லிஃப்டில் எடுத்து சென்ற பைக் பேட்டரி தீப்பிடித்து வெடித்ததற்கு பேட்டரியின் மின்சக்தி காந்த சக்தியாக மாறியது தான் காரணம் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

லிஃப்டுக்குள் பேட்டரி ஒன்றை ஒருவர் எடுத்து வரும் சிசிடிவி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. லிஃப்ட் கதவு மூடிய சில விநாடிகளில் பேட்டரி எரிந்து வெடிக்கிறது. நிலைத்தகவலில், "ஒரு நபர் மின் பைக் பேட்டரியை லிப்ட்டுக்குள் கொண்டு வருகிறார். லிப்ட் மூடும் போது, ​​பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்த பேட்டரியாக மாற்றுகிறது. கவனமாக இருங்கள் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

லிஃப்டுக்குள் பேட்டரி எடுத்து சென்றால் அதன் தன்மை மாறி வெடிக்கும் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றும் தகவல் இல்லை. ஆனால், பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிஃப்டையும் காந்த பேட்டரியாக மாற்றுகிறது என்று மட்டும் குறிப்பிட்டிருந்தனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த சம்பவம் எங்கு நடந்தது, எதனால் நடந்தது என்று ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று அறிய இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் 2021ம் ஆண்டு சீனாவில் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சீன ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன.

அதில், இந்த சம்பவமானது thermal runaway of the lithium battery என்ற காரணத்தால் நிகழ்ந்தது என்று உள்ளூர் தீயணைப்பு நிலையம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: gmw.cn I Archive 1 I mygopen.com I Archive 2 I mirror.co.uk I Archive 3

மேலும் விபத்தில் சிக்கிய நபரின் பெயர் சென் (Chen) என்றும் அவர் மரணத்துக்கு முன்பாக அளித்த வாக்குமூலத்தையும் அவர்கள் பதிவிட்டிருந்தனர். அதில், "என் மனைவி எலக்ட்ரிக் காரின் பேட்டரி மிகவும் சூடாகிறது என்று கூறினார். நான் அதை வெளியே எடுத்துக் குளிர்விக்க முடிவு செய்து, அந்த பேட்டரியை கழற்றிக் கொண்டு வீட்டுக்கு செல்ல லிஃப்டில் ஏறினேன்.

எதிர்பாராத விதமாக லிஃப்ட் கதவு மூடிய போது பேட்டரியில் இருந்து புகைவந்து வெடித்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து என்னை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்று கூறியதாக அதில் தெரிவித்திருந்தனர்.

மேலும் அந்த நபருக்கு உடல் முழுக்க பல இடங்களில் மிக ஆழமான தீக்காயம் ஏற்பட்டது. இடது கண் எரிந்துவிட்டது. கடைசியில் நவம்பர் 3, 2021 அன்று மயோகார்டியல் இன்ஃப்ராக்‌ஷன் (myocardial infarction) எனப்படும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. லித்தியம் பேட்டரி வெடிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதால் பூட்டிய அறை, லிப்ட் போன்ற தப்பிக்க வழியில்லாத இடங்களுக்குள் பேட்டரி, பேட்டரி பொருத்தப்பட்ட சைக்கிள், மின்னணு பைக்குக்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தல் எச்சரிக்கையை வெளியிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. லிஃப்டில் காந்தசக்தி வந்தது, மின்சக்தியாக மாறியது என்று எல்லாம் எந்த தகவலும் இல்லை.

சரி, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் லிஃப்டை காந்த பேட்டரியாக மாற்றுமா என்று அறிய எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையைச் சார்ந்த சென்னை செயின்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுப்பையா பாரதியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அந்த வீடியோவை அவருக்கு அனுப்பி, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தகவலை அவரிடம் கூறி இது உண்மையா என்று கேட்டோம்.

"அறிவியல் பூர்வமாக இதற்கு வாய்ப்பு இல்லை. முதலில் பேட்டரி எதனுடனும் இணைக்கப்படவில்லை. இரண்டாவது எந்த தொடர்பும் இல்லாமல் காந்தபுலம் ஏற்பட லிஃப்டில் மின்சக்தி இல்லை. லிஃப்ட் என்பது இரும்பு கம்பியால் இழுக்கப்படும் தொழில்நுட்பம்தான். அதன் மின்சார சாதனம் லிஃப்ட் காரில் (பெட்டி) இருக்காது. எந்த தளத்துக்கு செல்ல வேண்டும் என்று காட்டும் டிஸ்பிளேவில் உள்ளது எல்லாம் மிக மிகக் குறைந்த மின்சக்தியில் இயங்கக் கூடியதுதான். அதனால் பேட்டரி மற்றும் லிஃப்ட்டில் உள்ள மின்சக்தி இணைய வாய்ப்பே இல்லை.

பேட்டரி வெடிக்க வெப்பநிலைதான் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. அதிகப்படியாக சார்ஜ் செய்யும் போது பேட்டரி பல்ஜ் ஆகும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது வெடிக்கலாம். எலக்ட்ரிக்கல் சார்ட்சர்க்கியூட் ஆனாலும் இப்படி ஆகும். அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது. கொண்டு சென்ற பேட்டரி புதியதா அல்லது ஏற்கனவே பயன்படுத்தியதா என்றும் தெரியவில்லை. மற்றபடி பதிவில் உள்ளது போன்று காந்தசக்தியாக மாறி வெடித்தது என்பதற்கு வாய்ப்பில்லை" என்றார்.

உண்மைப் பதிவைக் காண: eroselevators.com I Archive

இதன் மூலம் மின்சார வாகனங்களின் பேட்டரியை லிஃப்ட்டுக்குள் கொண்டு செல்லும் போது அது முழு லிஃப்டையும் காந்த பேட்டரியாக மாற்றித் தீப்பற்ற செய்யும் என்று பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகிறது.

முடிவு:

வெளிநாட்டில் லிஃப்ட்டுக்குள் பேட்டரியை கொண்டு சென்ற போது அதில் இருந்து வெளிப்பட்ட மின்சாரம் முழு லிஃப்டையும் காந்த பேட்டரியாக மாற்றி தீவிபத்தை ஏற்படுத்தியது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கார் - பைக் பேட்டரியின் மின்னாற்றல் லிஃப்டை காந்தசக்தி பேட்டரியாக மாற்றுமா?

Written By: Chendur Pandian

Result: False