
இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும், குறித்த தினத்தில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு என செய்தி பேஸ்புக்கில் பரப்பப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

SL muslim media என்ற பேஸ்புக் பக்கத்தில் “பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு.” என்று கடந்த ஞாயிற்று கிழமை (17.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் பண்டாரகொஸ்வத்தை பிரதேசம் உட்பட்ட வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவினோம்.
அப்போது, கடை தீ வைக்கப்பட்டதாக எவ்வித முறைப்பாடும் தமக்கு பதிவாகியில்லை என்பதோடு, குறித்த கடை தீயில் எரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த தீ விபத்து, மின்கோளாறு காரணமாக இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அது குறித்தான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக எமக்கு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக நாம் மேலும் மேற்கொண்ட சோதனையில், இலங்கையின் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, Center for Monitoring Election Violence (CMEV) அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் வெளியிட்டு இருந்து தகவல் நமக்கு கிடைத்தது.

மேலும் குறித்த டுவிட்டர் பதிவில் இலங்கையின் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான CMEV இற்கு கடையின் உரிமையாளர் அது மின்சார கோளாறு காரணமாக தனது கடை தீ பிடித்திருக்கலாம் என தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு என வெளியான தகவல் போலியானது என எமது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.