2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் இன் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 38(2) ஆம் உப பிரிவிற்கமைய எதிர்வரும் தேர்தல்களின் போது முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ கட்புலப் பாதிப்பொன்றிற்கு அல்லது வேறேதேனும் உடல் ரீதியான வலிமையிழப்பொன்றிற்கு இலக்கான வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்லத்தக்கவாறான சட்ட விதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆயினும்,அவ்வாறு உடனழைத்துச் செல்லும் அவ்வுதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டுமென்பதோடு அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளரொருவராக அல்லாதவராகவும் இருத்தல் வேண்டும். அதே போன்று வேட்பாளரொருவரின் அதிகாரமளிக்கப்பட்ட முகவரொருவராகவோ அல்லது பிரதேச முகவரொருவராகவோ அல்லது வாக்களிப்பு நிலையத்தின் முகவரொருவராகவோ செயற்படுகின்றவரல்லாதவராகவும் இருத்தல் வேண்டும், மேலும் ஏதேனும் வலிமையிழப்பொன்றிற்கு உட்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வதற்காக உரிய சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையிலூடாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தகுதிச் சான்றிதழொன்றை உரிய வாக்களிப்பு நிலையத்தின் அலுவலருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

இத்தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பப்படிவங்களை அனைத்து மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும் அல்லது www.elections.gov.lk என்னும் இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். பார்வைக் குறைபாடுள்ள அல்லது வேறேதேனும் உடல்ரீதியான வலிமையிழப்பிற்குள்ளாகிய ஆள், மேற்குறிப்பிட்டுள்ளவாறு விண்ணப்பப் படிவமொன்றைப் பெற்று அதனை நிரப்பிக் கொடுத்து கிராம அலுவலரின் அத்தாட்சியைப் பெற்றுக் கொள்ளல் வேண்டுமென்பதோடு அதன் பின்னர் அச் சான்றிதழை அரசாங்க வைத்திய அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். வைத்திய அலுவலரினால் வாக்காளர் பரீட்சிக்கப்பட்டு அப் படிவத்தில் வாக்காளரின் தகைமை குறிக்கப்பட்டு அத்தாட்சிப்படுத்தப்படும்.

வலிமையிழப்பிற்கு ஆளாகிய வாக்காளர் தனது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது வாக்களிப்பு நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏதேனுமோர் அடையாள அட்டை மற்றும் இத் தகுதிச் சான்றிதழ் என்பவற்றை எடுத்துக்கொண்டு உதவியாளரையும் உடனழைத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லுதல் வேண்டும். வாக்களிப்பு நிலைய பணியாட் குழுவினால் வாக்காளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வாக்களிப்பு நிலையத்தின் வழமையான நடைமுறையைப் பின்பற்றி வாக்குச் சீட்டொன்று விநியோகிக்கப்படும் என்பதோடு, அவ் வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்காக உதவியாளரோடு வாக்காளர் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலரிடம் ஆற்றுப்படுத்தப்படுவார். உதவியாளரும் தம்மோடு தேசிய அடையாள அட்டையை அல்லது வாக்களிப்பு நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏதேனும் அடையாள அட்டையொன்றை எடுத்துச் செல்லல் இன்றியமையாததாகும்.

வாக்களிப்பு நிலையத்தில் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலரினால் வாக்காளரின் தகுதிச்சான்றிதழ்

பெற்றுக்கொள்ளப்படும் என்பதோடு அழைத்து வருகின்ற ஆளிடமிருந்து தகுதிச் சான்றிதழின் III ஆம் பகுதியில் காட்டப்பட்ட உரிய வெளிப்படுத்துகை பெறப்படும். அதைத் தொடர்ந்து வாக்களிப்பு பணியாட் குழுவினர் ஒருவரோடு வாக்காளரும் உதவியாளரும் வாக்களிப்புச் சிற்றறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் பணியாட் குழுவின் மற்றோர் அங்கத்தினர் ஆகியோர் முன்னிலையில் வாக்குச்சீட்டு அடையாளமிடப்பட்டு வாக்குப்பெட்டிக்குள் இடப்பட நடவடிக்கை எடுக்கப்படும்

மேற்குறித்த தகுதிச் சான்றிதழொன்று இல்லாமல் வாக்களிப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்ல சல்ல முடியாது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.. வாக்கு அடையாளமிட்டதன் பின்னர் உரிய தகுதிச் சான்றிதழ் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலரினால் ஏற்றுக் கொண்டு தம்வசம் வைத்துக் கொள்வார்.

எவ்வாறாயினும் உதவியாளர் ஒருவரோடு வருவதற்கு இயலாத வாக்காளரொருவருக்குத் தேவைப்படின், அதற்கு முந்திய வாக்கெடுப்புக்களில் போன்றே வாக்கெடுப்பு நிலைய அலுவலர் ஒருவரின் முன்னிலையில் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலரூடாக தனது வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்ள அவகாசமுள்ளதென்பதும் அறிவிக்கப்படுகின்றது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.