பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்தாரா?

இலங்கை | Sri Lanka

புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர் புதிதாக பதிவியேற்ற சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் கல்வித் தகைமை தொடர்பில் சமூகத்தில் பலவிதமான சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன.

அதன் பின்னணியில் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித்தகைமை தொடர்பில் எழுந்த பிரச்சினையின் பின்னர் அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவைகையில் தற்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கலாதிநிதி பட்டம் தொடர்பில் தற்போது பாரிய கேள்விகள் எழும்பியுள்ள நிலையில் அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விபரம் (what is the claim)

Facebook Link | Archived Link

மேலும் இது தொடர்பில் பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த பதவில் ஹரிணி PHD பட்டம் பெற்ற எடின்பர்க் பல்கலைக்கழகம் இது 3 மாத பட்டம் மட்டுமே என்று கூறுகிறது என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.12 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தும் விடயங்கள் குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது அவ்வாறு எந்தவித செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற இணையத்தளத்தில் ஆராய்ந்தபோது அதில் அவரது பெயர் கலாநிதி ஹரிணி அமரசூரிய என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவரது தொழில்முறை தகுதியாக அவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

சமூகவியலில்  இளங்கலைப் பட்டப்படிப்பும், மானுடவியல் அபிவிருத்தி ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும், சமூக மானுடவியலில் கலாநிதி பட்டமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின்  Linkdin கணக்கில் அவரது பெயர் கலாநிதி ஹரிணி அமரசூரிய என்றும், 2012 முதல் 2020 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முழுநேர சமூக அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அவர் டில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை பட்டமும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மெக்குயுரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், எடின்பர்க் மற்றும் குயின் மார்க்ரட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டமும் பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரிணி அமரசூரிய 2020 ஆம் ஆண்டு முதல் முழுநேர அரசியலில் ஈடுபட்டதுடன், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். எனவே அந்த நாட்களில் வெளியான செய்திகளிலும் கலாநிதி ஹரினி அமரசூரிய என்றே குறிப்பிடப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

மேலும் அவர் திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தேசிய நிபுணர்கள் அமைப்பின் கல்வி மற்றும் கொள்கைக் குழுவின் உறுப்பினராகவும், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். Link

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் அவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் சமூக மானுடவியலில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றியதாகவும் , அவர் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றிய தகவல்களையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த இணையத்தளத்திலும் அவரின் பெயர் கலாநிதி ஹரிணி அமரசூரிய என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அவரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தற்போது சமூகத்தில் கேள்வி எழும்பியுள்ளதனால் நாம் அது தொடர்பில் அவர் பட்டம் பெற்றதாக கூறப்படும் எடின்பர்க் மற்றும் குயின் மார்க்ரட் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்களில் ஆய்வு செய்தோம்.

ஸ்கொட்லாந்தின் எடிக்பர்க் பல்கலைக்கழகம்

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, அவர் 2010 இல் சமூக அறிவியலில் கலாநிதி பட்டம் பெற்றதாகவும்  குறிப்பிட்டுள்ளது.

மேலும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மனிதநேய உயர் கற்கைகள் நிறுவகத்தில் (IASH) சக ஊழியராகப் பணிபுரிந்தார் என்றும் கலாநிதி அமரசூரிய தனது அரசியல் வாழ்க்கைக்கு முன்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியதாகவும் குறித்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவரது கலாநிதி  பட்டத்தை மேற்பார்வையிட்ட பேராசிரியர் ஜொனாதன் ஸ்பென்சர் மற்றும் மானுடவியல் துறையின் தலைவர் பேராசிரியர் மேக்னஸ் கோர்ஸ் அவர்களும் அவரைப் பற்றி கருத்துத் தெரிவித்திருந்தனர்.

குயின் மார்க்ரட் பல்கலைக்கழகம்

இதேவேளை ஹரிணி அமரசூரிய 2011 ஆம் ஆண்டு குயின் மார்க்ரட் பல்கலைக்கழகத்தில் உலகலாவிய சுகாதார மற்றும் அபிவிருத்தி பட்டம் பெற்றவர் என பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இலங்கையின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமைக்கு அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் 3 மாத புலைப்பரிசில் தொடர்பான பின்னணி என்ன?

ஹரிணி அமரசூரிய கலாநிதி பட்டம் பெற்ற எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அவருக்கு இருப்பது 3 மாதகால அதி விசேட புலமைப்பரிசில் மாத்திரமே என சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து நாம் ஆய்வு செய்தோம்.

அவர் 2019 ஆம் ஆண்டு முதல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மனிதநேய உயர் கற்கைகள் நிறுவகத்தின் உறுப்பினராக 3 மாதங்கள் அங்கு கடமையாற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


அது தொடர்பில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மனிதநேய உயர் கற்கைகள் நிறுவகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றதற்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் பணியாளர்களுடன் மானுடவியல், மனித உரிமைகள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய ERC நிதி திட்டத்தில் பணியாற்றியுள்ளார்.

தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானதன் காரணமாக ஹரிணி அமரசூரிய எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மனிதநேய உயர் கற்கைகள் நிறுவகத்தின் நியமன உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளதாக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரிணி அமரசூரியவின் கல்வியியல் ஆய்வு

ஹரிணி அமரசூரியவின் Linkedin கணக்கிலும் நாம் மேலே குறிப்பிட்டுள்ள செய்தி அறிக்கைகளிலும் அவர் சமூக அறிவியல் துறைகள் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே உருவாக்கக்கூடிய Google Scholar கணக்கு ஹரிணிக்கு உள்ளதா என ஆராய்ந்தோம். அதன்போது அவரது பெயரில் Google Scholar கணக்கு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் நடத்திய பல ஆய்வுகள் அங்கு வெளியிடப்பட்டுள்ளன என்பதையும் நாம் உறுதிப்படுத்தினோம்.

அவரின் Google Scholar கணக்கு

அந்த கணக்கில், அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான எம்.பி. குமார, தனது பேஸ்புக் பக்கத்தில் ஹரிணி அமரசூரியவின் Google Scholar கணக்கில் h-index 9 இருப்பதாகவும், அதாவது அவரது 9 ஆய்வுக் கட்டுரைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஹரிணி அமரசூரிய கலாநிதி பட்டம் பெற்ற ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இணையத்தளத்தில் 2010 இல் அவரது கலாநிதிப் பட்டத்திற்காக வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையை பார்வையிட

இதேவேளை கல்விசார் ஆராய்ச்சிகளை வெளியிடும் ResearchGate இணையத்தளத்தில் ஹரிணி அமரசூரியவின் ஆய்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று , ஹரிணி அமரசூரியவின் கலாநிதி பட்ட ஆய்வறிக்கையின் மேற்பார்வையாளராகச் (supervisor)  செயற்பட்ட தெற்காசிய மொழி, கலாச்சாரம் மற்றும் சமூகத்துறை தொடர்பான கௌரவ கலாநிதி ஜொனாதன் ஸ்பென்சர்(Jonathan Spencer), ஹரிணி பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்ட வேளையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion:முடிவு

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பல கல்வியியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பதுடன் ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் மற்றும் குயின் மார்க்ரட் பல்கலைக்கழகங்களில் கலாநிதி  பட்டம் பெற்றுள்ளார் என்பதும் தெளிவாகிறது

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்தாரா?

Fact Check By: suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *