நாட்டில் உள்ள சில தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவது குறித்த புதிய அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தற்போது சமூகத்தில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் நுவரெலியாவில் உள்ள தபால் கந்தோரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு ரணில் அரசு முயன்ற போது தொழிலாளர் யூனியனை குழப்பி ஆர்பாட்டம் செய்ய வைத்து Strike பன்னி எதிர்ப்பு தெரிவித்த அக்குள் குமார அரசு இன்று அதே நுவரெலியா தபால் கந்தோருடன் சேர்த்து இன்னும் பல கந்தோர்களை சுற்றுலா தளமாக மாற்ற முடிவெடுத்திருக்கிறது.
அடேய் வாக்களிச்ச சோனிகள் தான் மங்குனிஸ்னு பாத்தா சுத்தி சுத்தி அடிக்கான்டா அக்குள் குமார! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.07 ஆம் திகதி பதிவேற்றப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Explainer (தெளிவுபடுத்தல்)
சுற்றுலாத் துறையை கவரும் விதத்தில் காணப்படும் தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவது குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிக்கையொன்றை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகியமையால் நாம் முதலில் அமைச்சரின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்தோம்.
தபால் சேவையின் நவீனமயமாக்கல் குறித்து அமைச்சர் மார்ச் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அப்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தபால் நிலையங்கள் குறித்து அவர் அங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தபால் சேவை குறித்த தனது உரையில், தபால் துறைக்கு மிகக் குறைந்த கவனம் செலுத்தப்படுவதாகவும், இந்த தபால் சேவையை நவீனமயமாக்குவதன் மூலம், தனியார் துறையுடன் போட்டியிடக்கூடியதாகவும், இலாபகரமான சேவையாகவும் மாற்ற முடியும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதை அடைவதற்கு தபால் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டனார்.
அதன்படி, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தபால் துறைக்கு மொத்தம் 23.9 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 21 பில்லியன் ரூபாய் தொடர்ச்சியான செலவினங்களுக்காகவும், 2 பில்லியன் ரூபாய் மூலதனச் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், 14 புதிய தபால் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் பல தபால் நிலையங்களை புதுப்பிக்க 1300 மில்லியன் டொலர் செலவிடப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தபால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், நுவரெலியா, கண்டி, கொழும்பு, காலி போன்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கு பிரத்தியேகமான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பிரதான தபால் நிலையங்களுக்கு அருகிலுள்ள அருங்காட்சியகத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்பார்ப்பு காணப்படுவதாகவும், தபால் ஊழியர்களின் ஆதரவுடன், தபால் அலுவலகம் சிறந்த இடமாக நவீனமயமாக்கப்பட்டு இலாபகரமான சேவையாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய தபால் நிலையங்களை சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவே அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மாறாக அந்த தபால் நிலையங்கள் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றப்படும் என்றோ அல்லது தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் என்றோ அல்லது அந்த தபால் நிலையங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்றோ, சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும் என்றோ எந்தக் கருத்தும் அதன்போது அமைச்சரினால் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல், அந்த தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கான திட்டம் என்ன என்பது குறித்தும் அமைச்சரின் உரையின் போது தெரிவிக்கப்படவில்லை
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
எனவே இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களை தொடர்புகொண்டு வினவினோம்.
இதன்போது தான் பாராளுமன்றில் தெரிவித்த விடயத்தை சில ஊடகங்கள் திரிபுப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் தான் தெரிவித்த விடயங்கள் அவ்வாறே செயற்படுத்தப்படும் எனவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த தபால் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு மாத்திரமே திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த தபால் நிலையங்களில் தபால் சேவைகள் வழமைப் போல் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும், குறித்த தபால் நிலையங்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்தில் மேலும் அபிவிருத்தி செய்யவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நுவரெலியா தபால் நிலையம்
இலங்கையில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக மாறியுள்ள நுவரெலியா தபால் நிலையத்திடம், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள தபால் நிலையங்களை மேலும் அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்து வினவினோம். இதன்போது புதிய திட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தை சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்கான திட்டங்களை முந்தைய அரசாங்கம் தயாரித்திருந்தாலும், இனிமேல் அந்தக் கட்டிடமும் நிலமும் தபால் துறையின் நடவடிக்கைகளுக்கு மாத்திரமே ஒதுக்கப்படும் என்றும், இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் இடைநிறுத்தப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 150வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நுவரெலியா தபால் நிலையத்தை தனியார் ஹோட்டல் திட்டத்திற்கு (தாஜ் சமுத்ரா ஹோட்டல்) வழங்கும் முந்தைய அரசாங்கத்தின் திட்டம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், முக்கிய சுற்றுலா தலமாக மாறிய நுவரெலியா தபால் நிலையத்தை அகற்றி, அங்கு சுற்றுலா விடுதியை நடத்துவதற்காக அந்தக் கட்டிடத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு எடுத்த முடிவின் காரணமாக, நுவரெலியா தபால் நிலையம் தொடர்பாக அப்போது பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த சந்தர்ப்பத்தில் குறித்த தீர்மானத்திற்கு எதிராக பல போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.பி. சத்குமாரவிற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் இது நாட்டில்அதிகம் பேசப்பட்ட நிகழ்வாகும். 2023 ஆம் ஆண்டு நுவரெலியாவை சுற்றுலா நகரமாக மேம்படுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் உரையிலிருந்து நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்காக ஒப்படைக்குமாறு தபால் திணைக்களத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. அதுவரை அது செயல்படுத்தப்படவில்லை என்றும் அதன்போது தெரிவிக்கப்பட்டது. நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்திற்கு ஈடாக தபால் நிலையத்திற்குப் பின்னால் உள்ள நிலத்தை வழங்க தபால் திணைக்களம் தயாராக உள்ளது என்பது தொடர்பிலும் அந்த கலந்துரையாடலின் மூலம் தெரியவந்தது.
குறித்த கலந்துரையாடல் பின்வருமாறு
கடந்த அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான திட்டம் இருந்தபோதிலும், புதிய அரசாங்கம் அந்த முடிவை செயல்படுத்தாமல், அந்தக் கட்டிடத்தை ஒரு தபால் நிலையமாக தொடர்ந்தும் இயக்க முடிவு செய்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியிலேயே, சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள தபால் நிலையங்கள் சுற்றுலா மையங்களாக மாற்றப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இருப்பினும், நாம் அவரிடன் இது குறித்து வினவியபோது, இது தனியார் துறைக்கு குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், மாறாக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த இடத்தினை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் மாத்திரமே இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது உறுதிப்படுத்தினார்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சுற்றுலாத் துறையை கவர்ந்த தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதா?
Fact Check By: suji shabeedharanResult: Insight
