உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை!

Local Government Election 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நிதிக் கட்டுப்பாடுகள், மற்றும் தேர்தலுக்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதில் இருந்த சவால்கள், அரசியல் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பல முறை இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

இருப்பினும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உயர் நீதிமன்றத்தினால் வாக்களிப்பைத் தாமதப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக அறிவித்ததன் பின்னர், 2025 மார்ச் 17 முதல் 20, ஆம் திகதி வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதற்கமைய தற்போது நாளை (2025.05.06) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் தேர்வுகள்?

கலப்பு விகிதாசார முறையின் கீழ் நடைபெறும் இந்த ஆண்டுத் தேர்தலில், 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் (கல்முனை நகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை நீங்கலாக) உட்பட 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 8,297 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கலப்பு விகிதாசார முறை உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் என்றால் என்ன?

ஏதேனும் ஒரு உள்ளூர் அதிகார சபையில் வட்டார மட்டத்திலும், பொது ஆவணத்தின் மூலமாகவும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படும் முறை கலப்பு விகிதாசார முறையாகும்.  இதன் பிரகாரம் 2017.10.12 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க பிரதேச சபைகள் திருத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் இவற்றின் எண்ணிக்கை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • வட்டார மட்டத்தில்                         –       60%
  • விகிதாசார அடிப்படையில்       –       40%

உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் மற்றும் வட்டாரங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?

சனத்தொகை மற்றும் நிலத்தின் அளவு என்பன தொடர்பாகவும், இன ரீதியான அடிப்படையிலும் குறித்த விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு  தற்போது நாட்டின் சகல உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் உரிய வட்டாரங்கள் யாதெனத் தீர்மானித்து எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால்  2015.08.21 ஆந் திகதிய 1928/26 ஆம் இலக்க மற்றும் 2017.02.17 ஆந் திகதிய 2006/44 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அத்தீர்மானங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் உள்ளூர் அதிகார சபைகள் பின்வருமாறு இரண்டு வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • ஒருமை வட்டாரம்
  • பன்மை வட்டாரம்

 நாட்டின் சகல உள்ளூர் அதிகார சபைகளுக்கும் உரிய வட்டாரங்களினதும்,  உறுப்பினர்களினதும் எண்ணிக்கை கீழே காட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்தில் விகிதாசார முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?

அனைத்து உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் தேர்ந்தெடுத்து நியமிக்கப்படவிருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை நூற்றுக்கு 60 வீதம் எனக் கருத்திற் கொண்டு, எஞ்சிய நூற்றுக்கு 40 வீதம் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கை எனக் கணிப்பிடப்படுகின்றது.  இவ்விரண்டினதும் கூட்டுத்தொகை குறித்த உள்ளூர் அதிகார சபையின் உறுப்பினர் எண்ணிக்கையாகும்.

உதாரணம்-:

A என்னும் பிரதேச சபை

வட்டார அடிப்படையில் நூற்றுக்கு 60 வீதக் கணிப்பீடு

ஒருமை வட்டாரம்             14
02 உறுப்பினர்களைக் கொண்ட பன்மை வட்டாரம்01
வட்டாரங்களின் கூட்டுத்தொகை15
ஒருமை வட்டார அபேட்சகர்கள்14
பன்மை வட்டார அபேட்சகர்கள்02
அபேட்சகர்களின் எண்ணிக்கை16
இதன் பிரகாரம் வட்டார அடிப்படையில் நூற்றுக்கு 60 வீதம்16


விகிதாசார அடிப்படையில் நூற்றுக்கு 40 வீதக் கணிப்பீடு

முழு வட்டாரத்திற்கும் வட்டார அடிப்படையிலான அபேட்சகர்களின் எண்ணிக்கை     x 40/60

=  16 x 40/60

=   10.66 ( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாது) முழு எண்ணிக்கையை         கணக்கிடவும்.

அதன் பிரகாரம் விகிதாசார அடிப்படையிலான நூற்றுக்கு 40% =10

இதன் பிரகாரம்  A  என்னும் பிரதேச சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை (16+10) = 26 

 

வாக்குச் சீட்டின் தோற்றம் எவ்வாறு அமைந்திருக்கும்?


தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் பெயர்களும் சிங்கள மொழி அகராதியின் பிரகாரம் ஒழுங்குபடுத்தப்பட்டு வாக்குச் சீட்டில் மும்மொழிகளிலும் குறிப்பிடப்படுவதுடன், அதற்குக் கீழே தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுக்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட இலக்கங்களின் பிரகாரம் சுயேட்சைக் குழுக்களது இலக்கங்களுடன் குறிப்பிடப்படும்.

வாக்குச் சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு முன்பாகவும், சுயேட்சைக் குழுக்களுக்கு முன்பாகவும் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் அச்சிடப்படுவதுடன், அச்சின்னங்களுக்கு முன்பாக புள்ளடி இடுவதற்கான வெற்றுக் கூடும் அச்சிடப்படும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு வட்டார மட்டத்திலும் விகிதாசார மட்டத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள அட்டவணையின் கீழ் கட்சிகளது, சுயேட்சைக் குழுக்களது வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வாக்காளர்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையுடன் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். 

இது தவிர குறித்த அட்டவணையில் உள்ளபடி கட்சிகளது, சுயேட்சைக் குழுக்களது வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு குறித்த வாக்களிப்பு நிலையங்களின்  காட்சிப்படுத்தப்படும். 

இதன் பிரகாரம் வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்படாது விடினும், தமது வாக்கினை அளிக்கவிருக்கும் கட்சியின் அல்லது குழுவின் வேட்பாளர் தொடர்பாகவும், மேற்குறிப்பிட்ட அட்டவணையின் மூலம் தாம் விரும்பிய வேட்பாளர் யாரென்பதனையும் அறிந்து கொள்ள முடியும்.

வாக்கெண்ணும் நிலையங்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ளப்படும்?

ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமிடத்து, அதே வாக்களிப்பு நிலையத்தில் வாக்கெண்ணல் நடாத்தப்படும். ஒரு வட்டாரத்தினுள் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைந்திருக்குமிடத்து, தெரிவத்தாட்சி அலுவலரால் தீர்மானிக்கபடுகின்ற ஒரு வாக்களிப்பு நிலையத்திலோ, அல்லது வாக்களிப்பு நிலையங்களிலோ வாக்குகள் எண்ணப்படும்.

இந்த தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பது எவ்வாறு?


இந்த தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படும் போது. முக்கியமாக நான்கு விடயங்கள் சம்பந்தமாக கவனத்தைச் செலுத்துதல் வேண்டும்.

  • ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
  • பன்மை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
  • விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
  • பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

இவற்றை உதாரணங்கள் மூலம் விளக்குவதனால் புரிந்து கொள்வதற்கு இலகுவாக அமையும்.

உதாரணம்-:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள யூ என்னும் பிரதேச சபை ஒருமை வட்டார மட்டத்திலான 14 வட்டாரங்களையும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட பன்மை வட்டார மட்டத்திலான 01 வட்டாரத்தையூம் கொண்டுள்ளது.  இந்த பிரதேச சபைக்காக X, Y, Z என்னும் மூன்று அரசியற் கட்சிகள் போட்டியிடவுள்ளன என நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

I. ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

ஒருமை வட்டார மட்டத்திலான வட்டாரத்தின் சகல வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் குறித்த வட்டாரத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்

இதன் பிரகாரம் மேலே உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளவாறு x கட்சியானது 1,2,4,6,7,8,9,10,11,12,14 ஆகிய ஒருமை வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளதனால், அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த வேட்பாளர்கள் அவ்வட்டாரங்களின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதுடன், Y கட்சி 3,5,13 ஆகிய வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளதனால் அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த வேட்பாளர்கள் அவ்வட்டாரங்களின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர். Z கட்சி எதுவித வட்டாரத்திலும் வெற்றியீட்டாத காரணத்தினால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள்.

II. பன்மை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

பன்மை வட்டாரமொன்றில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியற் கட்சி அல்லது சுயேட்சைக் குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவர் அல்லது மூவர் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதன் பிரகாரம் மேலே உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளவாறு X கட்சியானது 15 என்னும் பன்மை வட்டாரத்தில் வெற்றியீட்டியூள்ளதனால், அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த வேட்பாளர்கள் இருவரும் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர்.

III. விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

உள்ளுர் அதிகார சபை ஒன்றின் நிருவாகப் பிரதேசத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சகல அரசியற் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் மொத்தக் கூட்டுத்தொகையை குறித்த உள்ளுர் அதிகார சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு வரும் சராசரி அளவு தீர்க்கமான மதிப்பு ஆகும்.

இந்தத் தீர்க்கமான அளவினால் ஒவ்வொரு அரசியற் கட்சியும், சுயேட்சைக் குழுவும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் பிரிக்கப்படும் பொழுது குறித்த அரசியற் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு உரிய முழு உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து அவர்கள் வட்டார மட்டத்தில் பெற்றுக்கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கழித்து வரும் எஞ்சிய எண்ணிக்கை குறித்த ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேட்சைக் குழுவுக்கும் உரிய விகிதாசார அட்டவணைக்குரிய உறுப்பினர் எண்ணிக்கையாகக் கருதப்படும்.  

ஏதேனுமொரு அரசியற் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு உரிய குறித்த எஞ்சி வரும் எண்ணிக்கை ஒற்றை மதிப்பெண்ணாக இருப்பின், அதாவது விகிதாசார முறைக்கு உரிய எண்ணிக்கையிலும் விட வட்டார மட்டத்தில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த மேலதிக எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளுர் அதிகார சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகும். (Overhang)

 இதன் பிரகாரம் மேலே குறிப்பிடப்பட்ட உதாரணத்தின் அடிப்படையில், 

வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை57540
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை26
      சராசரி மதிப்பு 57540 /26
2213 

IV. பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

குறித்த உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்திற்காகப் போட்டியிடும் அனைத்து அரசியற் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையின் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பினும், கட்சிகளது மூன்று உறுப்பினர்கள் அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் குறைவாக இருப்பினும் அவற்றைக் கழித்து எஞ்சியுள்ள அதிகப்படியான வாக்குகள் பெற்ற உறுப்பினர்கள் குறித்த உள்ளூர் அதிகார சபைக்குத் தெரிவு செய்யப்படுவர். (25 சதவீதமான எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கை) பிரிக்கப்பட்டு வரும் சராசரி எண்ணிக்கையால் குறித்த கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பிரித்து வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

உதாரணம் –  மேலே குறிப்பிடப்பட்ட A என்னும் பிரதேச சபை தொடர்பான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் சதவீதமும், தொகுதிகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு அமையும்.

இதன் பிரகாரம் பெண் உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படும் போது X, Y  ஆகிய இரண்டு கட்சிகளும் பெற்றுக் கொண்ட வாக்குகள் மாத்திரமே கணிக்கப்படும்

இதன் அடிப்படையில் X, Y  ஆகிய கட்சிகள்; பெற்றுக் கொண்ட வாக்குகள் வாக்குகளின் கூட்டுத்தொகை (27938+23274)=51212

25 சதவீத சமான உறுப்பினர்கள் எண்ணிக்கை (26/4)   
=6.5
சராசரி (51212 / 6.5)  =7878.76
X கட்சியினால் நியமிக்கும் பெண் உறுப்பினர்கள் (27938 / 7878.76)=3.53 ( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாத முழு எண்)
Y கட்சியினால் நியமிக்கும் பெண் உறுப்பினர்கள் (23274 / 7878.76)=2.952 ( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாத முழு எண்)

வேட்புமனு தாக்கல் செய்துள்ள கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள்

  • அரசியல் கட்சிகள் – 49
  • சுயேட்சை குழுக்கள் – 257
  • வேட்பாளர்கள் எண்ணிக்கை – 75,589

தவிசாளர் / துணைத் தவிசாளர் அல்லது முதல்வர் /பிரதி முதல்வர் ஆகியோர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர்

ஏதேனுமொரு அரசியற் கட்சி அல்லது சுயேசட்சைக் குழு குறித்த உள்ளூர் அதிகார சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 50 சதவீதமானவற்றில் வெற்றி பெற்றிருந்தால் அவ்வரசியற் கட்சியின் செயலாளருக்கு அல்லது சுயேட்சைக் குழுத் தலைவருக்கு இப்பதவி நியமனங்கள் தொடர்பாக தீர்மானிக்க முடியும்.

எந்தவொரு அரசியற் கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் குறித்த உள்ளூர் அதிகார சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 50 சதவீதமான எண்ணிக்கை பெறத் தவறியிருந்தால் குறித்த உள்ளூர் அதிகார சபையின் ஆரம்பக் கூட்டத்தொடரின் போது அங்கு சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களிடையே நடாத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் மேற்படி நியமனங்கள் செய்யப்படலாம்.

முக்கிய தினங்கள்

தபால் மூல வாக்குப்பதிவானது ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. பிரதான வாக்களிப்பு  நளை (2025.05.06) நடைபெறவுள்ளது. இதன் பின்னர் வெற்றியீட்டிய வேட்பாளர்கள் 2025 ஜூன் 2 ஆம் திகதி ஆட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை

தேர்தலை நடத்துவதற்கு இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு பொறுப்பாகவுள்ளது. தேர்தல் நாளில் பஃப்ரல் போன்ற சுயாதீன அமைப்புகள் 160 நீண்டகால கண்காணிப்பாளர்களையும், 3,000 க்கும் மேற்பட்ட குறுகிய கால கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கும் திட்டமிட்டுள்ளன. சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கண்காணிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது, இதில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் என்பனவும் அடங்குகின்றன. மேலும், தேர்தலுக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களின் உண்மையை கண்டறிந்து அவற்றை, சமூக ஊடக பயனர்களுக்கு துல்லியமாக தெரிவிப்பதற்கும் Factcrescendo Sri Lanka குழு தேர்தல் ஆணையக்குழுவுடன் இணைந்து செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் என்ன?

கழிவு முகாமைத்துவம், வீதி புணரமைபுகள், நகர திட்டமிடல், பொது சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி போன்ற முக்கியமான சேவைகளுக்கு உள்ளூர் அதிகார சபையின் அதிகாரிகள் பொறுப்பாவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில், இந்த நிறுவனங்கள் நிர்வாக ஆணையர்களால் நடத்தப்படுகின்றன, இது பொது பொறுப்புணர்வை கட்டுப்படுத்துகிறது. இந்தத் தேர்தல் பொதுமக்களுக்கு அடிமட்ட அளவில் ஜனநாயக நிர்வாகத்தை மீட்டெடுக்க வாய்ப்பளிக்கிறது.

எவ்வாறு வாக்களிப்பது?

ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கை மாத்திரமே அளிக்கமுடியும் என்பதனால் அவர்களுக்கு ஒரு வாக்குச்சீட்டு மாத்திரமே வழங்கப்படும்

வாக்குச்சீட்டில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர் இடம்பெற்றிருப்பதுடன், சுயேட்சைக் குழுவின் இலட்சிணைகள் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும்.

வாக்களிப்பதற்காக ஒரேயொரு புள்ளடியை (x) மாத்திரமே இட வேண்டும்.

நீங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சியின் பெயருக்கோ அல்லது சுயேட்சை குழுவின் இலட்சிணைக்கோ எதிரில் புள்ளடியை மாத்திரமே இடவேண்டும்.

வாக்குச்சீட்டில் வேறு அடையாளங்களை இடுதல் அல்லது எழுத்துக்களினால் எழுதுதல் என்பவற்றை தவிர்க்க வேண்டும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

புள்ளடிளை தவிர்த்து வேறு அடையாளங்களை இடுவதனால் உங்கள் வாக்கு செல்லுபடியற்ற வாக்காகவே கருதப்படும்.

உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன?

உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும்போது, ​​அனைத்து வாக்காளர்களும் பின்வரும் அடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் சென்று, சரிபார்ப்புக்காக வாக்களிப்பு நிலையத்திலுள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள்:

  • ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை (பழைய அல்லது புதிய அடையாள அட்டை).
  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  • செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
  • ஓய்வூதியத் துறையால் வழங்கப்பட்ட பொதுப் பணி ஓய்வு அடையாள அட்டை (பழைய அல்லது புதிய மின்-ஐடி).
  • வயது வந்தோருக்கான அடையாள அட்டை (பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டது)
  • நபர்களைப் பதிவு செய்யும் துறையால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதம்
  • தேர்தல் ஆணைக்குழுவால்  வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை.
  • மோட்டார் போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தற்காலிக ஓட்டுநர் உரிமம்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் விடுமுறை பெறுவது எப்படி?

பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சம்பள இழப்பு அல்லது தனிப்பட்ட விடுப்புகள் என்பன இழக்கப்படாமல் உள்ளுராட்சித் தேர்தல்களில் வாக்களிக்க விடுமுறை வழங்கப்படும்.

இதற்காக, பணியிடத்திலிருந்து வாக்களிக்கும் நிலையத்திற்கு உள்ள தூரத்தைப் பொறுத்து வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச விடுமுறை காலம் பின்வருமாறு.

தேர்தலுக்காக வழங்கப்படும் பாடசாலை விடுமுறை

நாளை (2025.05.06) நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் 7 ஆம் திகதி திறக்கப்படும்.

பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் தெர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தல்.

அமைதி காலம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட காலம் கடந்த 2025.05.03 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.

தேர்தல் சட்டத்தின்படி, அனைத்து பிரச்சாரங்களும் வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் நிறுத்தப்பட வேண்டும்.

மூலம் – தேர்தல்கள் ஆணைக்குழுஎங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *