INTRO :
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தமைக்கு தண்டப்பணம் செலுத்த முடியாத வயோதிபருக்கு 7 வருடங்கள் சிறைத்தண்டனை என ஒரு புகைப்படத்துடன் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ரூ.2500/- தண்டப்பணத்தை செலுத்த முடியாத வயோதிபர் 07 ஆண்டுகள் சிறையில்....!!!

#வயோதிபரின்_வாக்குமூலம்:

எனது மூத்த மகன் கொழும்பில் மேசன் வேலை செய்து கொண்டிருந்தார்.

அவருடைய மனைவி அவரை விட்டுச் சென்றதன் பின்னர் அவரது பிள்ளைகளை நானும் எனது மனைவியும்தான் பராமரித்து வந்தோம்...

ஏழு வருடங்களுக்கு முன்னர் அன்றொருநாள் செய்தி வந்து...

"மூத்தமகன் வேலை செய்யும் போது பாலத்திலிருந்து விழுந்துவிட்டார்!" என்று.

நான் அணிந்திருந்திருந்த ஆடையுடன் மகனிற்கு என்ன நடந்ததோ என்று பதறிப்போய் கொழும்பு வரும் ரயிலில் தொற்றி ஏறிக் கொண்டேன்.

அப்போது என்னிடம் பணம் இல்லை என்பது கூட எனது நினைவிருக்கவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டம் ரயில் டிக்கெட் பரிசோதகர் அந்த சமயம் பார்த்து அங்கே வந்துவிட்டார்.

டிகெட்டைக் கேட்டார்.டிக்கெட் இல்லாத காரணத்தினால் அடுத்த ஸ்டேஷனில் என்னை ஒப்படைத்தார்.

எனது நிலைமையை எவ்வளவு தெளிவுபடுத்தியும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை....

நீதிமன்றத்தில் ஒப்படைத்து ரூ. 2500/- தண்டப்பணமும் விதித்தார்கள்.

குறித்த தண்டப்பணத்தை செலுத்துவதற்கென கையில் ஒரு சதம் கூட இல்லாத நிலையில்... நான் எங்கே பணத்தைத் தேடிச் செல்வது !??

எனவே என்னை சிறையில் அடைத்தார்கள்....!

ஏழு வருடங்களுக்குப் பின்னர் இந்த சுதந்திர தினத்தில் விடுதலை கிடைத்துள்ளது...

ஏழு வருடங்களாக எனது மனைவி, மூத்த மகனுக்கு என்ன ஆனதென்று எதுவும் தெரியவில்லை...

சுதந்திர தினம் அழகானது !

நான் சென்று வருகின்றேன் ஐயா....

(சிங்கள மொழிமூலப் பதிவிலிருந்து...)

#சட்டம்

இருப்பவனுக்கு சட்டையை போன்றது கழட்டி மாட்டலாம் (மாற்றலாம்)

இல்லாதவனுக்கு தோலைப்போன்றது

Copy “ என இம் மாதம் 05 ஆம் திகதி (05.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் 7 வருடங்கள் சிறை தண்டனை என்ற தகவலுடன் பகிரப்படும் புகைப்படம் தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் குறித்த புகைப்படம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட போது, கிரிஷான் காரியவசம் என்ற புகைப்படக் கலைஞரால் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி 2015 (04.02.2015) அன்று தனது பேஸ்புக் கணக்கில் அவர் இதனை பதிவிட்டிருந்தமை எமது தேடலின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

Archived Link

நாம் இந்த புகைப்படம் குறித்து அவரிடம் கேட்டோம், இந்த புகைப்படம் 2015 சுதந்திர தினத்தன்று வெலிக்கடை சிறைச்சாலையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை நமக்கு அவர் உறுதிப்படுத்தினார்.

2015 ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் 67 ஆவது சுதந்திர தினத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த 03 வகையான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர்.

Link 1| Link 2

எவ்வாறாயினும், புகையிரதத்தில் பயணச்சீட்டின்றி பயணித்து அது தொடர்பான அபராதத்தை செலுத்த முடியாமல் பிடிபட்டால் 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமா என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் டி.ஐ. உடுவர நாம் தொடர்பு கொண்டு வினவினோம்.

புகையிரத பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்படும் போது, ​​அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு அதிகபட்சமாக 3 அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் எமக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக நாம் புகையிரத கட்டுப்பாட்டாளரிடமும் வினவியபோது,

ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிப்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ரூபா 3500 அபராதமும், அவர்களின் பயண கட்டணத்தின் இரு மடங்கும் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அந்த நேரத்தில் அபராதத்தை செலுத்தத் தவறினால், அந்த நபர் தடுப்புப் பத்திரத்தின் கீழ் விடுவிக்கப்படுவார் என்றும், அபராதம் செலுத்திய பிறகு தடுப்புப் பத்திரம் விடுவிக்கப்படும் என்றும், சில சந்தர்ப்பங்களில் மனிதாபிமான காரணங்களுக்காக அபராதம் செலுத்தாமல் விடுவிக்கப்படுவதாகவும் எமக்கு தெரிவித்தார்.

இது குறித்து சிறைத்துறை முன்னாள் பொது மேலாளரிடம் கேட்டபோது, ​​அந்த காலத்திலும் இந்த மாதிரி அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக சிறை தண்டனை விதிக்கப்படும் வழக்குகள் மிகவும் அரிதாகவே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக எமது குழுவினர் வழக்கறிஞரையும் தொடர்புக்கொண்டு வினவினோம். டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யும் போது குறித்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என்றும் அதன்படி ரூபா 3500 மற்றும் இரண்டு மடங்கு பயணக் கட்டணமும் செலுத்த வேண்டும் என எமக்கு தெரியப்படுத்தினார்.

அந்த நேரத்தில் பணம் இல்லை என்றால், ஒரு பத்திரத்தை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்திய பிறகு குறித்த பத்திரத்தை விடுவிக்க முடியும்.

அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் அந்த காலக்கட்டத்தில், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி எந்த நேரத்திலும் விடுதலை ஆகலாம் அல்லது அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை முடிந்த பின்னர் விடுதலை செய்யப்படுவர் என தெரிவித்தார்.

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் 7 வருடங்கள் சிறை தண்டனை என பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் 7 வருடங்கள் சிறை தண்டனையா?

Fact Check By: S G Prabu

Result: Misleading