
இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அரபு உடையில் ஒருவர் இந்திய – துபாய் கொடியுடன் வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், திடீரென்று போலீசார் வருகின்றனர். அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்படும் காட்சிகள் வருகின்றன. நிலைத் தகவலில், “இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை துபாய் நாட்டில் அந்த நாட்டின் காவல் துறை அதிகாரிகள் இணைந்து கொண்டாடிய காட்சி இடம் புரூஜ் கலிபாஃ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இந்த பதிவை Nijam Mideen என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 16ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு பதிவில் துபாய் இளவரசர் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
வீடியோவை பார்த்தால் துபாய் போலீஸ் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடியது போல இல்லை. கொடியை அசைத்துக் கொண்டாடிய நபர் போலீஸ் போல தெரியவில்லை. மேலும், அந்த நபர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சில போலீசாரும் பங்கேற்றிருப்பது போல உள்ளது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவில் @iqbal_hatboor என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி ஒரு ஐடி ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். இன்ஸ்டாகிராமில் நமக்கு இந்த வீடியோவை இந்த ஐடி-யில் உள்ள நபர் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதிலேயே அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தின் லிங்க்கும் இருந்தது. அந்த நபர் பற்றிய குறிப்பு பகுதியில் பார்த்த போது அவர் தன்னை ஒரு தொழிலதிபர் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் அவர் போலீஸ் இல்லை என்பது தெளிவானது.
அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்ட வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், “இந்தியாவின் 77வது சுதந்திர தினம் புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது. ஆதரவளித்த ஐக்கிய அரசு எமிரேட் மற்றும் துபாய் காவல் துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது சுதந்திர தின கொண்டாட்டம் தொடர்பாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியையும் ஷேர் செய்திருந்தார். Mathrubhumi News வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்தோம். அந்த நபர் மலையாளத்தில் பேட்டி அளித்தார். புர்ஜ்கலிஃபாவில் சுதந்திர தினம் கொண்டாடியதில் மகிழ்ச்சி என்று அவர் கூறினார். அந்த செய்தியில், புர்ஜ் கலிஃபாவின் 123வது மாடியில் சுதந்திர தின கொண்டாட்டாட்டத்தை இக்பால் என்பவர் கொண்டாடினார். இந்தியாவின் காசர்கோட்டை (கேரளா) சார்ந்த ஏற்றுமதி தொழிலதிபரான இக்பால், 2019ம் ஆண்டு புர்ஜ் கலிஃபாவின் ஹெலிகாப்டர் தளத்தில் வைத்து இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடியது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் துபாய் போலீஸ் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடியது தவறான தகவல் என்பது தெளிவாகிறது. இந்தியர் ஒருவர் துபாயில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய விழாவில் துபாய் போலீசார் பங்கேற்றுள்ளனர். துபாய் போலீஸ் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடியது என்பது தவறான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
துபாயில் இந்திய தொழிலதிபர் ஒருவர் நடத்திய சுதந்திர தின விழா வீடியோவை துபாய் போலீஸ் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடியது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியதா?
Written By: Fact Crescendo TeamResult: False
