பயிற்றுவிப்பாளரை ஓர்க்கா தாக்கிய சம்பவம் உண்மையா?

False சர்வதேசம் | International

Pacific Blue Marine Park இன் பயிற்றுவிப்பாளரான Jessica Radcliffe திமிங்கில இனத்தைச் சேர்ந்த ஓர்க்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விட்டதாக தெரிவித்து புகைப்படத்துடனான பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் இறுதிக் காட்சிகள் பார்வையாளர்களை நடுங்க வைத்தன: பசிபிக் ப்ளூ மரைன் பூங்காவின் அனுபவமிக்க பயிற்சியாளரான ஜெசிகா ராட்க்ளிஃப், எல்லாம் சோகமாக மாறுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, சிரித்துக் கொண்டே கூட்டத்தை நோக்கி கையசைத்தார். இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், கே!ல்லர் திமிங்கலம் திடீரென்று தனது நடத்தையை மாற்றியது, அடுத்து நடந்தது முழு அரங்கத்தையும் திகைக்க வைத்தது. என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் கடந்த 2025.08.01 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது குறித்து நாம் தேடுதலில் ஈடுப்பட்ட போது இவ்வாறானதொரு பயங்கர சம்பவம் உண்மையில் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கம் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்தவொரு செய்தியையும் எம்மால் காணமுடியவில்லை.

அத்துடன் ஜசிக்கா ரட்கிளிப் எனும் ஒரு கடவாழ் உயிரினப் பயிற்றுவிப்பாளர் இருந்ததாகவே அல்லது அவருக்கு இது போன்றதொரு ஆபத்து திமிங்கிலத்தினால் ஏற்பட்டதாகவோ எந்தவொரு நம்பத்தகுந்த அறிக்கைகளோ ஆதாரங்களோ கிடைக்கவில்லை.

மேலும் நாம் இது குறித்து கூகுளில் ஆராய்ந்த போது எந்தவொரு புலனாய்வு அறிக்கையோ, சட்ட அறிக்கைகளோ, உண்மையான நிறுவனங்கள் அல்லது அதிகாரப்பூர்வ பதிவுகளோ இருக்கவில்லலை. Link

இது தொடர்பான சரிபார்க்கப்பட்ட பதிவுகளை நாம் ஆராயும் போது திமிங்கில வகையைச் சார்ந்த ஓர்க்காக்களின் தாக்குதல் தொடர்பில்  , விக்கிபீடியா பக்கத்தில் இருந்த orca attacks அறிக்கையில்  ஜசிக்கா ரட்கிளிப் என்ற பயிற்றுவிப்பாளர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்தோம். 

அதனடிப்படையில் இந்த தாக்குதல் சம்பவம் ஒரு கற்பனை கதை என்பதற்கு இந்த அறிக்கை மேலும் வலுசேர்க்கின்றது.  

இருப்பினும், Jessica Radcliffe  என்ற பெயரில் பரவும் சில காணொளிகளில், உண்மையில் ஓர்க்கா தாக்குதல்களின் போது எடுக்கப்பட்ட வெவ்வேறு காணொளிகளின் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளமையை அறியமுடிந்தது.

அதில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காட்சியானது, 2010 ஆம் ஆண்டு SeaWorld பயிற்றுவிப்பாளர் Dawn Brancheau மீதான தாக்குதலின் காட்சிகளும் அடங்குகின்றன, மேலும் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நீர் விளையாட்டு நிகழ்ச்சியொன்றின் போது கசட்கா என்ற ஓர்க்காவால் நீருக்கடியில் இழுத்துச்செல்ப்பட்ட பயிற்றுவிப்பாளர் கென் பீட்டர்ஸின் பழைய காட்சிகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த சந்தர்ப்பத்தில் பீட்டர்ஸுக்கு காயங்கள் ஏற்பட்டாலும், பதட்டமான போராட்டத்திற்குப் பிறகு அவர் உயிர் தப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

Pacific Blue Marine Park உண்மையில் இருக்கின்றதா?

Pacific Blue Marine Park உண்மையில் இருகின்றதா என நாம் ஆராய்ந்த போது குறிப்பிட்டு இந்த பெயரிலான பூங்காக்கள் தொடர்பான தகவல்களை அறியமுடியவில்லை. 

ஓர்காக்கள் நிஜ வாழ்க்கையில் மனிதர்களைத் தாக்குமா?

கொலையாளி திமிங்கலங்கள் (killer whales) என்றும் அழைக்கப்படும் ஓர்காக்கள் கடலில் முதன்மை வேட்டை மிருகமாக பார்க்கப்படுகிறது, ஆனால் ஓர்க்கா ஒரு மனிதனைக் கொன்றதாக ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை. ஓர்காக்கள் மனிதர்கள் மீது ஆர்வத்தைக் காட்டியுள்ளன, ஆனால் மனிதர்களை அவை தவிர்க்கின்றன. நிபுணர்கள் அவற்றை மிகவும் புத்திசாலி மற்றும் எச்சரிக்கையான விலங்குகளாகக் கருதுகின்றனர்.

ஓர்காக்கள் பயங்கரமாக வேட்டை விலங்காக கருதப்பட்டாலும், ஓர்காக்கள் மனிதர்களைக் கொன்றதாக ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை (Naturaliste Charters) இருப்பினும், மனிதர்கள் அவற்றினால் சிறைப்பிடிக்கப்பட்ட பல துயர்  சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சீவேர்ல்ட் ஓர்காவான டிலிகம், 2010 இல் பயிற்றுவிப்பாளர் டான் பிராஞ்சியோ உட்பட மூன்று இறப்பு சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. (BBC,CNN,NBC)

Keto  (Loro Parque), நூட்கா IV, மற்றும் ஹைடா II (Sealand of the Pacific) போன்ற பிற ஓர்காக்களும் பயிற்சியின் போது பல பயங்கரமான சம்பவங்களுடன் தொடர்புடையவை என கூறப்படுகின்றது. Link | Link

சிறைபிடிப்பு தொடர்பான மன அழுத்தம் மற்றும் பயிற்சி நடைமுறைகள் என்பனவே இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னணியாக காணப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.Link 

இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, சீவேர்ல்ட் போன்ற பூங்காக்கள் கொள்கைகளை மாற்றி, பயிற்றுவிப்பாளர் தொடர்புகளை மட்டுப்படுத்தி, ஓர்க்கா சிறைபிடிப்பு நெறிமுறைகள் குறித்த உலகளாவிய விவாதங்களையும் தூண்டியுள்ளன. 

ஓர்காக்கள் மனிதர்களை உணவாக உட்கொள்ளுமா?

ஓர்காக்கள் மனிதர்களை உண்பதில்லை. அவற்றின் இயற்கையான உணவில் மீன், ஸ்க்விட், சீல்கள் மற்றும் திமிங்கலங்கள் கூட அடங்கும், மேலும் மனிதர்கள் அவற்றின் உணவாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பதற்கான உயிரியல் அல்லது நடத்தை சான்றுகள் எதுவும் இல்லை.

இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் ஓர்காக்கள் மீதான சிறைபிடிப்புகளுடனான உளவியல் தாக்கத்துடன் தொடர்புடையவையே தவிர இவை மனிதர்களை இரையாக கருதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அல்ல எனவும் கூறப்படுகின்றது. Link

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் தொடர்பான பின்னணி

குறித்த படங்கள் தொடர்பில் நாம் ஆராயும் போது அவற்றில் ஒரு பயிற்றுவிப்பாளர் அதனுடன் இருக்கம் புகைப்படம் உண்மை எனினும் அந்த பயிற்றுவிப்பாளர் Jessica Radcliffe  தான் என்பதனை உறுதியாக கூற முடியாது. மேலும் ஏனைய இரு படங்களும் அசாதாரமாக உள்ளது, காரணம் ஒருவரை தாக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றுவதை விடுத்து கமராக்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவை அந்த புகைப்படமானது எடிட் செய்யப்பட்டவை என்பதற்கான ஆதாரங்களை காட்டுகின்றன. 

மேலும் இந்த புகைப்படங்கள் உண்மையானவை என்பதனை நிரூபிப்பதற்கு இதுவரை எந்தவிதமான நம்பத்தகுந்த ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை என்பதுவும் எமது ஆய்வுகளின் கண்டறியப்பட்டது.

எமது சமூகவலைத்தள பக்கங்களை பின் தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இந்த சம்பவமனது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்பதுடன் Jessica Radcliffe என்ற ஒரு பயிற்றுவிப்பாளர் உண்மையில் இருப்பதாகவோ அல்லது இது போன்ற சம்பவம் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த புகைப்படங்கள் சில யாதார்த்தமற்ற காட்சிகளை பிரதிப்பளிப்பதுடன்  அவை டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டுள்ளமையும் தெளிவாகின்றது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:பயிற்றுவிப்பாளரை ஓர்க்கா தாக்கிய சம்பவம் உண்மையா?

Fact Check By: Suji Shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *