எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று பரவும் வங்கதேச வீடியோ!

அரசியல் சமூக ஊடகம்

எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று குறிப்பிட்டு, உண்டியலைத் திறந்து பணத்தை எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மசூதி ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு, பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது எருமேலியில் இருக்கும் பாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம். தயவு செய்து அய்யப்ப பக்தர்கள் யாவரும் இந்த மசூதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் ஒரு பைசா கூட இவர்களது உண்டியலில் போட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை Rajendran Perumal என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மசூதியில் உண்டியல் திறந்து பணம் எடுக்கப்படும் வீடியோவை வாபர் மசூதியில் அட்டூழியம் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இதில் என்ன அட்டூழியம் நடந்தது என்று குறிப்பிடவில்லை. மசூதி நிர்வாகத்தினர் உண்டியலைத் திறப்பதே அட்டூழியம் என்கிறார்களா என்று தெரியவில்லை. 

வீடியோவை பார்த்தால் இந்தியாவில் எடுக்கப்பட்டது போலவே இல்லை. போலீசாரின் சீருடை, உண்டியலில் உள்ள பணம் எல்லாம் வங்கதேசத்தைச் சார்ந்தது போல உள்ளது. மேலும் மூட்டையில் வங்க மொழியில் எழுத்துக்களைக் காண முடிகிறது. எனவே, இந்த மசூதி வங்கதேசத்தில் உள்ளதாக இருக்கலாம். இதை உறுதி செய்வதற்காக ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை சில வாரங்களாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. சிலர் இதை ஷீரடி சாய்பாபா கோவில் என்று குறிப்பிட்டிருந்தனர். வங்கத்தில் வெளியான பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், வங்கதேசத்தின் கிஷோர்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள பக்லா மசூதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். 

நம்முடைய தேடுதலில், பக்லா மசூதியில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்படுவது போன்று பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்று சிறுவர்களை வைத்து பணத்தை எண்ணுவதையும் அந்த இடத்தையும் அந்த வீடியோக்களில் காண முடிந்தது. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று வீடியோக்கள் பல வங்கதேச ஊடகங்களில் வெளியாகி இருப்பதும் தெரிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ சபரிமலை எருமேலியைச் சார்ந்தது இல்லை, வங்கதேசத்தைச் சார்ந்தது என்பதை உறுதி செய்தன.

வங்கதேசத்தில் உள்ள மசூதியில் பணம் எண்ணும் வீடியோவை எடுத்து, எருமேலியில் உள்ள வாபர் மசூதியில் இந்துக்கள் போட்ட பணம் என்று தவறாக விஷமத்தனமான வதந்தி பரப்பப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எருமேலி மசூதியில் இந்துக்கள் பணம் என்று பரவும் வீடியோ தவறானது  என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம்.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Avatar

Title:எருமேலி வாபர் மசூதியில் நடக்கும் அட்டூழியம் என்று பரவும் வங்கதேச வீடியோ!

Written By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *