
இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய 2000 ரூபாய் நாணயத்தாளை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இரண்டு 2000 ரூபாய் நாணயத்தாள்களை ஒப்பிடும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
அதில், உண்மையான நாணயத்தாளில் பாதுகாப்பு நூல் (Security Thread) நேர்க்கோடாக இருக்கும் எனவும் போலி நாணயத்தாளில் அது இடைவெளிகளைக் கொண்ட கோடுகளாக (dashed line) இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் எச்சரிக்கைப் பதிவு
2000 ரூபாய் கள்ள நோட்டு –
அனைவரும் அவதானமாக இருக்கவும். அசல் நோட்டைப் போலவே தோற்றமளிக்கும் கள்ள நோட்டுகள் இந்த நாட்களில் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய 2000 ரூபாய் நோட்டு இன்னும் பலருக்குப் பரிச்சயமில்லாததால், எதற்கும் நன்றாகச் சரிபார்த்து வாங்குங்கள்.
அசல் 2000 நோட்டில்: பாதுகாப்பு நூல் (இழை) ஒரு நேர்க்கோடாகத் தொடர்ந்து இருக்கும்.
கள்ள நோட்டில்: இடைவெளி விட்ட கோடுகள் (கட்டுக் கோடுகள்) மட்டுமே இருக்கும். அத்துடன் இதில் சிங்கம் அடையாளமும் (Watermark) இருக்காது. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.01.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கை மத்திய வங்கி தனது 75-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 ஆகஸ்ட் 29 முதல் புதிய 2000 ரூபா நாணயத்தாளை பொது சுழற்சிக்கு வெளியிட்டது. இந்த நாணயத்தாள்கள் 50 மில்லியன் வரையறுக்கப்பட்ட வெளியீடாகும் என மத்திய வங்கி அறிவித்திருந்தது.
2000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பாக நாம் மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பு (Fact-Check) அறிக்கை இங்கே வழங்கப்பட்டுள்ளது.
புதிய 2000 ரூபா நாணயத் தாளின் முன்புறம் மற்றும் பின்புறம் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் விளக்கமாக விவரிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கை இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய 2000 ரூபா நாணயத்தாளில் இடம்பெற்றுள்ள அடையாளங்கள் (சின்னங்கள்) மற்றும் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
நாணயத்தாளின் முன்புறத்தில், இலங்கை மத்திய வங்கியின் பிரதான தலைமையகக் கட்டிடம், கொழும்பு விளக்குக் கோபுரக் கடிகாரத் தூண் ஆகியவற்றுடன், சமீபகால நகர்ப்புற வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் கொழும்பு நகரத்தில் புதிதாக இணைக்கப்பட்ட கட்டிடங்கள் தொலைவில் காணப்படும் விதமாகக் காட்டும் ஒரு உருவப்படம் மற்றும் 75-ஆவது ஆண்டு நினைவு சின்னமும் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பை மேலும் மேம்படுத்தவும், செல்லுபடியாகும் நாணயத்தாள்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணவும் உதவும் வகையில், நிறம் மாறும் பாதுகாப்பு நூல் (Color-changing security thread) இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பார்வை குறைபாடுடைய நபர்கள் தொடுதலின் மூலம் பண நோட்டினை அடையாளம் காண உதவுவதற்காக, ஒவ்வொரு முனையத்திலும் வைரம் வடிவத்துடன் கூடிய உயர்த்தி அச்சிடப்பட்ட ஆறு கோடுகள், நோட்டின் இடது மற்றும் வலது ஓரங்களிலுமாக அச்சிடப்பட்டுள்ளன.
நாணயத்தாளின் பின்புறத்தில், இலங்கை வரைபடத்தின் கலைநயமிக்க உருவப்படம், நீலத் தாமரை மற்றும் மத்திய வங்கியின் Vision Statement ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை பொருளாதார நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கான இலங்கை மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை சின்னமாகக் காட்டுகின்றன.
தொடர்புடைய அதிகாரப்பூர்வ ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாணயத்தாளின் முன்புறம் இடதுபுற மேல் மூலையில், தற்போது விவாதத்திற்குள்ளாகியுள்ள மூன்று இடைவெளி கோடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. அந்த ஆவணத்தில் நாணயத்தாளில் உள்ள அனைத்து கூறுகளுக்கும் பெயரிடப்பட்டு, அவை பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில், விவாதத்திற்கு உள்ளான பகுதி “இடைவெளி கோடுகள்” 3 ( Broken Lines ) என குறிப்பிடப்பட்டுள்ளது.

2000 ரூபா நாணயத்தாளில் உள்ள சிறப்பு பாதுகாப்பு நூல்
அந்தப் பகுதியின் விளக்கத்தில், “பாதுகாப்பு நூலில் நீல நிறத்திலிருந்து பச்சை நிறமாகவும், மீண்டும் பச்சையிலிருந்து நீலமாகவும் நிறம் மாறுவதை காண, நாணயத்தாளை மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் சாய்த்துப் பார்க்கவும். மேலும், பாதுகாப்பு நூலில் கொழும்பு விளக்குக் கோபுரக் கடிகாரத் தூண் மற்றும் ‘2000’ என்ற இலக்கம் இடம்பெற்றுள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2000 ரூபா நாணயத்தாள் பற்றிய விரிவான விளக்கத்துடன் கூடிய ஒரு காணொளியையும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அந்தக் காணொளியில், நாணயத்தாளின் முன்புறமும் பின்புறமும் உள்ள அனைத்து அம்சங்களும் தெளிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாணயத்தாளின் முன்புறத்தில் மூன்று இடைவெளி கோடுகள் (Broken Lines) இருப்பதும் தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்
இதுதொடர்பில் நாம் இலங்கை மத்திய வங்கியிடம் வினவியிருந்தோம் இதன்போது, உண்மையான புதிய 2000 ரூபா நாணயத்தாளின் முன்புறத்தில் மூன்று இடைவெளி கோடுகள் (பாதுகாப்பு நூல்) இருப்பதும், அதனை சூரியஒளிக்கோ அல்லது வேறு ஒளி மூலத்திற்கோ எதிராக வைத்துப் பார்க்கும் போது அது ஒரே கோடாகத் தோன்றுவதும் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், இது மற்ற நாணயத்தாளிகளிலும் காணப்படும் ஒரு பொதுவான அம்சம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, இந்த அம்சத்தின் அடிப்படையில் மட்டும் ஒரு நாணயத்தாள் போலியானதா அல்லது உண்மையானதா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்றும், போலி நாணயத்தாள்களை தயாரிக்கும் தரப்பினர் பல்வேறு முறைகளை பயன்படுத்துவதால், சந்தேகமான சந்தர்ப்பங்களில் பல பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைத்து பரிசோதிக்க வேண்டும் என்பதே மத்திய வங்கியின் அறிவுரையாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.
மேலும், 2000 ரூபா போலி நாணயத்தாள்கள் சுழற்சியில் உள்ளன என சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் மற்றும் அவற்றின் பின்னணி தொடர்பாகவும் இலங்கை மத்திய வங்கி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம்
இலங்கை மத்திய வங்கி வழங்கிய மேற்குறிப்பிட்ட ஆவணத்தில் உள்ள 2000 ரூபா நாணயத்தாள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மாற்றம் காணப்படும் நாணயத்தாள்களை நெருக்கமாக ஒப்பிட்டு பரிசோதித்தபோது, சமூக ஊடக பதிவுகளில் காட்டப்பட்ட நாணயத்தாள்களில் பல அசாதாரண அம்சங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
அந்த நாணயத்தாள்கள் இரண்டிலும் “இலங்கை மத்திய வங்கி, Sri Lanka Central Bank, இரண்டு ஆயிரம் ரூபாய் என்ற எழுத்துகளின் வடிவமைப்பு தவறானது என்பதனை தெளிவாக காணமுடிந்தது. இந்த வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, அந்த புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் செயலிகளில் உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
அதன் மூலம், இந்த இரு நாணயத்தாள்களுடன் கூடிய புகைப்படம் Google-இன் Gemini AI மூலம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

2000 ரூபா போலி நாணயத்தாள்கள் சுழற்சியில் உள்ளதாக விழிப்புடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்ட சிறப்பு பொலிஸ் அறிவிப்பு தொடர்பான அறிக்கைகளை காணமுடியவில்லை
கடந்த பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து பொலஸார் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், ஜனவரி மாதத்தில் அதுபோன்ற சிறப்பு எச்சரிக்கையையோ அல்லது சமீபத்தில் 2000 ரூபாய் நாணயத்தாள் குறித்த சிறப்பு எச்சரிக்கை வெளியிட்ப்பட்டமை தொடர்பில் எந்த அறிக்கைகளும் இல்லை.
பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் டிசம்பர் 16 ஆம் திகதி தெரிவித்திருந்தார். இதன்போது கடந்த ஆண்டு புழக்கத்தில் விடப்பட்டு இலங்கை பொலிஸினால் பறிமுதல் செய்யப்பட்ட போலி ரூபாய் நாணயத்தாள்கள் முறையே 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 535, 2000 ரூ போலி நாணயத்தாள்கள் இரண்டு,1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 401 மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள் 109 ஆகும். முழு அறிக்கை
பொலிஸ் ஊடகப் பிரிவு
இந்த விவகாரம் தொடர்பாக நாம் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவியபோது. போலி 2000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் எழுந்துள்ள போதிலும் இதுவரை அது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மாற்றுவது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்கள் மூலம் பொதுமக்களை தெளிவுப்படுத்தியிருந்தார், மேலும் அங்கு தெரிவிக்கப்படும் முறைகள் மூலம் பொதுமக்கள் போலி நாணயத்தாளை அடையாளம் காண முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியது.
போலி நாணயத்தாள்கள் மற்றும் உண்மையான நாணயத்தாள்களை எவ்வாறு வேறுப்படுத்தி அடையாளம் காண்பது?
போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், உண்மையான நாணயத்தாளை மற்றும் போலி நாணயத்தாள்களை தெளிவாக வேறுபடுத்தி அடையாளம் காணக் கூடிய வகையில், இலங்கை மத்திய வங்கி வெளியிடும் அனைத்து நாணயத்தாள்களிலும் Watermark, பாதுகாப்பு நூல் (Security Thread), சாய்வு கொண்ட மூலைகள், வெளிச்சம் ஊடுருவும் குறியீடு (See-through Register), மிகச் சிறிய எழுத்துகள் (Micro Text), பார்வை குறைபாடுடைய நபர்களுக்காக பயன்படுத்தப்படும் தொடுதல் அடையாளங்கள் உள்ளிட்ட பல உயர்தர பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி அச்சிடப்படுகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
இதனை மேலும் தெளிவாக விளக்குவதற்காக, 5000 ரூபா நாணயத்தாள் சாதாரணமாக காணப்படும் விதம், அதை சூரிய ஒளியில் காண்பிக்கும் போது காணப்படும் விதம்ஆகியவற்றை புகைப்படங்களின் மூலம் நாங்கள் வழங்கியுள்ளோம். சூரிய ஒளியில் காண்பிக்கும் போது நாணயத்தாளில் பாதுகாப்பு அம்சங்கள் தெளிவாக வெளிப்படுவதை காண முடிகிறது.


மேலே உள்ள நாணயத்தாளில் முன்பக்கதின் வலதுபுறத்தில் உள்ள பறவைகளின் படங்கள் நாணயத்தாளின் “நீர் அடையாளமாக” காட்டப்பட்டுள்ளன. நாணயத்தாளின் மதிப்பு ஒரு சிறப்பு நீர் அடையாளமாக செங்குத்தாக எண்களில் காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நூல் (Security Thread) பற்றிய விளக்கம்:
பாதுகாப்பு நூல்கள் (Security Threads) நாணயத்தாள்களை பொருத்து வேறுபடும். அதிக மதிப்புள்ள நாணயத்தாள்கள், உதாரணமாக 5000, 2000, 1000, 500 ரூபாய் நாணயத்தாள்களில் “ஸ்டார் குரோம்” (Star Chrome) பாதுகாப்பு நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நிறங்கள் இடை இடையே சிவப்பு மற்றும் பச்சை போன்ற நிறங்களாக மாறி தோன்றும்.
100, 50 மற்றும் 20 ரூபா நாணயத்தாள்களில் உள்ள நூல்கள் முழுவதும் நாணயத்தாள்களுக்குள் பொருத்தப்பட்டு, தொடர் கோடுகளாக (Continuous Line) காணப்படும்.
நாணயத்தாளை ஒளிக்கேதிராக வைத்து பார்த்தால், முன்புறத்தில் இரண்டு நிறங்களில் காட்டப்பட்ட மதிப்பு இலக்கங்கள் (பட்டாம்பூச்சி உருவம் அருகே) பின்புறத்தில் உள்ள அதே மதிப்பு இலக்கங்களுடன் சரிவர பொருந்தி முழு இலக்கமாக தோன்றும். இதையே நாணயத்தாள்களின் “வெளிச்சம் ஊடுருவும் குறியீடு” (See-through Register) என அழைக்கப்படுகிறது.
பட்டாம்பூச்சி உருவத்தின் கீழ்பகுதியில் மிகச் சிறிய எழுத்தாக “CBSL” மற்றும் நாணயத்தாளின் மதிப்பு இலக்கங்களும் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் கவனமாக ஆய்வு செய்தால் போலி நாணயத்தாள்களை அடையாளம் காண முடியும்.
நாணயத்தாளின் இடது மூலைக்கு அருகே, அச்சிடப்பட்ட மதிப்புகள் அதன் மதிப்பின் உயர்வை காட்டும் விதத்தில் மிக நுணுக்கமாக (Braille-போன்ற) அச்சிடப்பட்டுள்ளன, இது பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு நாணயத்தாளின் மதிப்பை அடையாளம் காண உதவுகிறது.
நாணயத்தாளை விரல் தொடுதலின் மூலம் பரிசோதித்தால், உயர்த்தி அச்சிடப்பட்ட பகுதியை (Raised Print Area) கண்டறியலாம். இதன்மூலம் கூட போலி நாணயத்தாள்களை வேறுபடுத்தி அடையாளம் காண முடியும்.
போலி நாணயத்தாள்களில் போலியாக பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு நூலை எவ்வாறு அடையாளம் காண்பது?
போலி நாணயத்தாள்களில் உள்ள பாதுகாப்பு நூலில் நிற மாற்றம் செய்யும் நூல் பெரும்பாலான சமயங்களில் இடம்பெற்றிருக்காது.
செல்லுபடியான உண்மையான நாணயத்தாள்களில் பாதுகாப்பு நூல் பணம் தயாரிக்கும் போது உள்ளடக்கப்பட்டிருந்தாலும், போலி நாணயத்தாள்களை உருவாக்கும் போது அந்த நூலை தவறாக வெளியே ஒழுங்கமைத்தல் அல்லது உள்ளே ஒழுங்கமைத்தல் போன்ற முறைகளால் பயன்படுத்துகின்றனர். இதனால், நாணயத்தாளை கைப்பற்றும் போது, அது போலி என்று எளிதில் கவனித்து அடையாளம் காண முடியும்.
போலி நாணயத்தாள்களில் பாதுகாப்பு நூலில் நிற மாறுபடாது, மேலும் அந்த நூலில் நாணயத்தாள்களின் மதிப்பும் பெரும்பாலான நேரங்களில் குறிப்பிடப்பட்டிருக்காது.
கூடுதலாக, அந்த நூல் தொடர்ச்சியாக (Unbroken) இல்லாமல், துண்டாகவோ அல்லது முறையாக இல்லாமல் காணப்படுவது கூட சில போலி நாணயத்தாள்களின் மற்றொரு அடையாளமாகும்.
போலி நாணயத்தாள்களை அடையாளம் காண்பதற்கான விரிவான விளக்கங்கள் வெளியிடப்பட்ட அறிக்கையை காண்க.
இலங்கையில் பணம் அச்சிடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது?
2023ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் படி, இலங்கையில் நாணயத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள் (Coins) ஆகியவற்றை வெளியீடு செய்யும் உச்ச அதிகாரமும், நிர்வாகப் பொறுப்பும் இலங்கை மத்திய வங்கிக்கு உள்ளது. இதை தவிர எந்த தனி நபர் அல்லது நிறுவனம் கூட இந்த நாணயத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளை சுழற்சிக்காக வெளியிட முடியாது அவ்வாறு வெளியிடப்படும் நாணயங்கள் போலி நாணயங்கள் எனக் கருதப்படும்.
தற்போது, 5000, 2000, 1000, 500, 200, 100, 50, 20 மற்றும் 10, 5, 2 மற்றும் 1 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் (தற்போது ரூ. 10, ரூ. 5, ரூ. 2 மற்றும் ரூ. 1 நோட்டுகளுக்கு பதிலாக நாண குற்றிகளாக வழங்கப்பட்டுள்ளன) மற்றும் ரூ. 20, ரூ. 10, ரூ. 5, ரூ. 2, ரூ. 1, 50 சதம், 25 சதம், 10 சதம், 5 சதம், 2 சதம் மற்றும் 1 சதம் மதிப்புள்ள நாணயங்கள் சுழற்சியில் உள்ளன.
போலி நாணயத்தாளை பெற்றால் என்ன செய்ய வேண்டும்?
இலங்கை மத்திய வங்கியினை தவிர, எந்த தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம் சுழற்சிக்காக வெளியிடும் பண நோட்டுகள் மற்றும் நாணயங்கள் போலி பணமாக கருதப்படும். போலி பண நோட்டுகளை பணம் செலுத்துவதற்காக பயன்படுத்தக் கூடாது.
ஒவ்வொரு முறையும் பொருள் பரிமாற்றங்களில் போலி பணத்தைத் பயன்படுத்துவது குற்றம் ஆகும். இதற்காக சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
யாராவது போலி நோட்டை கண்டறிந்தால், அதை ஏற்காமல் மறுக்க வேண்டும். ஏற்கப்பட்டிருந்தால், அந்த நபர் எப்படி பெற்றார் என்பதையும் நினைவில் வைத்து, உடனடியாக இலங்கை பொலிஸின் குற்ற விசாரணை பிரிவு (CID) – போலி பணக் கண்காணிப்பு பிரிவிற்கு தெரிவிக்க வேண்டும். தொடர்பு எண்கள்: 0112422176 அல்லது 0112326670. அவர்களின் அறிவுரைகளின் படி செயல்பட வேண்டும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
பண பரிமாற்றத்தின் போது போலி என்று சந்தேகிக்கப்படும் நோட்டை பெற்றால் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
புதிய 2000 ரூபா நாணயத்தாள்
இந்த நாணயத்தாள் நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் கையொப்பத்துடன், மத்திய வங்கி ஆளுநர் என்ற முறையில் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களின் கையொப்பத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது. இது நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்படும் முதலாவது நாணயத்தாள் ஆகும்.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றின்படி, இந்த 2000 ரூபா நாணயத்தாள் சிறப்பு நினைவு நாணயத்தாளாக சுழற்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னேற்றுவதை பிரதிபலிக்கும் விதமாக, இந்த நாணயத்தாள் “செல்வமிகுந்த நிலைத்தன்மைக்கு” என்ற ஆண்டு நிறைவு கருப்பொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஐந்தாவது நினைவு நாணயத்தாளாகும்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட 2000 ரூபா நாணயத்தாள்கள் இரண்டை ஒப்பிட்டு, ஒரு உண்மையான நாணயத்தாளையும் ஒரு போலிய நாணயத்தாளையும் காட்டும் படம் , செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் என்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், உண்மையான மற்றும் போலி நாணயத்தாள்களை வேறுபடுத்துவதற்கான அடிப்படை பாதுகாப்பு அம்சமாக, ஒரு உண்மையான நாணயத்தாளை சூரிய ஒளியில் வைத்திருக்கும்போது பாதுகாப்பு நூலைக் காணலாம், அதே நேரத்தில் ஒரு கள்ள நாணயத்தாளில் அதை பார்க்க முடியாது.
புதிய 2000 ரூபா நாணயத்தாளை போன்ற போலி நாணயத்தாள்களை சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்தில் விடப்படுவதாகவோ அல்லது அவ்வாறு அச்சிடப்பட்டதால் எவரும் கைது செய்யப்பட்டதாகவோ எந்த அறிக்கையும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.
எனவே, நாணயத்தாள்களில் பாதுகாப்பு அம்சங்களைக் காட்ட தகவல் குறிப்புகளை உருவாக்குவது நல்லது என்றாலும், இந்த வழியில் தவறான படங்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தும்.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:போலி மற்றும் உண்மையான 2000 ரூபா நாணயத்தாள்கள் என பகிரப்படும் படம் உண்மையா?
Fact Check By: Suji ShabeedhranResult: Misleading


