
இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதன் அடுத்து சில கட்சி தாவுதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.
அதில்,இலங்கை சுகந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சிநிலமே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அளிப்பதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தின் ஊடாக செய்திகள் பரவி வருவது தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டோம்.
தகவலின் விவரம்:
SLMC Daily Express என்ற பேஸ்புக் பக்கத்தில் “முன்னாள் அமைச்சர் அதாவுட செனேவிரத்ன, யூ.டி. ஏக்க நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவு….” என்று நேற்று செய்தி (02.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த செய்தியின் உண்மையினை கண்டறிய இணையத்தளங்களில் வெளியாகிய செய்திகளை ஆய்வு செய்தோம்.
முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன மற்றும் டபிள்யூ.பி. ஏக்கநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக வெளியான செய்திகளில் சுசந்த புஞ்சிநிலமேயின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
மேலும், இது குறித்து சுசந்த புஞ்சிநிலமே தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தமக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக வெளியான செய்திகள் போலியானவை என தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவிற்கே தாம் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.
Susantha Punchinilame | Archived Link
மேலும், குறித்த செய்தி தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஊடக சந்திப்பொன்றையும் ஏற்படுத்தி சுசந்த புஞ்சிநிலமே பேசினார். அப்போது, ‘’நான் கனவிலும் எதிர்பார்க்காத ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் செய்தி பரவி வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியுடன் நான் இணைந்ததாக என்னுடைய புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஓட்டப்பட்டுள்ளதாக கேள்வியுற்றேன். எனக்கு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. நான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய போவதாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை,’’ என்று தெரிவித்திருந்தார்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுசந்த புஞ்சிநிலமே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்ததாக வெளியான செய்தி போலி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
