
சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும் அவ்வாறான மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டே இருப்பதனால் அவற்றில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இவ்வாறான பின்னணியில் பாஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் இலவச மோட்டார் சைக்கிள்
@Bajaj-ன் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பிப்ரவரி 28, 2025-க்கு முன் ‘வாழ்த்துக்கள்’ என்று எழுதுபவர்களுக்கு 300 இலவச பைக்குகள் மற்றும் ஐபோன்களை நாங்கள் வழங்குகிறோம். வாழ்த்துக்கள். என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.24 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் குறித்த பதிவின் கீழ் அவர்கள் இதில் பங்குகொள்ளும் விதம் தொடர்பில் அறிவித்திருந்ததுடன் அதன் உண்மை அறியாத பலர் அவர்கள் தெரிவித்திருந்ததனைப் போன்று “வாழ்த்துக்கள்“ என கமெண்ட் செய்திருந்ததனையும் எம்மால் காண முடிந்தது.

குறித்த பதிவில் இலவச கார்🥳🥳
@Toyota Hilux-ன் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், மார்ச் 5, 2025-க்கு முன் மாலை 5 மணிக்குள் “வாழ்த்துக்கள்” என்று எழுதுபவர்களுக்கு 5 இலவச Toyota Hilux கார்களை வழங்குவோம்.
நல்ல அதிர்ஷ்டம்❤️❤️ என பதிவேற்றி இருந்தமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவு தொடர்பில் தேடுதலில் ஈடுபட்ட போது முதலில் குறித்த பதிவை வெளியிட்டிருந்த பேஸ்புக் பக்கம் தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.
குறித்த பதிவை பதிவேற்றிய தினத்திலேயே 𝐁𝐚𝐣𝐚𝐣 𝐦𝐨𝐭𝐨𝐫 𝐜𝐢𝐜𝐥𝐞 𝐁𝐃 என்ற பக்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

நாம் குறித்த பக்கத்தினை ஆய்வு செய்த போது 𝐁𝐚𝐣𝐚𝐣 𝐦𝐨𝐭𝐨𝐫 𝐜𝐢𝐜𝐥𝐞 𝐁𝐃 என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பக்கம் பின் 𝑻𝒐𝒚𝒐𝒕𝒂-𝑯𝒊𝒍𝒖𝒙 𝑭𝒂𝒏𝒔• என மாற்றம் செய்யப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.
அத்துடன் குறித்த பேஸ்புக் பக்கத்தில் அவர்கள் தொடர்பான எந்தவித நம்பத்தகுந்த தகவல்களையும் எம்மால் காணமுடியவில்லை.
எனவே மக்களை ஏமாற்றும் நோக்கிலான குறித்த பதிவை பதிவேற்றுவதற்காக மாத்திரம் இந்த பேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி
எனினும் அது குறித்த மேலதிக தெளிவினைப் பெற்றுக்கெள்ளும் நோக்கில் இலங்கையில் பஜாஜ் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனமான David Pieris Motor Company (Pvt) Ltd இன் இணையதளம் மற்றும் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திற்கு சென்று ஆராய்ந்த போது, மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று இலவச மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐபோன்கள் வழங்குவது தொடர்பிலான எந்தவொரு விளம்பரங்களையோ அல்லது பதிவுகளையோ எம்மால் காணமுடியவில்லை.
எனினும் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் பஜாஜ் நாமத்தைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கை அறிக்கையொன்றை கடந்த 2024. 09. 11 ஆம் திகதி வெளியிட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே நாம் இது தொடர்பில் David Pieris Motor Company (Pvt) Ltd ஐ தொடர்பு கொண்டு வினவினோம், இதன்போது இலவசமாக மோட்டார் சைகிள்கள் மற்றும் ஜபோன்கள் வழங்குவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது எனவும் இவ்வாறான மக்களை ஏமாற்றும் மோசடிகள் பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு போலியாக பகிரப்படும் தகவல் தொடர்பில் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிக்கையொன்றை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT)
இது தொடர்பில் நாம் இலங்கை கணிணி அவசர தயார்நிலை குழுவிடம் கேட்டபோது, இதுவொரு மோசடி எனவும், இவ்வாறான பதிவுகள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் வங்கி வைப்புகள் திருடப்படுகின்றது, எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்
Also Read: SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!
SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!
பாடகி யோஹானி நேர்காணல் நிகழ்ச்சியில் உடனடியாக பணம் சம்பாதிக்கும் வழி தொடர்பில் வெளிப்படுத்தினாரா?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பஜாஜ் நாமத்தைப் பயன்படுத்தி இலவசமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐபோன்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்பதுடன் பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி இவ்வாறு இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நாம் இவற்றை SCAM என்றே அழைக்கிறோம், மேலும் இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவதானத்துடன் இருக்குமாறும், இதுபோன்ற போலி தகவல்களால் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!
Fact Check By: Suji ShabeedharanResult: False
