
இலங்கையின் முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய புள்ளி சுறாவை குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளதாக கடந்த மாதம் 4 ஆம் திகதி (04.09.2019) இணையத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்த செய்தியில் பகிரப்பட்ட புள்ளி சுறாவின் புகைப்படம் தொடர்பில் உண்மைதன்மையினை கண்டறியும் முயற்சியில் எம் குழு இறங்கியது.
தகவலின் விவரம்:
செட்டிகுளம் என்ற பேஸ்புக் பக்கத்தில் “முல்லைத்தீவு கடற்கரயில் கரையொதுங்கிய புள்ளிச்சுறா; மீனவர்கள் செயல் பாராட்டப்படவேண்டியது !” என்று கடந்த மாதம் 4 ஆம் திகதி செய்தி (04.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு இது நம்தேசம் என்ற இணையத்தளத்தின் செய்தி லிங்கினையும் இணைத்திருந்தனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த செய்தியை வெளியிடப்பட்டிருந்த புள்ளி சுறாவின் புகைப்படத்தினை Google Reverse Image Tool இனை கொண்டு பரிசோதனை செய்தோம்.
அதன் போது குறித்த புகைப்படமானது,கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி (30.06.2019) இணையத்தில் முதன் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இது குறித்து மேலும் நாம் தேடுதலில் ஈடுப்பட்ட வேளையில் கடந்த ஜுன் மாதம் 29 ஆம் திகதி (29.06.2019) மீனவர்கள் வலையில் சிக்குண்ட சுறா என்ற செய்தியில் குறித்த புகைப்படமே வெளியிடப்பட்டிருந்தமை எம் தேடலில் உறுதி செய்யப்பட்டது. முழு அறிக்கை
இது குறித்து வெளியிடப்பட்ட வீடியோ பதிவிலும் குறித்த புகைப்படம் காணக்கிடைத்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி இணையத்தளங்கள் வெளியிட்ட சில செய்திகளை ஆராய்ந்த போது, அதிலும் குறித்த புகைப்படங்களே வெளியாகிருந்தமை காணக்கிடைத்தது.
கடந்த ஜுன் 30 ஆம் திகதி (30.06.2019) வெளிவந்த தினக்குரல் பத்திரிகையில் முதற்பக்கமே குறித்த செய்தி புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது.
கடந்த மாதம் 04 ஆம் திகதி (04.09.2019) அன்று வெளியிடப்பட்ட செய்தியில், வெளியாகிருந்த புகைப்படங்களில் கடந்த ஜுன் மாதம் 29 ஆம் திகதி (29.06.2019) அன்று வெளியாகி இருந்த புகைப்படமொன்றும் பகிரப்பட்டிருந்தமை எமது ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் கடந்த மாதம் 4 ஆம் திகதி (04.09.2019) அன்று முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய புள்ளி சுறா என்று வெளியாகிய புகைப்படமானது, கடந்த ஜுன் மாதம் 29 ஆம் திகதி (29.06.2019) மீனவர்கள் வலையில் சிக்குண்ட புள்ளி சுறாவின் புகைப்படமாகும். பழைய புகைப்படத்தை புதிதுபோல தற்போது பகிர்ந்துள்ளனர்.
