
உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசன் நதிகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து காணொளியொன்றி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
“உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசன் நதிகளில் நீந்தி போவதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்!
ஆத்தாடி என்னா பெருசு”
என தெரிவிக்கப்பட்டு அந்த காணொளியானது கடந்த 2025.05.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அனகோண்டாக்கள் உலகின் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்று என்பதுவும், அவை அமேசான் காடுகளில் தான் பெரும்பாலும் வசிக்கின்றன என்பதுவும் அறிந்த விடயமே. பெரு, பொலிவியா, பிரேசில் போன்ற நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் இந்த மழைக்காடுகள், எண்ணற்ற உயிரினங்களின் புகலிடமாகத் திகழ்கின்றன.
தற்போது பகிரப்படும் இந்த காணொளியில் உள்ள பாம்பின் உண்மையான நீளம் மற்றும் எடை குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. ஹெலிகொப்டரிலிருந்து பார்க்கும் போது இவ்வளவு பெரியதாகத் தெரிந்தால், அதன் உண்மையான அளவு என்னவாக இருக்கும் என்ற ஆச்சரியமும், அதே சமயம் இது வெறும் AI காணொளியாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகமும் மக்களிடையே நிலவுகிறது.
அமேசான் காடுகள் இன்றும் எண்ணற்ற மர்மங்களையும், கண்டுபிடிக்கப்படாத உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அந்தவகையில் உண்மையில் உலகின் மிகப்பெரிய அனகோண்டா அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்பில் ஏதேனும் செய்திகள் சர்வேதச மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது, அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
எனினும் Times Of India இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட காணொளி உண்மையா என்பது தொடர்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதில் இந்த காணொளியை பலர் உண்மை என நினைத்தாலும் அனேகமானோர் அது செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது Deepfake தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என தெரிவிப்பதாகவும்.
அனகோண்டா பாம்புகள் அமேசன் காடுகளின் ஆழமான பகுதிகளிலேயே வாழ்வதாகவும் இவ்வாறான இடங்களில் அவை தென்படுவது சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது எனற் விதத்திலே அந்த அறிக்கை அமைந்திருந்தது.
அத்துடன் உண்மையில் இந்த காணொளியானது எந்த ஆராய்ச்சிக் குழுவினரால் எடுக்கப்பட்டது மற்றும் இதனை உறுதிப்படுத்தியவர்கள், இந்த காணொளியை படம் பிடித்தவர்கள் என்ற எந்தவித தகவல்களும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
கடந்த ஆண்டு National Geographic , நடிகர் Will Smith உடன் இணைந்து ஈக்வடோரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது 26 அடி நீளமும், சுமார் 500 கிலோ எடையும் கொண்ட ஒரு இராட்சத வடபகுதி பச்சை அனகோண்டாவைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருந்தது. இது, அமேசானில் பிரம்மாண்ட உயிரினங்கள் இருப்பதற்கான சான்றாகவும் அமைந்தது. Link
மேலும் அந்த நாட்களில் இது ஊடகங்களில் பெரும் தலைப்புச் செய்தியாகவே பேசப்பட்டது என கூறலாம்.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான Bryan Fry இன் கூற்றுப்படி, உலகில் இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட அனகோண்டாக்கலில் இதுவே மிகப்பெரியதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இயற்கையின் அதிசயங்கள் பற்றி வெளியிடும் பிரபல்யமான இணையதளமான National Geographic இல் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான அனகோண்டா தொடர்பில் ஏதேனும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறன எந்த அறிக்கைகளும் அதில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் நாம் இது தொடர்பில் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் அமேசன் காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிகப்பெரிய அனகோண்டா என தெரிவித்தகப்பட்ட மற்றுமொரு காணொளியையும் எம்மால் காணமுடிந்தது. அதில் Invideo AI என்ற லோகோ இருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் இந்த காணொளி பகிரப்பட்ட Mohsin Khan Mk என்ற பேஸ்புக் பக்கத்தை நாம் ஆய்வு செய்த போது அதில் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட பல்வேறு காணொளிகள் காணப்பட்டன, அவற்றில் அமேசன் நதிகளில் நீந்திச் செல்லும் இராட்சத அனகோண்டாக்கள் என தெரிவிக்கப்பட்டு பதிவேற்றப்பட்டிருந்த பல்வேறு AI காணொளிகளும் உள்ளடங்குகின்றன.
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த காணொளியும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, நாம் குறித்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறி தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது உறுதியானது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே மேற்குறிப்பிட்ட எமது ஆய்வின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசன் நதிகளில் நீந்தி செலவதனை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவித்து பகிரப்பட்ட காணொளியான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இராட்சத அனகோண்டா அமேசன் நதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?
Written By: Suji ShabeedhranResult: False
