
கொரோனா வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:


JaffnaVisit.com என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்!
10 MARCH 2020
கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்!
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பீதி அதிகமாகி கொண்டிருக்க, இணைய வாசிகள் பலரும், கொரோனா கான்செப்ட் ஆக்கி லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸாப்பில், சிலப்பதிகாரத்திலும், காப்பியதியாலும் கொரோனா குறித்த குறிப்புகள் இருப்பதாக சில பதிவுகள் வைரலாகின்றன.
இணையத்தில் வைரலாகும், அந்த பதிவு பின்வருமாறு:
சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி
“தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?”
அர்த்தம்: “தட்டை மூக்குடையவன் (சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான் அப்போது நோய் எதிர்ப்பு அதிகம் உள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை , மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் இது கொரோனா வைரசு அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?”
இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்தார் போகர்.அதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.
“சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான் பகைகொண்டு
பித்தம் சித்தம் சிதைகொள்வாள்”
இதன் அர்த்தம்: சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்று சேர்ந்து தாக்கியது போல, கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு, பிறகு (பித்தம்) அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு (இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) (சிதை கொள்வாள்) அதாவது இறப்பார்கள்.
“உண்மையான தமிழனா இருந்தா சேர் பண்ணுங்க.!” என்பதே அந்த பதிவாகும்” என்று இம்மாதம் 13 ஆம் திகதி (13.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பேஸ்புக் பதிவில் இந்த பாடல் சிலம்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த நாம் ஆய்வு செய்த போது சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்கள் அல்லது பகுதிகளைக் கொண்டது. புகார்க் காண்டம் 10 காதைகள், மதுரைக் காண்டம் 13 காதைகள், வஞ்சிக் காண்டம் 7 காதைகள் என மொத்தம் 30 காதைகளைக் மட்டுமே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலில் போது சமயம் என்ற இந்திய இணையத்தளத்தில் , பாண்டிய மன்னனிடம் கேள்வி கேட்கும் பகுதி என்று இதை குறிப்பிட்டுள்ளனர். பாண்டிய மன்னனிடம் கண்ணகி பேசும் பகுதி மதுரைக் காண்டத்தில் உள்ளது. அதில் இப்படி ஒரு பகுதியே இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் குறித்த இணையத்தளத்தில் பேஸ்புக்கில் பகிரப்படும் கொரோன வைரஸ் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைபோல், குறித்த செய்தி தொடர்பில் எமது இந்திய தமிழ் பிரிவு மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கொரோனா வைரஸ் பற்றி சிலப்பதிகாரத்தில் உள்ளது, அகத்தியர் பாடியுள்ளார் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. இதை தவறாக பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்து மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோன வைரஸ் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Title:கொரோனா வைரஸ் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்?
Fact Check By: Nelson ManiResult: False