இறாலுடன் விற்றமின் C உட்கொண்டால் உயிரிழப்புகள் ஏற்படுமா?

False மருத்துவம்

இறால் உட்கொள்ளும் போது அதனுடன் விற்றமின் C எடுத்துகொண்டமையினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived link

நீங்கள் உங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் நேசிக்கிறீர்கள் என்றால் இந்த கட்டுரையைப் படியுங்கள்

————————————-

ஒரு பெண் திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறாள்.

அவளது காது, மூக்கு, வாய் மற்றும் கண்களில் ரத்தம் வழிகிறது. முதற்கட்ட பிரேத பரிசோதனையில் ஆர்சனிக் விஷம் கலந்ததால் மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆர்சனிக் எங்கிருந்து வருகிறது? போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். அதற்காக மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அழைக்கப்பட்டார்

வழக்கைத் தீர்க்க வாருங்கள்.

பேராசிரியர் அதன் உள்ளடக்கங்களை கவனமாகக் கவனித்தார்.

அரை மணி நேரத்திற்குள் மர்மம் துண்டிக்கப்பட்டது.

பேராசிரியர் கூறினார்: ‘இறந்தவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்படவில்லை, அறியாமையால் திடீரென இறந்தார்!’

அனைவரும் திகைத்தனர், ஏன் திடீர் மரணம்?

பேராசிரியர் கூறினார்:

இறந்தவரின் வயிறு.

“அங்கே ஆர்சனிக் தயாரிக்கப்பட்டது” இறந்தவள் தினமும் விட்டமின் சி எடுத்துக் கொண்டிருந்தாள், அது ஒரு பிரச்சனையும் இல்லை, அவள் இரவு உணவிற்கு நிறைய இறால்/நண்டு சாப்பிட்டதுதான் பிரச்சனை.

இறால் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை, அதனால் ஒரு இறால் இருந்தாலும், அவரது குடும்பத்திற்கு எதுவும் ஆகாது.

இருப்பினும், அதே நேரத்தில் இறந்தவர் விட்டமின் சி எடுத்துக் கொண்டார், அதுதான் பிரச்சனை!

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில், மென்மையான ஓடுகள் போன்ற உணவுகளில் ஐந்து பொட்டாசியம் ஆர்சனிக் கலவைகள் மிக அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது.

இத்தகைய புதிய உணவு மனித உடலில் ஒரு நச்சு விளைவை ஏற்படுத்தாது.

இருப்பினும், விட்டமின் சி எடுத்துக் கொள்ளும்போது, ​​ஒரு இரசாயன எதிர்வினை ஏற்படுகிறது மற்றும் முதலில் நச்சுத்தன்மையற்ற உறுப்பு நச்சுப் பொருளாக மாறுகிறது.

ஆர்சனிக் விஷத்தில் மாக்மாவின் பங்கு உள்ளது மற்றும் சிறிய இரத்த நாளங்களை முடக்கலாம். எனவே, ஆர்சனிக் விஷத்தை உட்கொண்டு இறந்தவரின் காது, மூக்கு, வாய், கண்களில் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

விட்டமின் சி எடுத்துக் கொள்ளும்போது இறால்/நண்டு சாப்பிட வேண்டாம்.

இதைப் படித்தவுடன்; தயவு செய்து கஞ்சத்தனம் செய்யாதீர்கள். நமது நண்பர்களை கவனிப்பது நமது கடமை.

அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். – – – – – – – – – – – – – – –

*இறால் மற்றும் விட்டமின் சி ஆகியவற்றை ஒன்றாக சாப்பிட முடியாது என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவு கடந்த 2023.04.09 ஆம் பதிவேற்றப்பட்டிருந்தது.

மேலும் அதன் உண்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இறால் மற்றும் நண்டு சாப்பிடும் போது அதனுடன் விற்றமின் C  எடுத்துக்கொண்டதனால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உள்நாட்டு அல்லது சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் முதலில் ஆராய்தோம் ஆனால் அவ்வாறான எந்தவித செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.

ஆர்சனிக் (ARSENIC)

ஆர்சனிக் (Arsenic) என்பது ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமம் ஓர் உலோகப் போலியாகும். பல கனிமங்களுடன் சேர்ந்து ஆர்சனிக் காணப்படுகிறது. பொதுவாக கந்தகம் மற்றும் தனிமங்களுடன் சேர்ந்து ஆர்சனிக் காணப்படுகிறது. தூய நிலையில் படிகங்களாகவும் ஆர்சனிக் கிடைக்கிறது. பல்வேறு புற வேற்றுமை வடிவங்களிலும் ஆர்சனிக் காணப்படுகிறது. ஆனால் சாம்பல்நிற ஆர்சனிக் மட்டுமே தொழில் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஆர்சனிக் காணப்படுகிறது. ஆனால் அது நச்சுத்தன்மையற்ற கரிம ஆர்சனிக் சேர்மங்களின் வடிவத்தில் உள்ளது. கனிம ஆர்சனிக் ஒப்பீட்டளவில் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் மண் மற்றும் நிலத்தடி நீரில் உள்ளதுடன்  சில பகுதிகளில் அதிக செறிவுடனும் இது காணப்படுகின்றது. 

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் ஆர்சனிக் விஷமாதல் மற்றும் இரசாயன உரங்களிலும் இந்த நிலைமை காண்படுவதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள் குறித்து 2021 ஆம் ஆண்டில் நாம் ஆங்கிலத்தில் மேற்கொண்ட ஆய்வறிக்கையை காண்க

சுரங்கம், தாது உருக்குதல் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகைளுக்காக ஆர்சனிக் பயன்படுத்தப்படுவதன் மூலமாகவும் கனிம ஆர்சனிக் சேர்மங்கள் உருவாக்கப்படலாம்.

அப்பிள் பழத்தின்  சாற்றில் உள்ள ஆர்சனிக்கின் பாதுகாப்பான அளவுகள் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட ஊடக அறிக்கையில் 

கனிம ஆர்சனிக் இயற்கையாகவே சுற்றுச் சூழலில் உள்ளதாகவும் ஆர்சனிக் கொண்ட உரங்களை நாம் பயன்படுத்துவதனால் அவை உணவிலும் காணப்படுவதாகவும்  புற்றுநோயை உண்டாக்கும் கனிம ஆர்சனிக், தோல் புண்கள், இருதய நோய், நியூரோடாக்சிசிட்டி மற்றும் நீரிழிவு நோய் உள்ள சந்தர்ப்பங்களில் இது ஆபத்தாக அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை பார்வையிட

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆர்சனிக் பற்றிய அறிக்கையின் படி”கனிம ஆர்சனிக் சேர்மங்கள் (தண்ணீரில் காணப்படுபவை) அதிக நச்சுத்தன்மை கொண்டவை எனவும் அதே நேரத்தில் கரிம ஆர்சனிக் சேர்மங்கள் (கடல் உணவில் காணப்படுகின்றவை) ஆரோக்கியத்திற்கு குறைந்தனவான தீங்கை விளைவிக்க கூடியவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை காண்க

ஆர்சனிக் விசமாதல் மற்றும் நீண்டகால ஆர்சனிக் வெளிப்பாடு ஆகிய இரண்டின் அறிகுறிகளையும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. ஆர்சனிக் விஷம் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தினாலும்  கடுமையான தொற்றுக்களின் போது மாத்திரமே இவை ஏற்படக்கூடியது. ஆர்சனிக் விஷமாதலின் அறிகுறிகளாக வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, கைகால்களில் உணர்வின்மை/கூச்ச உணர்வு மற்றும் தசைப்பிடிப்பு ஆகியன காணப்படும். 

ஆனால் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று காதுகள், மூக்கு, கண்கள் மற்றும் வாயிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுதல் என்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கவில்லை.

கனிம ஆர்சனிக்கிற்கான நீண்டகால வெளிப்பாடு (குறைந்தது 5 ஆண்டுகள்) நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், முதல் அறிகுறிகள் பொதுவாக தோலில் தோன்றும், மேலும் நிற மாற்றங்கள், கரும்புள்ளிகள் மற்றும் உள்ளங்கால்களில் புண்கள் ஆகியவை இதில் அடங்கும். 

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி, கடல் உணவுகள், அரிசி, அரிசியினால் தயாரிக்கப்பட்ட சீரியல் , காளான்கள் மற்றும் கோழி இறைச்சி என்பவற்றில்  சில கரிம ஆர்சனிக் இருக்கலாம் என்றும் அதிக அளவு வெளிப்பாட்டினால்  ஆர்சனிக் ஒரு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக அறியப்படுகிறது, ஆனால் கடல் உணவு மற்றும் நத்தை மீன்களில் உள்ள கரிம ஆர்சனிக் புற்றுநோயுடன் பெரும்பாலும் இணைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இறால் உடன் விற்றமின் C  எடுத்துக்கொள்வதனால் ஆர்சனிக் விஷம் உருவாகும் என தெரிவிக்கப்படும் தகவலின் பின்னணி

சமூக ஊடகங்களில் தெரிவக்கப்பட்ட கருத்தின்படி இறால் உடன் விற்றமின் C எடுத்துக்க்கொள்ளுதல் தொடர்பான கதையானது 1985 ஆம் ஆண்டு சிகாகோ ட்ரிப்யூனால் வெளியிடப்பட்ட Illinois பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி அறிக்கையின் வெளிப்பாடாகும். .Archived Link

அதிக அளவு விற்றமின்  C மற்றும் இறாலை சாப்பிடுவதனால் அதிலுள்ள சில சேர்மங்கள் ஆர்சனிக்காக மாற்றப்படும் என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும், இந்த நிலை ஆபத்தை விளைவிக்கும் ஆர்சனிக் விஷத்தை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதிக அளவு விற்றமின்  C உடன் இறாலை தொடர்ந்து சாப்பிடுவது காலப்போக்கில் புற்றுநோய்க்கான ஆபத்துக்களை விளைவிக்கக் கூடும் என குறித்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையில் ஆராய்ச்சி தொடர்பான முழுமையான விளக்கம் வழங்கப்படவில்லை அத்துடன் மேலும் இந்த ஆய்வில் குறைபாடுகள் இருக்கலாம் என்றும்,  எந்தளவு விற்றமின்  C எடுத்கொணடால் அது விஷமாகும் என்ற தகவல்கள் அதில் இல்லை எனவும் சர்வதேச ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.Link

1985 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை தவிர மேற்குறிப்பிட்ட ஆர்சனிக் விஷமாதல் தொடர்பில் வேறு எந்தவிதமான ஆய்வறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.

சாதாரண விற்றமின் C அளவுடன் இறால் உட்கொள்வதனால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் என்பது தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்படவில்லை.

சுகாதார மேம்பாட்டு பணியகம்

இது குறித்து நாம் சுகாதார மேம்பாட்டு பணியகத்திடம் வினவினோம், இதன்போது ஆர்சனிக் என்பது இயற்கையாகவே நிகழும் ஒரு தனிமம் என்றும், விற்றமின் C உடன் கலப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் கலவை அல்ல என்றும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இறால் மற்றும் நண்டு வகைகளை  சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்பட்ட போதிலும்,  அதனால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட்டதாக எந்த ஆய்வுகளிலும் குறிப்பிடப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மருத்துவர்கள் குறிப்பிட்டினர்.

இறாலுடன் விற்றமின் C எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்காது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகினறனர்

“ஒரு நபரின் இரத்தத்தில் அதிக அளவு ஆர்சனிக் இருக்கும்போது ஆர்சனிக் விஷம் ஏற்படுகிறது” என்றும் ஆர்சனிக் என்பது பூமியின் மேற்பரப்பில் பரவலாகக் காணப்படும் இயற்கையாக நிகழும் ஒரு தனிமம் என்றும் தெற்கு நைஜீரியாவில் உள்ள போர்ட் ஹார்கோர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மருந்தியல் பேராசிரியர் வின்சென்ட் ஐடெமேயர், ஆப்பிரிக்க உண்மை கண்டறியும் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

நாம் உண்ணும் உணவில், சுவாசிக்கும் காற்றில், குடிக்கும் தண்ணீரில் கூட ஆர்சனிக் துகள்கள் இருப்பதாகவும், ஆர்சனிக் நம்மில் ஒரு பகுதியாகும் என்றும். விற்றமின் C மற்றும் இறால் ஆரோக்கியமான உணவுகள் என்றும், அவற்றின் கலவை தீங்கு விளைவிப்பதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பேராசிரியரின் கருத்துக்களின் அடிப்படையில் வெளியான உண்மை கண்டறியும் ஆய்வுக் கட்டுரையை காண்க

ஒரு கிலோ இறாலில் மிகக் குறைந்தளவு கனிம ஆர்சனிக்கே உள்ளது

ஆர்சனிக் விஷமாவதற்கு  முக்கிய காரணமான இறாலில் உள்ள கனிம ஆர்சனிக்கின் அளவையும் நாங்கள் ஆய்வு செய்தோம். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளில் இறால்களில்  இது மிகக் குறைந்த அளவு, (ஒரு மில்லிகிராம்)ஆர்சனிக்கே உள்ளது  என்றும், மனித உடலில் arsenic trioxide உற்பத்தியாகி, மரணம் ஏற்பட வேண்டுமானால் 100 கிலோ அளவிலாவது இறாலை உட்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Link

மேலும், பிரேசிலில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், வளர்க்கப்படாத இறால்களில் (wild shrimp), இறால் பண்ணைகளில் இருந்து பெறப்படும் இறாலை விட அதிக கனிம ஆர்சனிக் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன மூலம் ஆர்சனிக் வெளிப்பாட்டின் அபாயத்தை மதிப்பிடுவது சாத்தியமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இறாலுடன் விற்றமின் C எடுத்துக்கொண்டதால் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் போலியானது என்பதுடன், அவ்வாறான உயிரிழப்பு ஏற்பட்டமை தொடர்பில் எந்தவொரு ஆதாரங்களும் இல்லை. மேலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்ட இந்த கதையானது முற்றிலும் தவறானது என்பதுடன் இறாலுடன் விற்றமின் C உட்கொள்வதனால் உயிராபத்துக்கள் ஏற்படும் என்பது ஆதாரமற்ற ஒரு தகவல் என்பது தெளிவாகின்றது.

போலியாக உருவாக்கப்பட்ட இந்த கதையானது 1985 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டாலும் அதிகளவான விற்றமின் C மறறும் இறால் உட்கொள்ளுதல் பிற்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்டாலும் குறித்த ஆய்வில் அது குறித்த முழுமையான தெளிவுபடுத்தல்கள் எதுவும் இல்லை. 

மேலும் அதிகளவு விற்றமின் C உடன் இறாலை சாப்பிடுவது மரணத்திற்கு வழிவகுக்காது என்பதை மருத்துவ நிபுணர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இறாலுடன் விற்றமின் C உட்கொண்டால் உயிரிழப்புகள் ஏற்படுமா?

Fact Check By: suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *