
பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அரசாங்கம் எந்தவொரு பிரஜைக்கும் வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு 750,000 ரூபா வரை வழங்கும் என்று கூறியதாக தெரிவித்த விரிவான கட்டுரை ஒன்றும், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று கூறும் ஒரு விளம்பரமும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்து பணம் பெற ஊக்குவிக்கப்படுவதையும், முதலீட்டு முறைகள் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றன என்பதையும் பாரக்கக் கூடியதாக உள்ளது.
எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
News 1st இல் ஒளிபரப்பாகிய Face to Face என்ற அரசியல் நிகழ்ச்சியில், இலங்கை பிரஜைகள் வாழ்நாள் முழுவதும் 750,000 ரூபாவை பெறலாம் என்றும், அதற்கு அவர்கள் NetherexPro என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அங்கு 75,000 ரூபா முதலீடு செய்பவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெறலாம் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியதாக குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது டெய்லி மிரர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையைப் போலத் தோன்றும் வகையிலேயே பதிவேற்றப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, ஹரிணி அமரசூரிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் வரி முறையை மேம்படுத்த விரும்புவதாகவும், இந்த மாதாந்திரத் தொகையை இந்த நாட்டு பிரஜைகள் செலுத்தும் வரிகளிலிருந்து ஈவுத்தொகையாக வழங்க முடியும் என்றும் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 750,000 இலங்கை ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாகக் பிரதமர் இந்த நிகழ்ச்சியின் போது கூறியதாக குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரிகளில் ஒரு பகுதியை அரசாங்க செலவுகளுக்குச் செலவிட்டதன் பின்னர்,மீகுதி பணத்தில் இந்த முதலீடை்டை செய்து அதன் மூலம் இந்த மாதாந்த கொடுப்பனவை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கு அறியப்பட்ட NetherexPro தளத்தின் தலைவருடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், பொதுமக்களுக்காக 4,000 சமூகக் கணக்குகளைத் திறக்க ஒப்புக்கொண்டதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பிரஜையும் NetherexPro இல் பதிவு செய்து வருமானம் ஈட்டலாம் என்றும் பிரதமர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4,000 இலங்கை பிரஜைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு 750,000 இலங்கை ரூபாவினை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும், குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 75,000 என்றும், அதை முதலீடு செய்வதன் மூலம் இந்தக் கணக்கு செயல்படுத்தப்படும் என்றும், எந்த நேரத்திலும் இதை அணுக முடியும் என்றும், இந்த முதலீட்டைச் செய்யும் எவரும் மாதாந்தம் 750,000 தொகையை பெற முடியம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது சட்டப்பூர்வமானது என்று பிரதமர் உறுதியளித்ததாகவும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, குறித்த திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது என்பது தொடர்பில் பிரதமரினால் செய்து காண்பிக்கப்பட்டது எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 20 நிமிடங்கள் ஆகும் என்றும், பெயர், தொலைபேசி எண் மற்றும் தொடர்புடைய தொகை வரவு வைக்கப்படும் வங்கி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும், இங்கு செய்யப்படும் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள் அதிகம் என்றும், இது அரசாங்கத்தாலும் இலங்கை வங்கியாலும் சான்றளிக்கப்பட்ட ஒரு தேசிய திட்டம் என்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்று பிரதமர் தெரிவித்ததாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
பிரதமர் இந்த முதலீட்டு திட்டம் தொடர்பில் கூறியதாக புகைப்படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சி தொடர்பில் நாம் முதலில் ஆராய்ந்தோம். இதன்போது குறித்த நிகழச்சியானது News 1st இல் ஒளிபரப்பான Face to Face நிகழ்ச்சி என்பதனை கண்டறிந்தோம்.
இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்ட குறித்த நிகழ்ச்சியானது 2024 ஆம் ஆண்டு மே மாதம் அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி என்பதனை கண்டறிய முடிந்தது. கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலானது செப்டம்பர் 21, திகதி இடம்பெற்றது. எனவே இது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி என்பது தெளிவாகிறது.
குறித்த முதலீட்டு திட்டம் தொடர்பில் ஹரிணி அமரசூரிய பிரதமரானதற்கு பின்னர் News First இன் Face to Face நிகழ்ச்சியின்போது குறிப்பிட்டதாகவே குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் குறித்த நிகழ்ச்சியை முழுமையாக பார்வையிட்டோம் இதன்போது ஹரிணி அமரசூரியா பிரதமராவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி இடம்பெற்றமை தெரியவந்தது. மேலும், அந்த நிகழ்ச்சியின் போது, ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த நம்புவதாக அவர்கள் குறிப்பிடவில்லை.
குறிப்பாக, டெய்லி மிரர் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று எந்த முதலீட்டு முறையையும் இந்த நிகழ்ச்சியின் போது குறிப்பிடப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட அவர்களின் பேரணிகள் மற்றும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் மேற்கொள்ள விரும்பும் நடைமுறைகள் குறித்தே இந்த நிகழ்ச்சி விவாதிக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்ச்சியை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Link
மேற்குறிப்பிட்ட கட்டுரையில் நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் பெயர் ஜனக காரியவசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளரின் உண்மையான பெயர் சார்லன் கெவின் பெனடிக்ட் ஆகும்.
அதன்படி, மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பிரதமர் கூறியதாகக் தெரிவிக்கப்படும் நிதி முதலீடு மற்றும் விநியோகம் தொடர்பான கட்டுரை முற்றிலும் தவறானது என்பது தெளிவாகின்றது.
இருப்பினும், ஹரிணி அமரசூரியா பிரதமரான பிறகு அவர் கலந்துகொண்ட ஏனைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நாம் ஆராய்ந்தோம், ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் எதிலும் அவர் அத்தகைய எந்தவொரு முதலீட்டு திட்டங்கள் தொடர்பிலும் கூறவில்லை என்பது உறுதியானது.
இந்தப் பணத்தை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்ட உரையையும் ஆய்வு செய்தோம், ஆனால் அது போன்ற ஒரு திட்டம் தொடர்பான எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.
குறித்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்கள் முரண்பாடாக காணப்படுகின்றன
இந்தக் கட்டுரையை நாம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆராய்ந்த போது அதன் தொடக்கத்தில் இந்தப் பணத்தை வழங்க வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என்று கூறுப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையின் நடுவில், NetherexPro தளத்தில் 4,000 பொதுமக்களுக்கு கணக்குகளைத் திறப்பது குறித்து நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்றும், முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய பணத்தின் அளவு அதிகரிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு பணத்தை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தால், ஏன் மறு முதலீடுகள் செய்யப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது. கட்டுரையின் தொடக்கத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், பின்னர் 4,000 பேருக்கு முதலீட்டு கணக்குகளைத் திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று மீண்டும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு நபரும் மாதத்திற்கு ரூ.750,000 பெறலாம் என்று கூறப்பட்டாலும், முதலீட்டு முறையைப் பொறுத்து பெறப்பட்ட தொகை அதிகரிக்கும் என்று கட்டுரையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த கட்டுரையில் கூறப்பட்ட கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் காணப்படுகின்றமை புலனாகின்றது.
இதுபோன்று பணம் வழங்குதல் அல்லது முதலீட்டுத் திட்டம் குறித்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை
இது தொடர்பில் அரசாங்கத்தினால் ஏதேனும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது அவ்வாறு எந்தவித அமைச்சரவை முடிவுகளோ இல்லது ஊடக அறிக்கைகளோ வெளியிடப்படவில்லை என்பதனை நாம் உறுதிப்படுத்திக்கொண்டோம்.
டெய்லி மிரர் இணையதளத்தில் இதுபோன்ற எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை
இந்தக் கட்டுரை 2025 பெப்ரவரியில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதில் திகதி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இருப்பினும், பெப்ரவரியில் டெய்லி மிரர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளையும் நாம் ஆராய்ந்தபோது, அத்தகைய செய்திகள் எதுவும் வெளியாகியிருப்பதை காண முடியவில்லை.
மேலும் டெய்லி மிரர் இணையதளத்தை அணுகும்போது, அதன் டொமைன் www.dailymirror.lk என்றே காட்டப்படுகின்றது.
இருப்பினும், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கான இணைப்பு நீளமானது மற்றும் அதிகாரப்பூர்வ டெய்லி மிரர் இணைப்பு அதில் இல்லை. மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள chilldoodle.com என்ற டொமைன் மூலம் இது இலங்கையின் இணையதளம் அல்ல எனவும் டெய்லி மிரரின் உத்தியோபூர்வ இணையதளம் அல்ல என்பதையும் உறுதிப்படுத்தலாம்.
டெய்லி மிரர் இலட்சிணையும் இங்கே வித்தியாசமான முறையில் காட்டப்பட்டுள்ளது. டெய்லி மிரர் இணையதளத்தின் உத்தியோகபூர்வ இலட்சிணையையும் போலியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இலட்சிணையையும் ஒப்பீட்டு பார்க்கும் போது அதில் காணப்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு
எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த தகவலானது முற்றிலும் போலியானது என்பது தெளிவாகின்றது.
மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புகைப்படம் மற்றும் டெய்லி மிரர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஆகியவை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன, அதில் 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் வாழ்நாள் முழுவதும் நிதியுதவி வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த நாட்டில் 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்நாள் உதவித்தொகை வழங்கப்பட்டால், அது தொடர்பான திட்டமும் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையும் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிச்சயமாக முன்வைக்கப்படும், எனவே நாம் அது குறித்து ஆராய்ந்த போது ‘அஸ்வெசும’ நிதி ஒதுக்கீடுகளைத் தவிர, வேறு வகையான திட்டம் குறித்து ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் எந்த தகவலும் முன்வைக்கப்படவில்லை.
மேலும் இந்த நாட்டு மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தால், அது நிச்சயமாக முக்கிய ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருக்கும் எனவே நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
போலியான டெய்லி மிரர் செய்தியின் மொபைல் பார்வை ( Fake Daily Mirror Mobile Preview)
டெய்லி மிரர் இணையதளத்தில் இதுபோன்ற விளம்பரம் அல்லது செய்தி ஏதேனும் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தபோது, அவ்வாறு டெய்லி மிரர் இணையதளத்தில் எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
தொடர்ந்து நாம் மேற்கொண்ட ஆய்வின்போது, இது ஒரு ஸ்கிரீன்ஷாட் என்பதைக் கண்டறிந்தோம். உண்மையான டெய்லி மிரர் மொபைல் பதிப்பின் (Daily Mirror Mobile Preview) இலட்சிணை அமைந்துள்ள இடம், விளம்பர இடம்பெறும் இடம் மற்றும் ஒட்டுமொத்த வடிவமைப்பு மாறுப்பட்டு காணப்பட்டது. டெய்லி மிரர் இணையதளத்தின் மொபைல் தோற்றத்தின் உண்மையான புகைப்படம் பின்வருமாறு
அதன்படி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி பதிவையும் உண்மையான டெய்லி மிரர் இணையதளத்தின் மொபைல் பார்வையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது,
பிரதமர் ஊடகப் பிரிவு
மேற்குறிப்பிட்ட இரு சம்பவங்கள் தொடர்பிலும் தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் பிரதமர் ஊடகப்பிரிவிடம் தொடர்பு கொண்டு வினவினோம்.
அதன்படி, இந்த நாட்டு மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதி செலுத்தும் முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை என்றும், பிரதமர் எந்த முதலீட்டு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும், நாட்டில் வரிகள் மூலம் பிரஜைகளுக்கு பணம் வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை எனவும், இவ்வாறு பரவும் போலி இணைப்புகளைக் கொண்ட செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் பிரதமரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.
இவ்வாறான போலியான இணைப்புகளில் உங்கள் தனிப்பட்ட தரவுகளை உட்செலுத்தாமல் இருப்பது குறித்து அவதானமாக செயற்படவும்
பொதுவாக அரசு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் அது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அல்லது குறித்த அமைச்சின் மூலம் பொதுமக்களை தெளிவுபபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
எனவே, இதுபோன்ற முறையற்ற வழிகளில் அரசாங்கத் தகவல்கள் ஒருபோதும் வழங்கப்படாது. ஆனால் இது போன்ற போலி இணைப்புகளைக் கொண்ட போலி செய்திகளின் நம்பகத்தன்மையைப் உறுதிப்படுத்துவதற்காக ஒரு அரசாங்கத் திட்டமாக இதை முன்வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில், ஒரு அரசு அதிகாரி அல்லது ஒரு பிரபலமான நபர் முதலீடு செய்ததாகக் கூறி, இதுபோன்ற மோசடி முதலீட்டுத் திட்டங்களில் மக்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த போலியான இணைப்புகள் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெற அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம், மேலும் இந்த வகையான சந்தேகத்திற்கிடமான அல்லது போலியான இணைப்புகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட வேண்டாம்.
அத்தகைய இணைப்புகளை நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு உத்தியோகபூர்வ ஆதாரங்களுடன் செய்திகளைச் சரிபார்க்க மறக்காதீர்கள்.
Also Read:
ரமழான் நிவாரணப் பொதி வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் உண்மையா?
மகளிர் தினத்தை முன்னிட்ட மெலிபன் நிறுவனத்தினால் பணப்பரிசு வழங்கப்படுகிறதா?
சமூக ஊடகங்களில் பகிரப்படும் எச்சரிக்கை செய்திகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுங்கள்!
பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் News First இன் Face to Face நிகழ்ச்சியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய முதலீட்டுத் திட்டம் குறித்து அறிவித்ததாகவோ அல்லது ஒவ்வொரு பிரஜைக்கும் மாதந்தோறும் 750,000 ரூபா வழங்கப்படும் என்று கூறும் டெய்லி மிரர் பத்திரிகையால் வெளியிடப்படுவதாகக் கூறப்படும் கட்டுரையும், டெய்லி மிரர் விளம்பரம் மூலம் 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் வாழ்நாள் முழுவதும் நிதி உதவிகளை வழங்கும் என்று பரப்பப்படும் சமூக ஊடகப் பதிவும் போலியானது என்பது தெளிவாகின்றது.
மேலும் இந்தப் பதிவு பிரதமரின் படத்தைப் பயன்படுத்தி இந்தச் செய்தியை உண்மையாகக் சித்தரிக்க முயற்சிக்கிறது, ஆனால் அது தவறானது என்பதுடன் அரசாங்கம் அத்தகைய திட்டங்களை அறிவிக்கவில்லை, மேலும் இந்த குறிப்புகளில் உள்ள தகவல்கள் தவறானவை என்பதை பிரதமரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த சமூக ஊடகப் பதிவில் பயன்படுத்தப்படும் டெய்லி மிரர் இணையதளத்தின் உத்தியோகபூர்வ இலட்சிணை மற்றும் வடிவம் கூட இவற்றில் வேறுப்படுகின்றன, மேலும் அவை ஃபிஷிங் மோசடிகளாக (SCAM) அடையாளப்படுத்தப்படுகின்றதன. எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதையும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:அனைத்து பிரஜைகளும் மாதம் 750,000 ரூபா பெறும் திட்டம் தொடர்பில் பிரதமர் தெரிவித்தாரா?
Written By: Suji ShabeedhranResult: False
