இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடந்த 2025.05.09 ஆம் திகதி அறிவித்தது.
இதனையடுத்து இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் இலங்கையில்? பிசிசிஐ தீவிர ஆலோசனை! சாத்தியமா? என்ற தலைப்பில் குறித்த பதிவு கடந்த 2025.05.10 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த தலைப்பிலான செய்தியை இங்கே காணலாம் Link | Archive
மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இடை நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளை எங்கு நடத்துவது என்பது தொடர்பில் ஏதேனும் அறிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விடுத்துள்ளதா என நாம் BCCI இணையதளத்தில் ஆராய்ந்த போது அங்கு அது தொடர்பில் எந்தவித அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
எனினும் கடந்த 2025.05.09 ஆம் திகதி போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட அறிவித்தலை எம்மால் காணமுடிந்தது.Link
அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI), நடந்து வரும் IPL 2025 தொடரின் எஞ்சிய போட்டிகளை உடனடியாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும். போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் தகவல்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போதும், அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.
மேலும் cricbuzz இணையதளத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (2025.05.12) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் லக்னோ-பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்தில் இருந்து போட்டி தொடங்கும். டெல்லி-பஞ்சாப் இடையே பாதியில் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் மீண்டும் நடைபெறாது என்றும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
எஞ்சிய 12 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஓஃப் போட்டி ஆக மொத்தம் 16 ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவனையை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 16 அல்லது 17 ஆம் திகதி ஐ.பி.எல். போட்டி மீண்டும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்மசாலா, டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை.
சென்னை, ஐதராபாத், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய 4 நகரங்களில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை (SLC)
இந்த விடயம் தொடர்பில் நாம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் வினவியபோது, எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்துவது தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித அறிப்புகளும் கிடைக்கவில்லை என தெரிவித்தது.
அத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது, இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக இதுவரை எந்த அறிவிப்புகளையும் விடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டது.
எனவே அவர்களிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடும் வரையில் இது குறித்து எதனையும் தம்மால் தெரிவிக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்துவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானங்களோ அல்லது கலந்துரையாடல்களோ இடம்பெறுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் ஐ.பி.எல் தொடரின் மிகுதி போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் அது குறித்த அறிவிப்புகளை இன்று (2025.05.12) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவிக்குப் என எதிர்பார்க்கப்படுவதாக cricbuzz தெரிவித்துள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title: IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த ஆலோசிக்கப்படுகின்றதா?
Fact Check By: suji shabeedharanResult: Insight
