
கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் கடற்கறை ஓரத்தில் அமைந்துள்ள முகுது மகா விகாரையில் உள்ள சிலைகள் முஸ்லீம் இனத்தினரால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பலர் தங்களின் பேஸ்புக் வழியாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
தகவலின் விவரம்:
குறித்த விகாரையில் 2013 ஆம் காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நடத்தப்பட்ட “தெயட கிருல” என்ற கண்காட்சியின் போது சிலைகளை வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தோடு, தற்போது குறித்த சிலைகள் உடைத்து கீழே தள்ளப்பட்டுள்ளவாறு புகைப்படங்கள் பகிரப்படுகின்றன.

டுடே ஜப்நா – Today Jaffna | Archived Link
மேலும் ”பொத்துவில் பகுதியில் கடற்கரையோரம் முஸ்லிம்களால் மண்கடத்துவதற்கு தடையாக உள்ள முத்துமஹா விகாரைக்குரிய புத்தர் சிலைகள் சேதம்!! ” என்ற பதிவோடு குறித்த புகைப்படங்களை பேஸ்புக் வழியாக பகிரப்படுகின்றது.

Satha Thambirajah | Archived Link



Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிவு தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில் குறித்த விகாரையில் கட்டுமாணப்பணிக்காகவே சிலைகளை கீழே வைக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த சிலைகள் எதுவும் முஸ்லீம் இனத்தவர்களால் உடைக்கப்படவில்லை என்றும் அவ்விகாரையில் உள்ள தேரர் ஒருவர் காணொளி வடிவில் தமது கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.


இது குறித்து மேலும் ஆய்வினை மேற்கொண்டவேளையில் Google Map இல் பொத்துவில் முகுது மகா விகாரைக்கு சென்றவர்கள் வெவ்வேறு காலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் காணக்கூடியதாக இருந்தது.
2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை குறித்த சிலைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரிசையாக நிருத்தி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் ஜுலை மாதத்தில் குறித்த சிலைகள் அவ்விடத்திலிருந்து அகற்றப்படும் பணிகள் நிமித்தமாக குறித்த சிலைகள் நிலத்தில் படுக்க வைத்திருப்பதை அக்காலத்தில் பொத்துவில் முகுது மகா விகாரைக்கு சென்றவர்கள் Google Map இல் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆதரமாக கொண்டு காணக்கூடியதாக உள்ளது.


2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் பயணித்தவர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை பார்வையிடும் போது பொத்துவில் முகுது மகா விகாரைக்கு செல்லும் வழி ஓரத்தில் குறித்த சிலைகள் விகாரைக்கு செல்லும் திசையில் ஒன்றன் முன் ஒன்றாக பாதை ஓரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பொத்துவில் முகுது மகா விகாரையில் முஸ்லீம் இனத்தவர்களால் உடைக்கப்பட்டதாக கூறப்பட்டு பகிரப்படும் புகைப்படமானது, அதன் கட்டுமான பணியின் போது நிலத்தில் படுக்க வைத்தவாறு இருந்த சிலைகள் ஆகும்.

Title:பொத்துவில் விகாரை சிலைகள் முஸ்லீம்களால் தாக்கப்பட்டதா?
Fact Check By: Nelson ManiResult: False
