
இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச கடந்த திங்கள் கிழமை (18.11.2019) பதிவி பிரமானம் செய்துகொண்டார்.
இதேவேளையில் சிலர் பேஸ்புக் மற்றும் சில இணையத்தளங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கை தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடவேண்டும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டிருந்தன.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.
தகவலின் விவரம்:

Yarl Deepam என்ற பேஸ்புக் பக்கத்தில் “தேசியகீதம் இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே – ஜனாதிபதியின் உத்தரவு!” என்று நேற்று முன்தினம் (22.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன
Tamilwin | News link | Archived Link |
Ceylon Nation | News Link | Archived Link |
Yarl Deepam | News Link | Archived Link |
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டவேளையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவினை பதிவேற்றிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த பதிவில் தமிழில் தேசிய கீதம் பாடுவது தடை என புதிய ஜனாதிபதியால் எந்த பணிப்புரையும் விடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார எம்பி தெரிவித்ததாக மனோ கனேசன் பதிவிட்டிருந்தார்.
மேலும், இது தொடர்பாக நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு தொடர்பு கொண்டு வினவியபோது, அவர்கள் குறித்த விடயம் போலியானது என தெரிவித்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் புதிய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ச அவரது உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களில் நேற்று ஒரு பதிவினை பதிவிட்டார்.
அதில்,”தற்போது சமூக ஊடகங்களில், என்னால் அறிவிக்கப்பட்ட ”அரச தீர்மானங்கள்” என்ற பெயரில், பல தவறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
எனது எந்தவொரு முடிவு தொடர்பான அறிவிப்பும் ஜனாதிபதி செயலகத்தின் முத்திரை பொறிக்கப்படடு,ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அல்லது எனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களின் ஊடாக மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதை தயவு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தேசியகீதம் இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே – ஜனாதிபதியின் உத்தரவு என கூறப்படும் செய்தி போலியானது என்று எமது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.