புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு பாடப் பகுதியா இது?

சமூகம் | Society

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்கள் தொடர்பில் தொடர்ந்து  சர்ச்சையான விவாதங்கள் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில், தற்போது 6ஆம் தர ஆங்கில பாடநூலில் குடும்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் புதிய சர்ச்சை….6ஆம் ஆண்டு Module சீர்திருத்த புத்தகத்தில் குடும்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்திற்கு இரண்டு தகப்பன் ஒரு பிள்ளை எனவும் இரண்டு அம்மா ஒரு பிள்ளை எனவும் வெளிப்படையாக LGBTQ+ இனை ஆதரித்துள்ளது.

இதற்கு யார் பொறுப்பு? அரசாங்கம் LGBTQ+இனை ஆதரிக்கின்றதா? என தெரிவிக்கப்பட்டு 2025.01.09 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

FB | FB

Fact Check (உண்மை அறிவோம்)


புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் தேசிய கல்வி நிறுவனம் அச்சிட்ட 6ஆம் தர ஆங்கிலப் பாட மொடியூலில், பொருத்தமற்ற ஒரு இணையதளத்தின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் விடயம் இந்நாட்களில் அதிகமாக பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது. இத்தகைய பின்னணியில், இந்த பதிவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதுடன், இது நாட்டின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு மொடியூலின் உள்ளடக்கப் பகுதி எனக் காட்டப்படுகிறது.

பல்வேறு வகை குடும்பங்களை அறிமுகப்படுத்தும் ஒரு பாடத்தில், இரண்டு தாய்மார்கள் மற்றும் ஒரு குழந்தை, அதேபோல் இரண்டு தந்தைமார்கள் மற்றும் ஒரு குழந்தை எனக் காட்டப்படும் பட விளக்கங்களின் மூலம் குழந்தைகளுக்கு ஓரினச்சேர்க்கை குறித்து அறிமுகப்படுத்தப்படுகின்றதாக தெரிவித்தே தற்போது சமூகத்தில் வாதங்கள் எழுந்துள்ளன.

மேலே குறிப்பிடப்பட்ட பாட உள்ளடக்கம், நாட்டின் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் உருவாக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் இடம்பெறும் ஒரு பாடத்தின் பகுதியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அந்தப் பாடப்புத்தகப் பக்கத்தை Reverse Image தேடுதலுக்கு உட்படுத்தி நாம் ஆய்வினை மேற்கொண்டோம். இதன்போது,  இந்தப் பாடப்புத்தகப் பக்கம் நாட்டின் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கிணங்க உருவாக்கப்பட்ட எந்தப் பாடப்புத்தகத்திலும் அல்லது மொடியூலிலும் இடம்பெற்றது அல்ல என்பதுடன், அது எகிப்தில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையின் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் ஒரு பாடத்தின் பக்கமாகும் என்பதனை அறியமுடிந்தது.

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறப்படும் இந்தப் பாடப்புத்தகத்தின் குறித்த பக்கம் தொடர்பாக, 2017 ஆம் ஆண்டில் எகிப்து கல்வி அமைச்சு அவசர விசாரணை ஒன்றை ஆரம்பித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதுகுறித்து அந்தக் காலகட்டத்தில் வெளியான மற்றொரு அறிக்கை இதோ. எகிப்திய சமூகத்தின் அடிப்படையாக உள்ள நெறிமுறை மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளை மீறும் விடயங்களை ஊக்குவிக்கும் அல்லது கற்பிக்கும் எந்தவொரு பாடசாலையும் எகிப்தில் முழுமையாக நிராகரிக்கப்படும் என அக்காலத்தில் அந்நாட்டு கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

இருப்பினும், எகிப்திய குழந்தைகளுக்கு ஓரினச்சேர்க்கை குறித்த கல்வியை வழங்கும் ஜெர்மன் சர்வதேச பாடசாலையான ‘Rahn’  தொடர்பாக நடந்து வரும் சர்ச்சை குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு சம்பவத்தை எகிப்திய ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை செய்தியாக வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இதற்கு ஒத்த பாடப்புத்தக உள்ளடக்கம் ஒன்று ஒரு ஆய்வு அறிக்கையின் மூலமாகவும் எமக்கு கிடைத்தது. இந்தியாவில் உள்ள பாடசாலைகளின் ஆங்கில மொழிப் பாடப்புத்தகங்களில் காணப்படும் பண்பாட்டு, பாலியல் மற்றும் சமூக பிரதிநிதித்துவங்களை ஆய்வு செய்து, அனைத்து குழந்தைகளுக்கும் நியாயமான வகையில் பாடப்புத்தகங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் அந்த ஆய்வில், தொடர்புடைய பாடப்புத்தகப் பக்கத்தின் உள்ளடக்கம் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதையும் காண முடிந்தது. எனினும், இது தொடர்பான விவாதங்கள் மேலதிகமாக முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், Fact Crescendo இந்தியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி  அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்களின் ஊடகச் செயலாளர்


கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்களின் ஊடகச் செயலாளர் சதுரி பெரேராவிடமும் இது தொடர்பாக நாம் வினவினோம். அப்போது, இந்த உள்ளடக்கத்தை கொண்ட பாடப்புத்தகப் பக்கம் இலங்கையின் எந்தப் பாடசாலைப் பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது அல்ல என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் வழங்கப்படும் மொடியூல் கொண்ட பாடப்புத்தகங்களில், இரண்டு தாய்மார்கள் மற்றும் ஒரு குழந்தை அல்லது இரண்டு தந்தைமார்கள் மற்றும் ஒரு குழந்தை போன்ற குடும்ப வடிவம் காணப்படும் எந்தப் பகுதியும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மேற்கண்ட பட விளக்கக் குறிப்புகள் இதற்கு முன்பு உலகின் பல பகுதிகளில் தவறான விளக்கங்களுடன் பகிரப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தமிழ்நாட்டில் வெளியான ஒரு பாடப்புத்தகத்தை ஓரினச்சேர்க்கை கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்துகிறார்கள் என தவறான விளக்கங்களுடன் பகிரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தது.Link

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக பகிரப்பட்ட பாடப்புத்தகத்தின் பக்கம் இலங்கையின் புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் வெளியான பாடப்புத்தகத்தின் பகுதி அல்ல என்பதுடன் அது 2017 ஆம் ஆண்டில் எகிப்திலுள்ள சர்வதேச பாடசாலையொன்றின்  பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பகுதியாகும் என்பது கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு பாடப் பகுதியா இது?

Fact Check By: Suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *