76000 ரூபாய்க்கு விற்கப்பட்ட புற்றுநோய் மருந்து 370 ரூபாய்க்கு விலை குறைக்கப்பட்டதா?

Misleading மருத்துவம்

76000 ரூபாவிற்கு விற்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து தற்போது 370 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தற்போது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதன.

அந்தவகையில் குறித்த பதிவுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் 76000 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Cancer மருந்து அதே நிறுவனத்திடமிருந்து 370 ரூபாய்க்கு.

இலங்கையில மிகப்பெரிய Scam எங்கே நடக்குது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம் அது Government Tender Procedure (Public Procurement)ஐ

அதிலும் மருந்துகள். அந்த மருந்துகளிலும் விசேடமாக புற்றுநோய் மருந்துகள். 

புற்றுநோய் மருந்துகளை பொறுத்தவரையில் போட்டியாளர்கள் குறைவு. இதனால் Monopolyக்கு பல வாய்ப்புகள் உள்ளது.  ஒவ்வொரு மருந்தும் பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை வருவதால் அதில் செய்யும் சிறு ஊழலிலும் பெருந்தொகை பணத்தை ஈட்டலாம்.

(முன்னாள் சுகாதார அமைச்சரும் புற்றுநோய் மருந்தில் செய்த ஊழலால் சிறை சென்றார்)

இன்றுவரை 76 ஆயிரம் ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்தை இந்த அரசாங்கம் 370 ரூபாய்க்கு இறக்குமதி செய்து காட்டியது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்..

இது எவ்வாறு சாத்தியமாகியது? பொதுவாக சில கேன்சர் மருந்துகளுக்கு ஓர் இரண்டு நிறுவனங்களே காணப்படுகின்றன. எனவே அவை விதிக்கும் விலையே இறுதியாகி விடுகிறது. அந்த சில நிறுவனங்கள் தமக்குள் ஒப்பந்தங்களை செய்துகொண்டு விலையை ஏற்றும். இல்லையேல் சட்டவிரோதமாக Tender Committeeயை வளைத்து போட்டுக்கொண்டு போட்டி நிறுவனங்களை சாக்கு போக்கு சொல்லி வெளியேற்றி தனிக்காட்டு ராஜாவாக (Monopoly) செயற்படும்.

இதை வைத்துக் கொண்டு உயர் மட்டங்களில் பல ஊழல் நடைபெறுகிறது.

அமைச்சரின் கருத்த்துப்படி தனியே ஒரு நிறுவனத்திடம் இருந்த ஏகபோக உரிமையை அவற்றுக்கு போட்டியாக மூன்று நிறுவனங்களை அரசாங்கம் பதிவு செய்ததும் ஏற்கனவே 76 ஆயிரம் ரூபாய்க்கு மருந்து வழங்கிய அதே நிறுவனம் 370 க்கு மருந்தை வழங்க முன் வந்தது. 

இதற்குத்தான் கீரை கிடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள்.

Real #CleanSriLanka என்பது இதுதான். நல்லதை வாழ்த்தி வரவேற்போம். என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.19 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

லங்கா தீப இணையத்தளத்தில் 76000 இற்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்தை தற்போது 370 ரூபாவிற்கு வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டு வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டே சமூக ஊடகங்களில் இது பெரும் பேசுபொருளாக மாறியது.

புற்றுநோய்க்கான மருந்தின் விலை தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே லங்காதீப இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியிருந்தது.

ஒரு தடுப்பூசியின் விலை 76,000 ரூபா  என்றும், இந்த மருந்தைப் வாங்குவதற்கு நோயாளிகள் தங்கள் வீடுகளை கூட விற்க வேண்டியிருந்தது என்றும் பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்திருந்தார். புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்த நிறுவனம் இப்போது 370 ரூபாவிற்கு இந்த மருந்தை வழங்கும் என பிரதி அமைச்சர் தெரிவித்தாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற உடுநுவர பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பான ஏதேனும் காணொளிகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அது குறித்த எந்த காணொளிகளையும் எம்மால் காணமுடியவில்லை.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் வேறு பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கவில்லை என்பதனை நாம் உறுதி செய்தோம்.

இருப்பினும், மருந்துகளின் விலை தொடர்பாக 2025.01.15 ஆம் திகதி பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி ஆற்றிய உரையில், இதுவரை ஒரு நிறுவனம் மூலம் மாத்திரமே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சுகாதார அமைச்சு வேறு நிறுவனங்களுக்கு மருந்து இறக்குமதிக்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக மருந்துகளின் விலை 200% குறைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே இதன் காரணமாக 70,000 ஆக இருந்த மருந்துகள் தற்போது 370 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினாலும், அது எந்த மருந்து அல்லது எந்த நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து என்பது தொடர்பில் அவர் தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை. 

குறிப்பாக லங்கா தீப செய்தியிலும் குறித்த தடுப்பூசியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எனினும் சமூக ஊடகங்களில் குறித்த தடுப்பூசி papaverine எனும் தடுப்பூசி என தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் பல விமர்சனங்களும் எழுந்திருந்தது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. 

எனவே அவர்களிடம் இருந்து இது தொடர்பில் உரிய பதில் கிடைத்தவுடன் இந்த கட்டுரையில் அதனை நாம் இணைக்க காத்திருக்கின்றோம்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம

பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி மருந்துகளின் விலை தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் நாம் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரமவிடம் வினவினோம.

இந்த சம்பவத்தின் பின்னணியை விளக்கிய மருத்துவர், 2016 ஆம் ஆண்டில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் 60 மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் அது தவிர தனித்தனியாக மருந்துகளுக்கு கட்டுப்பாடு விலைகள் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை சில சந்தர்ப்பங்களில், மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அந்த மருந்துகளின் விலைகளை குறிப்பிடும் போது, ​​அந்த விலையே குறித்த மருந்தின் விலைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் வைத்தியர் ஆனந்த விஜேவிகரம சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், சமீபத்தில், இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் விலைகளின் உண்மைத் தன்மையை தீர்மானிக்கவும், அந்த விலையை சான்றிதழில் குறிப்பிடுவது தொடர்பிலும்  ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், மருந்து இறக்குமதியாளர்களினால் தொடரப்பட்ட வழக்கையடுத்து, இந்த நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் papaverine எனப்படும் தடுப்பூசி சில இருதய அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் இந்த தடுப்பூசி புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அல்ல என்றும் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம் கூறினார்

இந்த தடுப்பூசிக்கு மருந்தை இறக்குமதி செய்பவர்கள் 2018 ஆம் ஆண்டில் அதற்கு 70,000 ரூபா என்ற விலையை நிர்ணயித்ததுடன் அது மருந்து விலை சான்றிதழிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது மேற்கூறிய நடைமுறையின் கீழ் ஆராயப்படாமல் இடம்பெற்ற ஒன்று எனவும். அதைத் தொடர்ந்து, மருந்து நிறுவனம் இந்த தடுப்பூசியை 70,000 இற்கு அதிக விலைக்கு அரசாங்கத்திற்கு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான டெண்டரின் போது இந்த தடுப்பூசிக்கு முன்னர் குறிப்பிடப்பட்ட விலையே வழங்கப்பட்ட போது, ​​மருந்துகள் கொள்முதல் குழுவின் உறுப்பினர் ஒருவர் இந்த மருந்தை அதிக விலைக்கு இறக்குமதி செய்வது குறித்து சந்தேகங்களை எழுப்பினார். அதாவது, இந்த தடுப்பூசி அவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்காது என்பதால், அதை பரிசோதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, இந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனம் அதன் பதிவைப் புதுப்பிக்க வேண்டியிருந்ததனால் மருந்துகளுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்பட்டபோது, ​​இந்த தடுப்பூசியை சுமார் 300  ரூபாவிற்கு வழங்க முடியும் என்று நிறுவனம் கூறியது. அதாவது, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு  வருவதாலும், சம்பந்தப்பட்ட நாடுகளில் தடுப்பூசியின் விலைகளை அறிந்திருப்பதாலும், இந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனம் அதற்கான விலையைக் குறைத்துள்ளது.

தற்போதுள்ள இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டால், ஏனைய மருந்துகளின் விலைகளையும் இந்த முறையின் கீழ் குறைக்க முடியும் என்று வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

எனவே லங்காதீப வெளியிட்ட செய்தியில், இந்த தடுப்பூசியை கொள்வனவு செய்ய நோயாளிகள் தங்கள் வீடுகளை விற்க வேண்டியிருந்தது என்பது தவறானது என்றும், இந்த தடுப்பூசியானது அரசாங்கத்திற்கே அதிக விலைக்கு வழங்கப்பட்டதாகவும்  விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம் குறிப்பிட்டார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் சவீன் செமகே, நேற்று (20) தெரண Big Focus நிகழ்ச்சியில், லங்காதீப பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது papaverine என்ற மருந்து புற்றுநோய்க்கான தடுப்பூசி அல்ல எனவும் ஊடகங்கள் இது தொடர்பில் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த மருந்து குறிப்பாக இருதய அறுவை சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் ஒருவகை மருந்து எனவும் அவர் கூறினார். 

இந்த தடுப்பூசியின் விலைக் குறைப்பானது  ஒரு அசாதாரண விலைக் குறைப்பாக தென்பட்டாலும் அது உண்மைக்கு புறம்பானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் 2025 ஆம் ஆண்டுக்கு இந்த தடுப்பூசி கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Papaverine Hydrochloride தடுப்பூசி தொடர்பில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பிலும் நாம் ஆராய்ந்தோம்

Papaverine Hydrochloride தடுப்பூசி தொடர்பாக முந்தைய ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள்

2021 ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு, இதய சிகிச்சைக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் 1,560 யூனிட் Papaverine   தடுப்பூசியை 40,868.98 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளது. அதற்காக 68.59 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசியை  255.07 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்.

இதேபோல், கொள்முதல் குழு, டெண்டர்கள் எதுவும் கோராமல், புதிய விலைகள் எதனையும் அறிவிக்காமல்  இந்த தடுப்பூசியை மீண்டும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளதுடன், இதன் விளைவாக 3,125 யூனிட்கள். 127.72 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

50 மில்லியனுக்கும் அதிகமான டெண்டர்களுக்காக மருந்துகள் கொள்முதல் குழுவின் ஐந்து உறுப்பினர்களின் இருப்பு அவசியமாக இருக்கு பட்சத்தில், இந்த சந்தரப்பத்தில் மூன்று உறுப்பினர்களின் ஒப்புதலுடனே இந்த மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தடுப்பூசி கொள்வனவின் போது பெரும் மோசடி மற்றும் முறைகேடு நடந்துள்ளது.

மேலும், சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு, கடன் கடிதங்களைத் (LCs) திறப்பதற்கு முன், தற்போதுள்ள இருப்பு நிலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தியிருந்தது. இந்த அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டு, மருந்துகளுக்கான வருடாந்திர தேவைக்கேற்ப 40% LC கள் திறக்கப்படுவதற்கு பதிலாக, 1,563 யூனிட்டுகளுக்கு LC கள் திறக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 1,421 யூனிட்கள் பயன்படுத்தப்படவில்லை, பல 2023 பெப்ரவரி மாதம் காலவதியாகும் நிலையிலேயே காணப்பட்டுள்ளது.

இருப்பினும், மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு விநியோகஸ்த்தர் மாத்திரமே இருந்தமையினால் , அத்தியாவசிய Papaverine தடுப்பூசியை வாங்க வேண்டிய கட்டாயம் அரச மருந்துக கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மருந்துகளை வழங்குவதற்கு ஒரே ஒரு விநியோகஸ்த்தர் மாத்திரமே இருப்பதாலும், புதிய டெண்டர்களை கோர தவறியதாலும், காலப்போக்கில் நாடு மில்லியன் கணக்கான இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை பார்வையிடவும்

2022 ஆம் ஆண்டில் Papaverine HCI 20mg ஒரு யூனிட்டின் மதிப்பிட்டு விலை 39,942.49 ரூபாய் என மருத்துவ விநியோகப் பிரிவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதே தடுப்பூசியின் 60 மி.கி யூனிட்டின் விலை 41,804.68 ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ விநியோகப் பிரிவு இணையதளத்தில்  2023 ஆம் ஆண்டிற்கான மருந்துகளின் மதிப்பிட்டு  விலை குறித்த அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை, எனினும் 2024 ஆம் ஆண்டிற்கான மருந்துகளுக்கான மதிப்பிட்டு விலை அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்த தடுப்பூசியின் விலை 81327.44 ரூபா என குறிப்பிடப்பட்டிருந்தது.

Papaverine தடுப்பூசியின் சந்தை விலை

இருப்பினும், மற்ற நாடுகளில் Papaverine தடுப்பூசியின் விலைகள் தொடர்பிலும் நாம் ஆராய்ந்தோம், இந்தியாவின் இணையதளம் ஒன்றில், Papaverine 30mg/ml  அதாவது 2ml இன் விலை, 35 இந்திய ரூபாயாகும். இலங்கை ரூபாயாக மாற்றினால், அதன் விலை 120.31 ரூபா.

கனடாவில் 2ml யூனிட் Papaverine விலை 12.80 அமெரிக்க டொலர்கள் ஆகும். அதன்படி, இலங்கை ரூபாயில் அதன் விலை 3,797.31 ரூபாவாகும்

அமெரிக்காவில்  2ml யூனிட் Papaverine விலை 19.60 அமெரிக்க டொலர்கள் ஆகும்.  இலங்கை ரூபாயில் அதன் விலை  5,814.63  ரூபாவாகும்

எனவே இந்தியாவில் இந்த  தடுப்பூசியின் விலை குறைவாக காணப்பட்டாலும் மற்ற நாடுகளில் அதன் விலை அதிகரித்தே காணப்படுகின்றமை தெளிவாகின்றது.

 எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த அரசாங்கங்களின் காலப்பகுதிகளில், டெண்டர்கள் எதுவும் கோராமல், ஒரே ஒரு விநியோகஸ்த்தர் மூலம் Papaverine Hydrochloride தடுப்பூசியை இறக்குமதி செய்ததாகவும், இதன் விளைவாக குறித்த விநியோகஸ்த்தரினால் அரசாங்கத்திற்கு அதிக விலைக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல்வேறு முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளமையும் தெளிவாகின்றது.

இருப்பினும், மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தினால் அது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது  ​​முன்பு இந்த தடுப்பூசியை கொள்வனவு செய்த விலையை விட குறைந்த விலையில் இந்த தடுப்பூசியை அரசாங்கம் பெற முடிந்தது என்பது தெரியவந்தது.

மேலும், லங்காதீப பத்தரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டதனை போன்று  Papaverine Hydrochloride  தடுப்பூசி புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து அல்ல எனவும்  இந்த தடுப்பூசி  இருதய அறுவை சிகிச்சையின் போது  பயன்படுத்தப்படும் தடுப்பூசி என்பதுடன்.  Papaverine Hydrochloride தடுப்பூசியை பொதுமக்கள் அதிக விலைக்கு வாங்கவில்லை எனவும் விநியோகஸ்த்தரினால் அந்த மருந்து அதிக விலைக்கு அரசாங்கத்திற்கு விற்கப்பட்டுள்ளது என்பதுவும் புலனாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:76000 ரூபாய்க்கு விற்கப்பட்ட புற்றுநோய் மருந்து 370 ரூபாய்க்கு விலை குறைக்கப்பட்டதா?

Written By: Suji Shabeedhran  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *