிலத்தடி காடு அல்ல என்பதுடன் அந்த குழியானது 2022 ஆம் ஆண்டு தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூழ்கும் குழி என்பது புலனாகின்றது.
மேலும் இந்த குழியானது முதன் முறையாக கண்டுப்பிடிக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதுவும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான 30 மூழ்கும் குழிகளில் இதுவும் ஒன்று என்பதுடன் உலகின் பல பகுதிகளில் அவ்வாறான மூழ்கும் குழிகள் காணப்படுவதும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.