
கடந்த சனிக்கிழமை மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக மேற்கொண்ட பிரசாரத்தின் போது” முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுப்பதற்கு, நீங்கள் கோத்தாபாயவிற்கு வாக்களிக்க வேண்டும்.” என தெரிவித்தாக UTV Tamil செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த செய்தி தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

கிரிகெட் தல என்ற பேஸ்புக் கணக்கில் “முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுப்பதற்கு, நீங்கள் கோத்தாபாயவிற்கு வாக்களிக்க வேண்டும்.
நாமல் தெரிவிப்பு!
இவன் இப்பவே இப்படி இனவாத பேச்சு பேசுகிறான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களே உங்களுக்கு ஆப்பு வைப்பான். அல்லாஹ்வுக்காக இவனுக்கு எதிராக வாக்களியுங்கல். கட்டாயம் பகிருங்கள்
வீடியோ” என்று கடந்த ஞாயிற்றுகிழமை அன்று (20.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் UTV செய்தி காணொளியொன்றும் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் UTV Tamil HD பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆய்வு செய்த வேளையில், அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ”வடக்கில் தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தியடையவில்லை முஸ்லிம் பிரதேசங்களே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.“ என்ற தலைப்பில் குறித்த காணொளி பதிவானது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாம் குறித்த வீடியோவினை ஆய்வுக்கு உட்படுத்தினோம்,
குறித்த வீடியோவில் செய்திவாசிப்பாளர், முஸ்லீம் பிரதேசங்களின் ஆபிவிருத்தியினை தடுக்கவேண்டும் ஆயின்,கோட்டபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்” என தமது செய்தியினை வாசிக்கின்றார்.
நாமல் ராஜபக்ஷ குறித்த உரையாடலின் போது முஸ்லீம் பிரதேசங்களின் அபிவிருத்தியினை தடுக்கவேண்டும் ஆயின்,கோட்டபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெரித்திருக்கவில்லை என்பது அவர் உரையாடிய தேர்தல் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியின் மூலம் தெளிவாக தெரிகின்றது.
குறித்த வீடியோவில், அவர் நான் இனவாதத்தினை இங்கு பேசவில்லை முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்றுவரும் போது இருக்கும் அபிவிருத்தி தமிழ் பிரதேசங்களில் இருக்கும் அபிவிருத்திக்கு பெரும் வித்தியாசம் உள்ளது. இந்த நிலைமை மாறவேண்டும். இது மாறுவதற்கு ஒரே வழி கோட்டபாயவிற்கு வாக்களிப்பதாகும், என தெரிவித்துள்ளார்.
இது குறித்த பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவின் வழக்கறிஞர்கள் இலங்கை தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாக தெரிவித்து வெளியான செய்து போலி என முடிவு செய்யப்படுகிறது.

Title:முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுக்க, கோட்டபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றாரா நாமல்?
Fact Check By: Nelson ManiResult: False
