
INTRO :
இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் கொரோனா தொடர்பில் பல்வேறுபட்ட போலி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.
இந்நிலையில் உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Shoora News Srilanka என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன
உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில்
பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது.
கம்பாஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுஷா கோன்குல colombogazzat.com க்கு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்றும், கொழும்பு மாவட்டத்தில் கல்வி வகுப்புகள் தடைசெய்யப்படுவதாகவும் கல்வி அமைச்சு முன்பு அறிவித்தது.
இது தொடர்பாக இறுதி முடிவு மற்றும் பரீட்சைக்கான புதிய தேதிகள் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அனுஷா கோன்குல கூறினார்.
இருப்பினும், 2021 ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரத் பரீட்சை தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என்று அவர் உறுதியளித்தார்.” என இம்மாதம் 05 ஆம் திகதி (05.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
எமது குழுவினர் ,இதுகுறித்து, அனுஷா கோன்குலவை தொடர்பு கொண்டு வினவியபோது, ‘’இவ்வாறான கருத்தினை முன்வைக்கவில்லை,’’ என தெரிவித்தார்.
மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையும் திட்டமிட்டவாறு இடம்பெறும் என கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடந்த 7 ஆம் திகதி (07.10.2020) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிருந்த செய்தியில் பரீட்சைகள் குறித்த தினத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன என வெளியாகிய செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன என்று வெளியான செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளனவா?
Fact Check By: Nelson ManiResult: False