புற்றுநோய் தொடர்பிலும் அதற்கான மருத்துவ முறைகள் தொடர்பிலும் சமூகத்தில் காலத்திற்கு காலம் பல விதமான தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால காண முடிகின்றது.
அந்தவகையில் தற்போது வெள்ளை பூசணி சாற்றை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய் குணமாகும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில், புற்றுநோய் குணமாக!
வெள்ளைப்பூசணிச் சாறு 100 மில்லி தினமும் சாப்பிட்டு வர புற்றுநோய் குணமாகும்… என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.12 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவின் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் நாம், வெள்ளை பூசணி சாற்றை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய் குணமடையும் என தெரிவிக்கப்பட்ட ஏதேனும் ஆய்வறிக்கைகள் உன்னளவா என ஆராய்ந்த போது, வெள்ளை பூசணியின் மருத்துவ குணங்கள் தொடர்பான விஞ்ஞான ரீதியான பல ஆய்வறிக்கைள் வெளியிடப்பட்டிருந்த போதிலும் அவற்றில் வெள்ளை பூசணி சாற்றை தினமும் குடித்தால் புற்றுநோய் குணமடையும் என்பதற்கான எந்தவித ஆதரங்களோ இருக்கவில்லை.
குறித்த ஆய்வறிக்கையை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Link
இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள உதவி பேராசிரியரான சுனிதா சொவுசாவினால் நடத்தப்பட்ட வெள்ளைபூசணி சாறு குடிப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் தொடர்பான ஆய்வில் வெள்ளை பூசணியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் காணப்படுவதனால் பாரம்பரியமாக, இந்தப் பழம் இருமல், காய்ச்சல், இதய நோய்கள் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கவும் மலச்சிக்கல்களை போக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த ஆய்வில் நாளொன்றுக்கு 220 மில்லி வெள்ளை பூசணி சாற்றை சாறு 30 மில்லி தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆய்வறிக்கையின் முடிவில் வெள்ளை பூசணியில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் அவை நல்ல ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன மற்றும் CVD போன்ற நாற்பட்ட நோய்கள் உருவாகும் அபாயத்தைக் குறைப்பதாகவும் இது நார்ச்சத்துக்களின் வளமான மூலங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான முலாம்பழம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூசணி சாறு குடல் நுண்ணுயிரிகளை மாற்றுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இது மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, வெள்ளை பூசணி சாற்றை உட்கொள்வதை ஆரோக்கியமான உணவுகளின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த ஆய்வில் வெள்ளை பூசணி சாற்றில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் அந்த சாற்றை தினமும் 100 மில்லி குடிப்பதனால் புற்றுநோய் குணமாகும் என்ற எந்தவிதமான தகவல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை Health line இணையதளத்தில் வெள்ளை பூசணி பல மருத்துவ குணங்களை கொண்டிருப்பதாகவும் பல ஆண்டு காலமாக சீன ஆயுர்வேத மருத்துவத்தில் அதனை நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதில் கூறப்படும் அனைத்து குணங்களுக்கும் தற்போது அறிவியல் ஆதரங்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயிற்றுப் புண்கள் தோன்றுவதைத் தடுக்க வெள்ளை பூசணி சாறு உதவும் என்று விலங்குகள் மீதான ஆராய்ச்சியின் முடிவில் கூறப்பட்டுள்ளதாகவும் சோதனைக் குழாய் மற்றும் விலங்கு ஆய்வுகள் பூசணி சாறு வீக்கத்தைக் குறைக்கலாம் என்பதைக் குறிப்பிடுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் போன்ற சில நோய்கள் ஏற்படுவதற்கு நாற்பட்ட வீக்கம் காரணமாக அமைவதன் அடிப்படையிலேயே பூசணி சாறு புற்றுநோயை குணப்படுத்தும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படிருக்கக் கூடும்
எவ்வாறாயினும் குறித்த ஆய்வுகளில் பூசணி சாறு வீக்கத்தை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டுள்ளமை சோதனைக்கூட மற்றும் விலங்குகள் மீதான ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அதன் மூலம் அது புற்றுநோயை குணப்படுத்தும் என்ற முடிவிற்கு வர இயலாது.
பூசணி இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் குறைக்க உதவும் என்று கூறுகிறது. இருப்பினும், மனித ஆய்வுகள் முரண்பட்ட முடிவுகளைப் வழங்குவதாகவும் Health line இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில ஆய்வுகள் பூசணி சாறு சில பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராகப் பாதுகாக்கக்கூடும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், சில ஆய்வுகள் அவ்வாறான எந்த பாதுகாப்புகளையும் பூசணி வழங்கவில்லை என தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்
இது தொடர்பில் நாம் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்திடம் வினவியபோது வெள்ளை பூசணி மாத்திரமன்றி பழங்கள் காய்கறிகளை நமது உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எனவும் இருப்பினும் அவை ஒருபோது புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு உதவும் மருந்துகளுக்கு ஈடாக அமையாது என தெரிவித்தனர்
மேலும் சமூக ஊடகங்களில் பரவும் இவ்வாறான தகவல்கள் எந்தவித ஆய்வுகளின் அடிப்படையிலும் தெரிவிக்கப்படுகின்றவை அல்ல எனவும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்க
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் எல். பி. ஏ. கருணாதிலக்கவிடம் வினவியபோது, வெள்ளை பூசணி தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவல் முற்றிலும் தவறானது எனவும் உண்மையான ஆயுர்வேத மருத்துவ முறையின்படியும் இந்தக் கூற்று தவறானது என்றும் புற்றுநோய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டால் அவரின் நோய் நிலைமை, புற்றுநோயின் வகை, போன்றவற்றுக்கு ஏற்பவே சிகிச்சை முறைகளும் மருத்துவர்களினால் தீர்மானிக்கப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் வெள்ளை பூசணியில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளதாக எந்தவிதமான ஆய்வுகளிலும் கூறப்படவில்லை எனவும் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ள அளவில் தினமும் வெள்ளை பூசணி சாறு குடித்துவந்தால் காலப்போக்கில் அதனால் வேறு விதமான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Also Read: அன்னாசித் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?
Also Read: ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி உண்மையில் செய்வது என்ன?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் 100 மில்லி வெள்ளை பூசணி சாற்றை தினமும் குடித்து வந்தால் புற்றுநோய் குணமாகும் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்பதுடன் வெள்ளை பூசணியில் பல மருத்துவ குணங்கள் காணப்பட்டாலும் அதன் மூலம் புற்றுநோய் குணமாகும் என்பதற்கு எந்தவித உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களும் இல்லை என்பதுவும் தெளிவாகின்றது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளிட்ட சில நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலை வெள்ளை பூசணி கொண்டுள்ளதாக சோதனைக்கூட மற்றும் விலங்குகள் மீதான ஆய்வுகளில் கூறப்பட்டாலும் இந்த ஒவ்வொறு ஆய்வுகளும் மாறுப்பட்ட முடிவுகளை கொண்டுள்ளமையினால் வெள்ளை பூசணி சாறு நோய்களை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளமை தொடர்பில் எவ்வித உறுதியான முடிவிற்கும் வரமுடியாது என்பதுவும் புலனாகின்றது.
அத்துடன் புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி நோயாகவே பார்க்கப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் தொடரந்து கண்டுப்பிடிக்கப்பட்டு வந்தாலும் அதனை முற்றாக அழிக்கக் கூடிய மருந்துகள் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பதுவும் நிதர்சனமான உண்மை.
மேலும் புற்றுநோய் மனித உடலில் பரவியுள்ள நிலையின் அடிப்படையிலேயே சத்திரசிகிச்சை chemotherapy, radiation therapy, hormone therapy, மற்றும் immunotherapy என்பவற்றினால் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையும் வேறுபடுகின்றது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தினமும் வெள்ளை பூசணி சாறு குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?
Written By: Suji ShabeedhranResult: False
