WhatsApp ஊடாக மக்களை அச்சமடைய செய்யும் பல தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஃபேக் கிரஸண்டோ நாம் பல முறை உண்மையை கண்டறிந்து அறிக்கையிட்டுள்ளோம்.
மேலும் அவ்வாறான தகவல்கள் மற்றவர்களையும் விழிப்புடன் இருக்கச்செய்யும் விதத்தில் பகிரப்பட்டுவரும் நிலையில் தற்போது பகிரப்பட்டு வரும் மற்றுமொரு தகவல் குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் மிக மிக அவசர செய்தி அனைவரும் பகிரவும். விழிப்புடன் இருங்கள் Be Alert
தற்போது பல இடங்களில் ஒரு பெண் (ஒரு குழுவாக இருக்கலாம் ) அவள் ஒரு LPG GAS கம்பனியின் பெயரைக் கூறுவாள் இது போலி நிறுவனம் ஆகும். அவள் அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பாள் மற்றும் அதிக உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பாள்.
உங்கள் வீட்டிற்கு வந்து எரிவாயு அடுப்பு *Gas Stove Maintenance* பராமரிப்பினை சோதனையிட வந்ததாகக் கூறி அவள் உங்கள் வீட்டிற்குள் நுழைய முற்படலாம்.
மேலும் ரூபாய் 200/- (Yearly Maintenance) வருடாந்திர அங்கத்துவப்பணம் கேட்பது போல் உங்களிடம் பேச்சுக் கொடுக்கலாம்.
அவளிடம் குளோரோஃபார்மையும் (மயக்க மருந்து) வைத்திருப்பாள் . அதன்மூலம் அவள் உங்களை மயக்கமடையச் செய்ய முயற்சிக்கலாம்.
எனவே, உங்கள் வீட்டில் அவளை அனுமதிக்க வேண்டாம்.
அவள் உங்கள் கழிவறையை பயன்படுத்த கேட்கலாம்.
மேலும் அவள் தனது குழுவை அழைத்து வீட்டின் நிலைமையை விளக்க முற்படுபவள் போல் தயாராவாள்
உள்ளே வந்து விட்டால் அவர்கள் உங்கள் வீட்டில் , ஒவ்வொரு பகுதியையும் உடைத்து திருடுவார்கள்.
தற்போது இந்த குழு மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது.
இந்த செய்தியை குழுமத்திலில்லாத சகோதரர்களுக்காக அடுத்த குருப்களிலும் பகிரவும்.
பொது நலன் கருதி
வெளியிடுவோர் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.24 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் தற்போது இந்த தகவலானது வட்ஸ்அப் மூலமும் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது
அத்துடன் குறித்த தகவல் தொடர்பில் உண்மை அறியாத பலர் அதனை வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட தகவலை நாம் பார்க்கும் போது அது வேறு மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு பகிரப்படும் ஒரு தகவலாகவே உள்ளது காரணம் இது தமிழில் மாத்திரமன்றி சிங்கள மொழியிலும் பகிரப்பட்டிருப்பதனை எம்மால் காண முடிந்தது.
இதுபோன்ற பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்தவொரு செய்தியையும் எமக்கு காணக்கிடைக்கவில்லை
பொலிஸ் ஊடகப் பிரிவு
எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில், குறித்த சம்பவம் தொடர்பில் நாம் பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொண்டு வினவினோம். அதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தியில் தெரிவிக்கப்படுவதனைப் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றாலும், குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயமானது மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் விடயம் என்பதனால் அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையகம் என்பவற்றுக்கு அறியக்கிடைத்திருக்கும் எனினும் அவ்வாறான தகவல்கள் தொடர்பில் இதுவரை எந்தவித அறிவித்தல்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அது குறித்து பொது மக்களுக்கான எச்சரிக்கை அறிவித்தல்கள் பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டிருக்கும் எனவே தற்போது பகிரப்படும் இந்த தகவலானது ஆதாரமற்றது எனவும் இவ்வாறான தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது பொதுமக்கள் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
இவ்வாறான செயற்பாடுகள் காலத்திற்கு காலம் இடம்பெறும் ஒன்றாக இருந்தாலும், மக்கள் மத்தியில் அவை குறித்து எழும் அச்சத்தை தொடர்ந்தே இவை பெருமளவில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவலானது ஆதாரமற்றதாக இருந்தாலும் குறித்த தகவலில் பகிரப்பட்டதனைப் போன்ற மக்களை ஏமாற்றும் செயல்கள் சமூகத்தில் பெருமளவில் இடம்பெற்று வருகின்றமையை எம்மால் மறுக்க முடியாது.
எனினும் அதன் பின்னணியில் மக்களுக்கு தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் சிலரின் சுய இலாபத்திற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருத்தல் அவசியமாகும்.
மேலும் குறித்த செய்தியில் LPG GAS கம்பனி என போலியான நிறுவன பெயரை குறிப்பிட்டு மோசடிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும்,அந்த தகவலை பார்த்தவுடனேயே இது Litro Gas நிறுவனம் என்ற எண்ணம் தோன்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம் எனவே இதன் காரணமாக மக்கள் இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.
Litro Gas நிறுவனம்
எனவே நாம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவல் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்துடன் தொடர்புகொண்டு வினவினோம்.
இதன்போது குறித்த வட்ஸ்அப் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதனைப் போன்று கள நடவடிக்கைகளை அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்வதில்லை எனவும் இதுபோன்ற கள நடவடிக்கைகளினால் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் அதற்கு லிட்ரோ நிறுவனம் பொறுப்புக் கூறாது எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் லிட்ரோ நிறுவனத்தின் நாமத்தை, சந்தைப்படுத்தல் பொருட்களை, LPG பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அங்கீகரிக்கப்படாத நபர்கள், குழு அல்லது நிறுவனங்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Also Read: “Seismic Waves CARD” என்ற கோப்பை திறப்பதன் மூலம் உங்கள் தொலைபேசி ஹெக் செய்யப்படுமா?
கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்தியதால் உயரிழந்த நபர்! உண்மை என்ன?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் LPG GAS என்ற போலியான நிறுவனத்தின் பெயரைக் கூறி பெண் ஒருவர் வீடுகளுக்கு வந்து வீட்டு பொருட்களை திருடிச்செல்வதாக தெரிவித்து பகிரப்படும் எச்சரிக்கை செய்தியானது ஒரு ஆதாரமற்ற தகவலாகும். எனினும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டதனை போன்ற விடயங்கள் சமூகத்தில் இடம்பெறவே செய்கின்றன என்பதனையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்கள் வழியாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சமூக ஊடகங்களில் பகிரப்படும் எச்சரிக்கை செய்திகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுங்கள்!
Fact Check By: Suji ShabeedharanResult: Insight
