எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 22 அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் அவற்றில் உள்ளடங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக 17 பேர் ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 22 பேர் என்ற எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு தேர்தலில் 19 ஆக சிறிதளவு குறைக்கப்பட்ட போதிலும், 2019ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியல் 35 ஆக அதிகரித்து இம்முறை கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்குமானால் ஒவ்வொரு நபருக்கும் 200 மில்லியன் ரூபா பாரிய செலவீனம் ஏற்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளை அவதானித்தால், முதல் 5 வேட்பாளர்களில் ஒரு சிலரைத் தவிர, மீதமுள்ள வேட்பாளர்கள் மொத்த வாக்குகளில் 2% அல்லது அதற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

இது இவ்வாறு இருக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு என வேட்புமனுத் தாக்கல் செய்வதாக கூறி இவ்வளவு பெரிய பண தொகையை வைப்பிலிடுவது பற்றி சிந்தித்தால் நகைப்புக்குரியதாக உள்ளது.

நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது வருகிறது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொது தேர்தலையோ நடத்துவதற்கு பெருமளவு பணத்தைச் செலவு செய்வது நடைமுறைச் சாத்தியமில்லை. எனினும், ஜனநாயகத்தை பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு சட்டரீதியாக சாத்தியம் இல்லாத காரணத்தால், ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது இன்றியமையாதது என பல விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். "நிறைவேற்று" ஜனாதிபதி முறை எமது நாட்டுக்கு ஏற்றதல்ல எனவும் சில விமர்சனங்கள் எழுந்தன. இந்த முறையை ஆரம்பித்த 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவு இருந்து வந்தது இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பிரேரணை தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அடுத்த ஐந்து வருடங்களில் இல்லாதொழித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது. எனினும் 1994 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சில வேட்பாளர்கள் முன்மொழிந்த போதிலும் அது நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை என்பதே பிரச்சினையாகும்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.