
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் திகதி பூமிக்கு திரும்பினார்.
இதனையடுத்து சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருக்கும் போது தனக்கு பைபிளின் மீது இருந்த நாட்டம் குறைந்து விட்டதாகவும், ஆனால் தினமும் குர்ஆனைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாகவும், ரமழான் நோன்பினால் விண்வெளியில் குறைவாக சாப்பிடவும் குடிக்கவும் தான் கற்றுக்கொண்டதாக, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய பின்னர் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் அல்லாஹு அக்பர் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் நாடினால் இவர்களை நேர்வழி காட்டுவான்..
அல்ஹம்துலில்லாஹ்
சுனிதா வில்லியம்ஸின் அதிர்ச்சி தகவல்
ஒரு வார பணிக்காக விண்வெளிக்கு சென்று 9 மாதங்கள் தங்கிவிட்டு திரும்பிய சுனிதா தற்போது உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளார்.
‘கடவுளின் விருப்பத்தால் நான் விண்வெளியில் சிக்கிக்கொண்டதாக உணர்கிறேன். 20 நாட்களுக்குப் பிறகும், என் எதிரில் மரணத்தைக் கண்டது போல் வாழ்ந்தேன். சேமித்து வைத்திருக்கும் உணவும் தண்ணீரும் தீர்ந்து போக எப்படி முன்னேறுவது என்று யோசித்தபோது, இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு நினைவுக்கு வந்தது. அன்று முதல் மாலையில் உணவும் தண்ணீரும் குறைவாகவும், காலையில் தண்ணீர் குறைவாகவும் குடிப்பேன். ஒரு மாதத்திற்குப் பிறகு நான் மிகவும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் உணர்ந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.
மரணத்திற்காகக் காத்திருந்து, ஒரு நாள் பைபிளைப் படிப்பேன் என்று நினைத்துக் கணினியைத் திறந்தேன். முன்பு பலமுறை படித்ததால், ஒரு பக்கம் படித்தவுடனேயே சலித்து, குரானை மீண்டும் படிக்கலாம் என்று தோன்றியது (இப்போது கொஞ்சம் பலம் கொடுத்ததாக உணர்கிறேன்) டவுன்லோட் செய்து (ஆங்கில மொழிபெயர்ப்பு) படிக்க ஆரம்பித்தேன். 10-15 பக்கங்களைப் படித்த பிறகு நான் ஆச்சரியப்பட்டேன். அதன் கரு, ஆழ்கடல் மற்றும் வானம் ‘அது ஆச்சரியமாக இருந்தது. இதை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன்.
‘விண்வெளியில் இருந்து பார்க்கும் போது சூரியன் குட்டையில் விழுவது போல் தெரிகிறது. சில சமயம் மேலிருந்து கோஷமிடுவது போன்ற சில குரல்கள் கேட்கலாம், அது அரபு மொழி என்று நினைத்தேன். ஒவ்வொரு நாளும் குர்ஆனைப் படிப்பது போல் உணர்கிறேன் என்று எனது தோழர் பாரி வில்மோர் கூறினார். அதன் பிறகு குர்ஆனை ஆழமாக படிக்க முடிவு செய்து தஃப்ஸீர்களை டவுன்லோட் செய்தேன். இது ஒரு அற்புதமான அனுபவம். உடனே எலோன் மஸ்க்கை அழைத்து தகவல் தெரிவித்தேன். இந்த விஷயத்தை விரைவில் தனது X உடன் பகிர்ந்து கொள்வேன் என்றார்.
‘ இப்போது நீங்கள் அதிர்ச்சியடையப் போகிறீர்கள்.. சில நாட்களில் பெரிய விண்கற்கள் நமது விண்வெளி நிலையத்தை நோக்கி விரைவதைப் பார்த்து பயந்துபோய் அமர்ந்திருப்போம். வேறு வழியில்லாததால், சில சிறிய கோள விளக்குகள் (நட்சத்திரங்கள் போல) பறந்து அனைத்து விரிகுடாக்களையும் அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம். அதைப் பார்க்கும்போது நமக்கு நட்சத்திரங்களைச் சுடுவது போல் தோன்றும். எங்களை ஆச்சரியப்படுத்தியது. இது குறித்து நாசா விரைவில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்துள்ளார்.
8 மாதங்களுக்குப் பிறகு, நான் முழு குரானையும் படித்தேன். நான் மீண்டும் பூமிக்கு செல்லலாம் என்று உணர ஆரம்பித்தேன். ஒரு அசாதாரண நம்பிக்கை என்னை நிரப்பியது.
ஏப்ரல் மாதத்தில், சூரியன் மறையும் போது, ஒரு யூனிகார்ன் (பறக்கும் குதிரை) போன்ற ஒரு உயிரினம் மேலிருந்து பூமிக்கு வருவதைக் காணலாம், அது பூமியின் வளிமண்டலத்தை அடைந்தவுடன், அதை பார்க்க முடியாது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் நானும் பேரி வில்லிமோரும் அதைப் பார்க்க ஆரம்பித்தோம். இது மேல் ஸ்பெஷல் லேயரில் இருந்து கீழே வருகிறது மற்றும் வானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். எவ்வளவு யோசித்தும் இந்த பறக்கும் குதிரைகள் ஏன் இன்னும் இல்லை என்று புரியவில்லை. அப்போதுதான் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ஹட்சன் ஆற்றின் மேல் பிறை நிலவு தென்பட்டதை பார்த்தேன், மார்ச் 2ம் தேதி முஸ்லிம்கள் நோன்பு நோற்கத் தொடங்கினார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன். அப்போதிருந்து, நஞ்சல் இந்த நிகழ்வைக் கண்டார். அடுத்த நாட்களில் பூமியில் நோன்பு திறக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தோம். அவர்கள் கடவுளின் ஆசீர்வாதத்துடன் வரும் தேவதைகள் (மலக்) என்று நான் நினைக்கிறேன்.
‘குரான் உண்மை என்று இப்போது உணர்கிறேன். இப்போது எனது ஆராய்ச்சி குர்ஆனில் உள்ள அறிவியலைப் பற்றியதாக இருக்கும். கருவியல், ஆழ்கடல் அறிவியல். , நான் கோளங்களின் அனைத்து அறிவியலையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். குர்ஆனின் அமானுஷ்ய சக்தியைக் கண்டறிய நாசாவில் புதிய துறையைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதியை டிரம்ப் அரசு ஒதுக்குமா என்ற கவலையையும் சுனிதா பகிர்ந்து கொண்டார்.
அல்லாஹு அக்பர் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் நாடினால் இவர்களை நேர்வழி காட்டுவான்..! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.22 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய பின்னர் புனித ரமழான் நோன்பை பற்றியோ அல்லது குர்ஆனின் மகத்துவத்தை பற்றியோ ஊடகங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவித்துள்ளாரா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவொரு ஊடக அறிக்கையும் எமக்கு கிடைக்கவில்லை.
இருப்பினும் நாம் இது தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்ட போது இந்திய உண்மை கண்டறியும் நிறுவனமான Newsmeter இல் சுனிதா வில்லியம்ஸ் குர்ஆன் தொடர்பில் BBC செய்திச் சேவைக்கு தெரிவித்தாக பகிரப்படும் தகவல் போலியான தகவல் என கண்டறிந்து அறிக்கையிட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இதனை பார்க்கும் போது மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவானது மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் பகிரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
எனினும் நாம் சுனிதா வில்லியம்ஸ் தனது விண்வெளிப் பயணத்தின் பின்னர் குர்ஆன் தொடர்பில் ஏதேனும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளாரா என அவரின் x தளத்தில் ஆராய்ந்த போது அதில் அவ்வாறான எந்தவொரு கருத்துக்களும் பகிரப்பட்டிருக்கவில்லை.
மேலும் நாம் இது குறித்து நாசாவின் இணையதளத்தில் ஆராய்ந்த போது அங்கும் அவர் தெரிவித்தாக எந்த கருத்துக்களும் பதிவிடப்பட்டிருக்கவில்லை.
பல ஊடக அறிக்கைகளின்படி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அடுத்த 45 நாட்கள் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் மறுவாழ்வு சிகிச்சை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.Link | Link |Link
விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பதால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள்
விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பதால், மனித உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக, எலும்புகள் மற்றும் தசைகள் சுருங்குதல், திசுக்களில் பருமன் குறைதல் போன்றவை ஏற்படலாம். இந்த மாற்றங்கள் நேரடியாக முகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் விண்வெளி பயணம்
கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர்.
அவர்களின் திட்டம் 8 நாட்கள் அங்கு இருந்து ஆய்வுகளை மேற்கொள்வது. ஆனால் ஸ்டார்லைனரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே சுனிதா, வில்மோர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
8 நாட்கள் பயணம் 9 மாதங்களானது. இந்த 286 நாட்களில் சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் 121 மில்லியன் ஸ்டாட்யூட் மைல் பயணித்துள்ளனர். ஒரு ஸ்டாட்யூட் மைல் என்பது கிட்டத்தட்ட 5280 அடி எனக் கொள்ளலாம்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் தற்போதைய நிலை
தொடர்ச்சியாக பல மாதங்கள் விண்வெளியில் இருந்துவிட்டதால் கை, கால் செயல்பாடுகளில் சிரமம், தலை சுற்றல், தசை சிதைவு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு விண்வெளி வீரர்கள் ஆளாகக்கூடும் என்பதால் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் ஹூஸ்டனில் உள்ள நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு தினங்களில் குடும்பத்தினரை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் 45 நாட்கள் வரை அந்த மருத்துவமனையிலேயே தங்கி மறுவாழ்வு சிகிச்சைகளைப் பெறுவர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருக்கும் போது குர்ஆனை படித்ததாகவும், புனித ரமழான் நோன்பினால் தான் விண்வெளியில் குறைவாக உண்பதற்கு கற்றுக்கொண்டதாகவும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது என்பதுடன், அவர் விண்வெளியில் இருந்து வந்த பிறகு ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை
மேலும் அவர் தற்போது ஹூஸ்டனில் உள்ள நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுவாழ்வு சிகிச்சை பெற்றுவருவதுடன் சுனிதா பூமிக்கு திரும்பிய பின்னர் இதுவரை எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் பங்கேற்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:விண்வெளியில் இருக்கும் போது தினமும் குர்ஆனைப் படித்ததாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தாரா?
Fact Check By: suji shabeedharanResult: False
