
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்ட கனடிய பிரஜை ராஜமனோகரி கைது!!! வீடியோ
May 21, 2025
அநுர அரசுக்குஅட்டமத்து சனி ஆரம்பமாகியதா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்ட கனடிய பிரஜை ராஜமனோகரி கைது!!! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.21 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக உடகங்களில் பகிரந்திருந்தமையும் காணமுடிந்தது.
Archive | Archive | Archive | Archive
மேலும் vampan.net என்ற இணையதளம் ஒன்றிலும் இது குறித்த தகவல் குரல் பதிவாக வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட கனேடிய பிரஜையான ராஜமனோகரி என்பவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் எதுவும் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
பொலிஸ் ஊடகப் பிரிவு
எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவக்கப்பட்டதனைப் போன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துக்கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் நாம் பொலிஸ் ஊடகப்பிரிவுடன் தொடர்புகொண்டு வினவியபோது, கடந்த 2025.05.20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்நத பெண் ஒருவர் புத்தளத்தில் வைத்து 50 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தினால் கைது செய்யப்பட்டதாகவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டமைக்காக அந்த பெண் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம்
எனவே குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புத்தளத்தில் வந்து தங்கியிருந்து, புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரை கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து அவரிடமிருந்து 50 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு, பின்னர் குறித்த நபரை கனடாவிற்கு அழைத்துச்செல்லாமல் ஏமாற்றிவிட்டு அந்த பெண் மாத்திரம் கனடா சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து கடந்த 2025.05.20 ஆம் திகதி குறித்த பெண் புத்தளத்தில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு பின் 22 ஆம் திகதி புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் ராஜேந்திரராஜன் ராஜமனோகரி என்ற குறித்த பெண்ணுக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்படும் பட்சத்தில் அது குறித்து இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும், எனவே இந்த பெண்ணின் கைது தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகராலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என நாம் வினவினோம்.
இதன்போது குறித்த பெண் இலங்கை பிரஜை எனவும் அவர் கனேடிய குடியுரிமையை பெற்றவர் மாத்திரமே எனவும் அதனால் அது குறித்து கனேடிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்
கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்ட கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் நாம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனை தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கு இதுவரை எந்தவித தகவல்களும் தெரியாது எனவும் அவ்வாறு கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அது குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் எனினும் தற்போது வரை அவ்வாறான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வுகளின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட கனேடிய பிரஜையான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதுடன் அவர் 50 இலட்சம் ரூபா பண மோசடியில் புத்தளத்தில் தங்கியிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டார் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டமைக்காக கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டாரா?
Fact Check By: suji shabeedharanResult: Misleading
