
“இராமர் சேது“ எனப்படும் இராமர் பாலமும் இராமாயண காலத்தை பறைசாற்றும் பல சுவடுகளும் தற்போது கடலுக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
நீங்கள் சுழியோடிகளாக இருந்தால் இராமர் சேதுவை ஆராயுங்கள் என்றும், கடவுள் இல்லை..இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லைனு சொல்றவங்க …ராமாயணம் ஒரு கட்டுக்கதைனு சொல்றவங்களுக்கும்
எனவும் தெரிவிக்கப்பட்டு இந்த காணொளி கடந்த 2025.04.08 ஆம் திகதி பதிவேற்றப் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்த உண்மை அறியாத பலுரும் சமூக ஊடகங்களில் இந்த காணொளியை பகிர்ந்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் அந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது jayprints என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறித்த காணொளி பதிவேற்றப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
அதில் இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் AI-யால் உருவாக்கப்பட்டவை எனவும் இவை கலை மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும். அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மரபுகளை தாங்கள் மிகவும் மதிப்பதாகவும் இந்த காணொளியானது யாரையும் புண்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒ்னறு அல்ல என்பது்டன் ஆச்சரியத்தைத் தூண்டுவதற்காகவே இது உருவாக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இராமர் சேது பாலத்தின் புகைப்படம்
தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான இராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் கடந்த ஆண்டு (2024) வெளியிட்டிருந்தது.
அதில், இராமர் பாலம் அல்லது இராம சேது என்றும் அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ராமேஸ்வரம் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு இடையே அமைந்துள்ளது. இந்த பாலம் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை (தெற்கு) வங்காள விரிகுடாவின் நுழைவாயிலான பாக் ஜலசந்தியிலிருந்து (வடக்கில்) பிரிக்கிறது.
இந்த பாலம் ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் 15ம் நூற்றாண்டு வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது எனவும், பின்னர் அது பல ஆண்டுகளாக புயல்களால் படிப்படியாக அரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மன்னார் தீவு சுமார் 130 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் இலங்கையின் பிரதான நிலப்பகுதியுடன் சாலைப் பாலம் மற்றும் ரயில் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் எதிர் பக்கத்தில், ராமேஸ்வரம் தீவு, இந்திய நிலப்பரப்பில் பாம்பன் பாலத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.
இங்குள்ள கடல் பகுதி கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக அங்கிகரிக்கப்பட்டது. இந்த கடல் 1 முதல் 10 மீ. ஆழம் மட்டுமே கொண்டது. இங்குள்ள நிலப்பரப்பு பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும், ஏராளமான மீன்கள், கடல் பசு, டால்பின் மற்றும் கடல் புற்கள் ஆகியவை ஆழமற்ற நீரில் செழித்து வளரக்கூடிய இடமாகவும் உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட இராமர் பாலத்தின் புகைப்படம் பின்வருமாறு
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் இராமர் பாலத்தின் எச்சங்கள் கடலுக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இராமர் பாலம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?
Written By: Suji ShabeedhranResult: False
