
INTRO :
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவம் தொடர்பில் ஒரு பதிவு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Chithrakanapathy Senthur என்ற பேஸ்புக் கணக்கில் ” நாட்டின் பிரம்மாண்ட மகோற்சவம்
2021ம் ஆண்டு மாசிமாதம் 5ம் திகதி கொடியேற்றத்தோடு மத்தியமாகாணத்திலே தனக்கென அரண்மனை கொண்டு தனியாட்சி புரியும் மாத்தளை பராபாட்டாரிகா மஹாதிரிபுரசுந்தரி
அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மாசிமக மங்கள மகோற்ஸவம் ஆரம்பமாகும்.
மாசிமாதம் 27ம் திகதி மகநட்சத்திரம் கூடும் சுபவேளையில் அழகிய வெள்ளி சிம்மாசனத்திலே எம்பெருமாட்டி காட்சியளிக்க அன்னையின் திருவருள் கூடியுள்ளது
*துவஜாரோகணம் : 05.02.2021
*வேட்டைத்திருவிழா : 26.02.2021
*பஞ்சரத பவனி : 27.02.2021
*பச்சைசாத்துதல் : 28.02.2021
*தீர்த்தோற்சவம் : 01.03.2021
*பூங்காவனம் : 02.03.2021” என இம் மாதம் 17 ஆம் திகதி (17.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில் நாம் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் ஊடகப்பேச்சாளரை தொடர்புகொண்டு வினவிய போது, நாட்டின் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பஞ்சரத பவணி தொடர்பாகவும், ஆலய மகோற்சவம் தொடர்பாகவும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய ஆலய மகோற்சவத்தினை முன்னெடுக்கும் பணிகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், அதற்குள் இவ்வாறான தகவல்களை பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஆலய நிர்வாக குழுவினர் மாசிமக மகோற்சவம் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்திர மகோற்சவம் தொடர்பில் வெளியான தகவல் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False