அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த வெள்ள அனர்த்தத்தின் காணொளி என தெரிவிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் உட்பட 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதோடு குவாடலூப் நதிக்கு அருகிலுள்ள கோடைக்கால முகாமில் இருந்த 27 சிறுமிகளையும் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. என தெரிவிக்கப்பட்டு அந்த காணொளியானது 2025.07.06 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த காணொளியின் உண்மை தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக அந்த காணொளியை நன்கு கவனித்த போது அது பத்து வெவ்வேறு காணொளிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு காணொளி என்பதனை அறியமுடிந்தது.
1ஆவது காட்சி | 2ஆவது காட்சி | 3ஆவது காட்சி | 4ஆவது காட்சி | 5ஆவது காட்சி |
6ஆவது காட்சி | 7ஆவது காட்சி | 8ஆவது காட்சி | 9ஆவது காட்சி | 10ஆவது காட்சி |
எனவே அந்த பத்து காட்சிகளையும் வெவ்வேறு புகைப்படங்களாக மாற்றி நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
1ஆவது காட்சி
இதன்போது குறித்த காணொளியில் முதலாவது காட்சியானது 2021 ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் திகதி மத்திய ஜப்பானில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
பல சர்வதேச ஊடகங்களிலும் இந்த காணொளியானது அந்த காலப்பகுதியில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2ஆவது காட்சி
மேலும் குறித்த காணொளியிலுள்ள இரண்டாவது காட்சியானது 2024 ஆம் ஆண்டு ஸ்பெயினின் மலகாவில் உள்ள மலகா அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் உறுதியானது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட “டானா” புயலால் தேங்கியிருந்த வண்டலை அகற்றுவதே இந்த நீர் வெளியேற்றத்தின் நோக்கமாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. Link | Link
3ஆவது காட்சி
அத்துடன் குறித்த காணொளியில் இருந்த 3 ஆவது காட்சி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, யெல்லோஸ்டோன் ஆறு (Yellowstone River)
அமெரிக்காவின் வயோமிங், மொன்டானா, மற்றும் இடாஹோ மாநிலங்களில் பாய்கிறது. 2022 ஆம் ஆண்டு அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஆற்றை அண்மித்து அமைந்திருந்த வீடொன்று அந்த ஆற்றில் அடித்துச் செல்லும் காணொளியே இது என்பது கண்டறியப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து தொடர்பில் CNN இல் முழுமையான அறிக்கையொன்று வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
4ஆவது காட்சி
அந்தவகையில் அந்த காணொளியில் உள்ள 4 ஆவது காட்சியிலும் ஒரு வீடு ஆற்றில் வீழ்வது போல் உள்ளது, இது குறித்து நாம் ஆராய்ந்த போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இது போன்ற அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
எனவே நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின தலைநகரான ஜூனோவில் உள்ள மெண்டன்ஹால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பபெருக்கின் போது அந்த ஆற்றில் வீடொன்று இடிந்து விழும் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது. Link
5 ஆவது காட்சி
டெக்ஸாஸில் ஏற்பட்ட வெள்ளம் என தெரிவித்து பகிரப்பட்ட காணொளியில் 5ஆவது காட்சியை நாம் ஆராய்ந்த போது, மார்ஷல் தீவுகளில் உள்ள குவாஜலின் அட்டோலின் ஒரு பகுதியான ரோய்-நமூர் தீவில், 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய அலையானது Dyess Army Field மற்றும் Freefligh சர்வதேச விமான நிலையத்திற்கு புகுந்து குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய போது சிலரின் கையடக்க தொலைபேசியினால் எடுக்கப்பட்ட காணொளியே இது என்பது கண்டறியப்பட்டது.Link | Link
மேலும் இந்த காணொளியானது பல சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 ஆவது காட்சி
குறித்த காணொளியில் இருந்த 6ஆவது காட்சி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, The world Ai என்ற டிக்டொக் பக்கத்தில் குறித்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது. அதில் குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவு தெழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என குறிப்பிடப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
மேலும் இதே காணொளியானது The world Ai என்ற YouTube தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது அதிலும் குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட காணொளியில் இருந்த இந்த காட்சியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டு என்பது கண்டறியப்பட்டது.
7ஆவது காட்சி
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் 7 ஆவதாக காணப்பட்ட காட்சி தொடர்பில் நாம் ஆய்வு செய்த போது, 2024 ஆம் ஆண்டு ஏற்பபட்ட ஹெலீன் சூறாவளி காரணமாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக கிழக்கு டென்னசியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியே இது என்பது கண்டறியப்பட்டது.Link
8 ஆவது காட்சி
குறித்த காணொளியில் 8 ஆவதாக இருந்த காட்சி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது,வடக்கு அரிசோனாவில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காரை அங்கிருந்தவர் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.Link
அந்த காணொளியே தற்போது டெக்ஸாஸ் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என தவறாக பகிரப்படுகின்றமை கண்டறியப்பட்டது.
9 ஆவது காட்சி
இந்த காணொளி தொடர்பில் நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் அதில் 9 ஆவதாக இணைக்கப்பட்டுள்ள காட்சியானது 2025.06.19ஆம் திகதி சீனாவின் ஹூபே மாகாணத்தின் சுவான்’என் கவுண்டியில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
இதன்போது, உள்ளூர்வாசியான லுவோ என்பவர் தனது வீட்டின் கதவைத் திறந்தபோது ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்து வேகமாக பாய்ந்து வரும் காட்சியை படமெடுத்துள்ளார். Link
அந்த காட்சியே தற்போது தற்போது அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளம் என தவறாக பகிரப்படுகின்றமை கண்டறியப்பட்டது.
10 ஆவது காட்சி
இதேவேளை குறித்த காணொளியில் இறுதியாக இணைக்கப்பட்டுள்ள காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அந்த காணொளியானது 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் கடைத்தொகுதிகளின் காணொளி என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் டெக்ஸாஸில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் காணொளியானது போலியானது என்பதுடன் அது வெவ்வேறு காலப்பகுதிகளின் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?
Fact Check By: Suji ShabeedhranResult: False
