
அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்த புகைப்படம் என்று இணையத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த போது 😂😁😁😁 Lol 😜” என்று நேற்று (27.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த புகைப்படத்தின் கீழ் பதியப்பட்ட கமெண்டுக்களை பரிசோதனை செய்தோம்.

குறித்த பரிசோதனையின் போது, பலரும் குறித்த புகைப்படமானது Photoshop செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் நாம் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்தினோம்.

அப்போது குறித்த புகைப்படத்தில் அலுவலகத்தில் நித்திரையில் உள்ளவாறு இருக்கும் புகைப்படம் 2012 ஆம் ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தனது குடும்ப உறுப்பினர்களோடு எடுத்த செல்பியினை கடந்த மாதம் 25 ஆம் திகதி (25.11.2019) பதிவேற்றம் செய்திருந்தார்.

குறித்த புகைப்படத்திலுள்ள ஜனாதிபதியினை வெட்டி நீக்கி 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு இணைத்து தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அரச அலுவலகத்தில் உறங்கியவருடன் செல்பி எடுத்த ஜனாதிபதி என்று பகிரப்படும் புகைப்படமானது போலியானது.

Title:அரச அலுவலகத்தில் உறங்கியவருடன் செல்பி எடுத்தாரா ஜனாதிபதி?
Fact Check By: Nelson ManiResult: False