
கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயப்படுத்தல் பணிகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, சமூகத்தில் அந்த விடயம் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.
அந்தவகையில் தற்போதைய அரசாங்கம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்துவதாக அறிவித்திருந்தது.
எனவே அந்தக் கூற்றின் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
பிரதான ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நவீனமயப்படுத்தப்படும் கொழும்பு மத்திய நிலையம் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகியிருந்தது.
எனவே எமது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விடயம் தொடர்பில் நாம் ஆய்வை மேற்கொண்டோம்.
Explainer (விளக்கமளித்தல்)
“Clean Sri Lanka” திட்டத்தின ஒரு பகுதியாக கொழும்பு மத்திய பஸ் நிலைய நவீனமயமாக்கல் திட்டம் செப்டம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
அதில் இந்த நவீனமயமாக்கல் திட்டம் 425 மில்லியன் ரூபா நிதியில் செயல்படுத்தப்படுகிறது என்றும், இந்த முனையத்தை முற்றிலுமாக மூடிவிட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மற்றும் கவர்ச்சிகரமான பஸ் நிலையமாக முழுமையாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பெரிய அளவில் மேம்படுத்தப்படுகிறது என்றும், 2026 ஏப்ரல் மாதம் சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் இந்த திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.
60 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பு மத்திய பஸ் நிலையம் புதுப்பிக்கப்படுகிறது என்று பிரதான ஊடகங்களில் செய்தி வெளியிட்டதால், இந்தப் பஸ் நிலையம் இதற்கு முன்பு புதுப்பிக்கப்படவில்லையா என்பது குறித்து சமூகத்தில் ஒரு பாரிய விவாதம் எழுந்தது.
கொழும்பு மத்திய பஸ் நிலையம் 2009 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது
2009 ஆம் ஆண்டில், அதாவது 16 வருடங்களுக்கு முன்பு, கொழும்பு மத்திய பஸ் நிலையம் புனரமைக்கப்பட்டமை தொடர்பில் சிங்கள பத்திரிகையான ‘லங்காதீப’ பத்திரிகையில் ஒரு செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அந்தச் செய்திக் கட்டுரை சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது.
அந்தச் செய்தி அறிக்கைகளின்படி, கோட்டை மத்திய பஸ் நிலையம், இலங்கை போக்குவரத்துச் சபையின் நிதியை செலவிடாமல், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்புகளுடன் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில், புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளுக்கான இருக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள் உட்பட கட்டிடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த அனைத்து கடைகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கபப்பட்டிருந்தது.
குறித்த செய்திக் கட்டுரை பின்வருமாறு

இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியான மற்றொரு செய்தி அறிக்கை பின்வருமாறு

அதேபோன்று நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை பஸ் நிலையத்தின் சில புகைப்படங்கள் மற்றும் Ada Derana வினால் இந்த திட்டத்திற்காக தொலைக்காட்சிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை தொடர்பிலும் அறிக்கையிப்பட்டிருந்தன. Link



டலஸ் அழகப்பெருமவின் ஊடக ஒருங்கிணைப்பாளர்
இந்த விடயம் தொடர்பில் அப்போதைய போக்குவரத்து அமைச்சராக செயற்பட்ட டலஸ் அழகப்பெருமவின் ஊடக ஒருங்கிணைப்பாளரிடமும் நாம் வினவினோம். கொழும்பு மத்திய பஸ் நிலையம் 2009 ஆம் ஆண்டு பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்தத் திட்டத்திற்கான முன்முயற்சியை மதுர விதானகே எடுத்தார் என்றும், அவர் பின்னர் கோட்டே மேயராகப் பதவியேற்று, சிறிது காலம் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது, மதுர விதானகே Hammer BTL என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், மத்திய பஸ் நிலையத்தில் விளம்பர இடம் மற்றும் உணவகங்களை வாடகைக்கு எடுத்து இந்த திட்டத்திற்கான செலவுகளை அதன் மூலம் ஈடுசெய்ததாகவும் டலஸ் அழகப்பெருமவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் பஸ் நிலையத்தில் ஏற்கனவே உள்ள கட்டிடங்களின் கட்டுமானம் மாற்றப்படவில்லை, என்றும் அவற்றிற்கு எந்த சேதங்களும் ஏற்படாதவாறே இந்த புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய பஸ் நிலைய வளாகம் மேற்கூறிய நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும், அவர்கள் இந்தப் பஸ் நிலையத்தைப் புனரமைத்து, பராமரித்து, இலாபம் ஈட்டியதாகவும் அவர் கூறினார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து டலஸ் அழகப்பெரும இராஜினாமா செய்ய வேண்டியிருந்ததால், அங்கு பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக மதுர விதானகே வழங்கிய விளக்கம் பின்வருமாறு
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக தனி பகுதி, தொலைக்காட்சிகள், வசதியான இருக்கைகள், கட்டிடத்திற்கு வர்ணம் தீட்டுதல் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்டவை இங்கு புனரமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் தற்போதைய நிலையை (தற்போதை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு முன்னர்) ஊடகங்கள் பின்வருமாறு செய்தி வெளியிட்டன.
Clean Sri Lanka திட்டத்தின் பணிப்பாளர்
60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக புனரமைக்கப்படுகின்றது என்று கூறப்பட்டமை தொடர்பில் Clean Sri Lanka திட்டத்தின் பணிப்பாளரிடம் வினவிய போது, இதற்கு முன்பு இல்லாத புதிய நிறுவல்களை உள்ளடக்கியதால், இந்தத் திட்டம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முழுமையான புனரமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
இது குறித்த மேலதிக தகவல்களை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன வெளியிட்ட பேஸ்புக் பதிவை இங்கே காணலாம்.
அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், சமீபத்திய வசதிகளுடன் கூடிய புதிய ஊழியர் ஓய்வறைப் பகுதி, மேலும் புதிய திட்டத்தில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன, சுத்தமான உணவு விடுதியை அமைத்தல் என்பனவும் அடங்குகின்றன.
இந்த நவீனமயமாக்கல் திட்டத்தில் பஸ் பயணச்சீட்டு முன்பதிவு நிலையம் மற்றும் பயணிகள் தங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் துல்லியமாகப் பெறக்கூடிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அலுவலகம் ஆகியவற்றை நிறுவுவதும் அடங்கும்.
மேலும், மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் பஸ்களின் நடவடிக்கைகளை நிர்வகித்தல் மற்றும் முறைப்படுத்துவதற்கான அலுவலகம் ஒன்று நிறுவப்படும், மேலும் அதற்கு நவீன தகவல் தொடர்பு வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பஸ்களுக்கான சேவை வழங்கல் மற்றும் பராமரிப்பு அலகை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பசுமை கட்டிடக் கருத்திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கல் பணிகளைச் செயல்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது, மேலும் அதன் கீழ், தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகளும் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பஸ்களைக் பயன்படுத்தும் பயணிகள் வசதியான மற்றும் விரைவான சேவையைப் பெறக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பஸ்களின் ஊழியர்களுக்கு வசதிகளை வழங்கவும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை 2026 ஏப்ரல் மாதத்தில், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த நவீனமயமாக்கல் திட்டம் பின்வருமாறு
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube

Title:60 வருடங்களுக்குப் பின் புதுப்பிக்கப்படுவதாக கூறப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம் தொடர்பான விளக்கம்!
Fact Check By: Suji shabeedharanResult: Insight
