ஜப்பானில் ஒருவர் நாயாக மாறியதாகவும் தற்போது நரியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளார் எனவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெரிய சைஸ் நாய் ஒன்றின் புகைப்படத்துடன் கூடிய ஃபேஸ்புக் பதிவை News7Tamil செய்தி தொலைக்காட்சி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. நிலைத் தகவலில், "“நரியாக மாற வேண்டும்” – நாயாக மாறிய ஜப்பான் மனிதரின் விநோத விருப்பம்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: news7tamil.live I Archive

இது தொடர்பாக அந்த ஊடகத்தின் news7tamil.live இணையதளத்தில் வெளியான செய்தியில், "கடந்த வருடம் ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்ற நபர் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறினார். தற்போது நாயாக இருக்கும் டோகோ பாண்டா, கரடி, பூனை அல்லது நரியாக மாற விரும்புவதாக கூறியுள்ளார். சமீபத்தில், ஒரு ஜப்பானிய செய்தி நிறுவனத்திடம் பேசிய டோகோ, தற்போது தான் ஒரு புதிய விலங்காக வாழ்க்கையை வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

மனிதனாக இருப்பவர் வெறும் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிவிட முடியுமா? சாதாரண அறுவை சிகிச்சைக்கு நம் ஊரிலேயே லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் போது, வெளிநாட்டில் 12 லட்ச ரூபாயில் ஒருவர் நாயாக மாறிவிட வாய்ப்பில்லை என்பதால் இதுதொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: mirror.co.uk I Archive

நியூஸ் 7 வெளியிட்டிருந்த செய்தியில் ஜப்பானைச் சார்ந்த நபரின் பெயர் டோகோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து கூகுளில் இது தொடர்பான அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டில் நாயாக மாறிய ஜப்பான் நபர் என்று செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதில் அவர் கோலி (collie) என்ற நாயைப் போன்ற உடையைத் தயாரித்து அணிந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

2022ம் ஆண்டு mirror.co.uk என்ற இங்கிலாந்து ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் ஜப்பான் பணத்திற்கு 20 லட்சம் யென் கொடுத்து இந்த ஆடையை அவர் உருவாக்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது தொடர்பாக அந்த ஆடையை உருவாக்கிய நிறுவனம் தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டிருந்த பதிவையும் வெளியிட்டிருந்தனர்.

அதை மொழிபெயர்த்து பார்த்த போது, "ஒரு தனி நபரின் வேண்டுகோளை ஏற்று, பிரத்தியேகமான நாய் ஒன்றின் உருவ ஆடையைத் தயாரித்துள்ளோம். கோலி நாய் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில், தத்ரூபமான தோற்றத்தை அளிக்கும் வகையில் நான்கு காலில் நடக்கும் வகையில் இந்த ஆடை உருவாக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த ஆடை தொடர்பான இணையதள லிங்க் ஒன்றையும் அதில் இணைத்திருந்தனர்.

இதன்மூலமாக, அந்த இணையதள பக்கத்துக்கும் சென்று பார்த்தோம். அதில் நாயின் படத்துடன் எக்ஸ் தளத்தில் வெளியான தகவலைப் பகிர்ந்திருந்தனர். கூடுதலாக இந்த நாய் மாடல் உடையைத் தயாரிக்க 40 நாட்கள் ஆனது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடிய போது, அந்த நபர் பூனை, நரியாக மாற விருப்பம் தெரிவித்தது தொடர்பான செய்தியும் நமக்குக் கிடைத்தது. ஜப்பான் ஊடகத்தில் வெளியான கட்டுரையை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் கூட, செல்லப் பிராணியாக மாற ஆசைப்பட்ட நபர் ஒருவர் கோலி நாய் போன்ற உடையை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறார் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: magazine.cainz.com I Archive

அந்த இதழுக்கு குறிப்பிட்ட நபர் அளித்திருந்த பேட்டியில், "உண்மையான நாய் போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையிலான ஆடையைத் தயாரிக்க ஆர்டர் செய்ய முயற்சி செய்தேன். இதற்காக பல நிறுவனங்களைத் தொடர்புகொண்டேன். கடைசியில் Zeppetto என்ற நிறுவனம் அப்படி ஒரு ஆடையைத் தயாரித்துத் தர ஒப்புக்கொண்டது. நான் நாயாக மாற விரும்புகிறேன், என்னை நாயாக மாற்றுங்கள் என்று கேட்டேன். என்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

நாயின் உடல் அமைப்பும் மனிதர்களின் உடல் அமைப்பும், எலும்பு அமைப்பும் வித்தியாசமானது. இதை சமாளிக்க ஆடையின் அளவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக செய்து, மனிததர்களின் உடல் அமைப்பு வெளியே தெரியாதபடி உருவாக்கினோம். நான்கு கால்களில் நடப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் இந்த கோலி நாய் உடை உருவாக்கப்பட்டது. சமூக ஊடகங்களுக்கு வீடியோ எடுக்கும் போது மட்டும் இந்த உடையை அணிவேன்.

எனக்கு வேறு ஒரு விலங்காகவும் மாற ஆசை உள்ளது. வேறு ஒரு நாய், பான்டா, கரடி... ஏன் நரி... பூனையாக மாறக் கூட ஆசை உள்ளது. ஆனால் நரி, பூனை எல்லாம் மிகவும் சிறிய விலங்குகள்... மனிதர்களால் அப்படி ஒரு உடையைத் தயாரித்து அணிய முயல்வது கடினம். இருப்பினும் என்னுடைய வேறு ஒரு விலங்காக ஆகும் ஆசை ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும்" என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

அந்த நபர் தன்னுடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும் சில பேட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் நாய் காஸ்டியூமில் உண்மையான நாயுடன் என்று அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவும் காண முடிந்தது. கடந்த ஆண்டு அந்த நபர் அளித்திருந்த வேறு ஒரு பேட்டியில், நான் இந்த உடையை அணிந்து கொண்டே இருப்பதாக சிலர் கருதுகின்றனர். இது உண்மையில்லை. வாரத்துக்கு ஒரு நாள் அல்லது மாதத்துக்கு ஒரு நாள் அணிவேன் அவ்வளவுதான் என்று குறிப்பிட்டிருந்தார். இவை எல்லாம் அந்த நபர் நாயாக மாறிவிட்டார் என்ற தகவலைப் பொய்யாக்குகின்றன.

நம்முடைய ஆய்வில் ஜப்பானில் நாயாக மாறிய நபர் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் போன்று காஸ்டியூமை உருவாக்கி சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியிட அந்த நபர் பயன்படுத்தி வருகிறார். மற்றபடி உண்மையான நாயாக அந்த நபர் மாறிவிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாயாக மாறிய மனிதர் என்று பரவும் செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜப்பானில் ஒருவர் நாய் போன்ற தோற்றம் கொண்ட ஆடையை உருவாக்கி அதை அணிந்து சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிட்டு வருவதை தவறாக புரிந்துகொண்டு நாயாகவே மாறிவிட்டார் என்று கூறி பலரும் வதந்தி பரப்புவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜப்பானில் நாயாக மாறிய நபர் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False