
இந்தியப் பிரஜைகள், இனி இலங்கைக்கு பயணம் செய்ய விசா அல்லது மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே இந்த நடைமுறை தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் முன்வந்தது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் விசா தேவையில்லை. ETA தேவையில்லை. இலங்கைக்கு வரவேற்கிறோம்!
இந்தியப் பிரஜைகள், இனி இலங்கைக்கு பயணம் செய்ய விசா அல்லது மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA) பெற வேண்டிய அவசியமில்லை.
இத்தகவலை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்
மஹிஷினி கொலொன்னே அறிவித்துள்ளார். என தெரிவிக்கப்பட்டு 2026.02.19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் சமூக ஊடகங்களில் பலரும் இதனை பகிர்ந்திருதமையை நாம் அவதானித்தோம்.
Explainer (விளக்கமளித்தல்)
மேற்குறிப்பிட்ட பதிவில் குறித்த தகவலை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்னே அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே நாம் மஹிஷினி கொலொன்னே அவர்களின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் அவ்வாறான அறிவிப்புகள் எதனையும் வெளியிட்டுள்ளாரா என ஆராய்ந்த போது, அவரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் எக்ஸ் தள பக்கங்களில் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தமையை காணமுடிந்தது.

அதே போன்று இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பேஸ்புக் பக்கத்திலும் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் பிரதான ஊடகமொன்43றிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தமையையும் காணமுடிந்தது.Link
2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு இலவச விசா அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனவே தற்போது பகிரப்படும் இந்த விடயம் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியா மற்றும் இந்த அனுமதி எவ்வளவு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்ற தகவல்கள் அந்த உத்தியோகபூர்வ பக்கங்களில் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் காணப்படவில்லை.
ஆகவே நாம் அது குறித்த விரிவான தேடலை மேற்கொண்டோம்.
மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA)
இது குறித்து தெளிவுப்படுத்தலை பெறுவதற்காக நாம் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் துரித இலக்கத்தின் ஊடாக ETA தொடர்பான தகவல்களை கேட்டறிந்தபோது, ETA உத்தியோகபூர்வ இணையதளங்களில் “இலவச ETA” (Free ETA) பற்றிய அறிவுறுத்தல்களில் கடந்த நாட்களில் சில சிக்கல்கள் காணப்பட்டன, ஆனால் இந்தியாவில் உள்ளவர்கள் ETA மூலம் விண்ணப்பிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாவிட்டாலும், பயணிகள் இணையம் மூலம் மின்னணு பயண அனுமதிக்கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் ஆனால் அந்தசமயத்தில் அவர்களுக்கான அனுமதி கிடைக்காது, இருப்பினும் அவர்களின் விண்ணப்பத்திற்கான pending approval ஐ இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளிடம் காண்பித்து அதற்கான அனுமதியை அந்த சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும் இணையவழியில் மின்னணு பயண அனுமதிக்காக விண்ணப்பிப்பது கட்டாயமானது என்பதனையும் அவர்கள் எம்மிடம் சுட்டிக்காட்டினர்.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம்
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பான மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜவை நாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இணையதளத்தில் அவ்வாறான எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஆரம்பத்திலிருந்தே ETA இணையதளத்தில் குறிப்பிட்டவாறு அனைவரும் மின்னணு பயண அனுமதிக்காக விண்ணப்பித்தே நாட்டிற்கு வரவேண்டும் என்பதனை நாம் குறிப்பிட்டிருதோம், ETA விண்ணப்பம் மூலம் இலவசமாக விசா வழங்கப்படும், ஆனாலும் ETA மூலம் விண்ணப்பிப்பது காட்டாயமாகும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நடைமுறையை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்காக ETA இல்லாமல் வந்தாலும் நாம் on arrival விசா வழங்குவோம். இந்த சலுகையை மற்ற நாடுகளுக்கு வழங்க முடியாது என்பதனால், நமக்கு இந்த சலுகை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் நாம் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பு தொடர்பில் வினவியபோது, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அவ்வாறான அறிவிப்புகளை வெளியிடமுடியாது ஆனால் அவ்வாறு இந்தியர்கள் வந்தால் அவர்களுக்கு on arrival visit visa வழங்க முடியும் என்பதனை சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அந்த திட்டமானது 2024 மார்ச் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டடது.
அதன் பிறகு அந்த திட்டம் மறு அறிவித்தல் வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. ஆகவே நாம் அது தொடர்பிலும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜவிடம் வினவினோம். இதன்போது அந்த திட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், அது visit visa முறையில் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பதனையும் குறிப்பிட்டார்.
ஆனால் இது புதிதாக இந்தியாவிற்காக மாத்திரம் வழங்கப்பட்ட நடைமுறையல்ல மேற்குறிப்பிட்ட ஏழு நாடுகளுக்கும் இந்த முறையில் இலங்கைக்கு வர முடியும் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று T20 உலகக்கிண்ணத்திற்காக ஏதேனும் இலவச விசா திட்டங்கள் நடைமுறையில் உள்ளனவா என்பதனையும் நாம் அவரிடம் வினவினோம். இதன்போது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ETA முறையினை நாம் T20 உலகக்கிண்ணத்திலும் விளம்பரப்படுத்துகின்றோம். ஆனால் அது இந்தியாவிற்கானது மட்டுமல்ல பாகிஸ்தான் போட்டிகளின் போதும் நாம் இந்த விளம்பரப்படுத்தலை மேற்கொண்டிருந்தோம் என்பதளை சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் ETA அனுமதிக்கு விண்ணப்பிப்பது கட்டாயம் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே நாம் மேற்குறிப்பிட்ட 7 நாடுகளுக்கு விசா வழங்கும் அறிவிப்பு தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இணையதளத்தில் ஆராய்ந்தபோது,
சுற்றுலாத்துறையை மீண்டும் உயிர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி எண் 23/1885/602/023 (24.10.2023) அடிப்படையில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் குடியுரிமையாளர்களுக்காக உடனடி அமுலுக்கு வந்திருந்த இலவச விசா திட்டம் (31.03.2024 வரை பைலட் திட்டமாக செயல்படுத்தப்பட்டது) மறு அறிவித்தல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாடுகளின் தூதரக (Diplomatic), அதிகாரப்பூர்வ (Official), பொதுக் காரிய (Public Affairs), சேவை (Service) மற்றும் சாதாரண (Ordinary) கடவுச்சீட்டுகள் கொண்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் விசா விலக்கு சலுகையைப் பெற தகுதியானவர்கள் ஆவர்.
இவ்விலவச விசாவின் செல்லுபடியாகும் காலம் இலங்கைக்கு முதல் வருகை தினத்திலிருந்து 30 நாட்கள் ஆகும். இது ஒருமுறை நுழைவு (Single Entry) அனுமதியை வழங்கும்.
தூதரக, அதிகாரப்பூர்வ, சேவை அல்லது பொதுக் காரிய கடவுச்சீட்டுகளுக்கான பரஸ்பர விசா விலக்கு இருதரப்பு உடன்படிக்கைகளில் ஏற்கனவே இணைந்துள்ள நாடுகள் (சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து) முன்பே ஒப்பந்தமாகிய காலப்பகுதிக்கேற்ப விலக்கை தொடர்ந்தும் அனுபவிப்பர்.
இவ்விசாவை நீட்டிக்கும் வசதி கட்டணத்திற்கு உட்பட்டதாகும்.
இவ்விசா விலக்கு திட்டம் மேற்கூறிய ஏழு நாடுகளுக்கே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும். பிற நாடுகள் அனைத்தும் இலங்கைக்கான பொதுவான விசா விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளின்படி செயல்பட வேண்டும்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதன் சமூக ஊடகப் பக்கங்களில் மேற்குறிப்பிட்ட இலவிசா தொடர்பில் தெரிவித்த அறிவிப்பில் இது புதிய நடைமுறை என்று குறிப்பிடப்பட்டிருக்காவிடினும், இதனை பார்ப்பவர்கள் இலங்கைக்கு வரும் இந்நதியர்கள் ETA மூலம் விண்ணப்பிக்க தேவையில்லை என்ற தவறான புரிதலுக்கு வரக்கூடும் அதுமாத்திரமன்றி இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களமும் அவர்களின் அறிவிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் தெளிவுப்படுத்தலை கோரியிருப்பதனால். இந்த அறிப்பு தொடர்பான முழுயைான தகவல்களை பெறுவதற்கு நாம் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரிடம் வினவியுள்ளோம்.
ஆகவே அவரிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் நாம் இந்த கட்டுரையில் இணைக்க காத்திருக்கின்றோம்.
வெளிவிவகார அமைச்சு
மேற்கண்ட அறிவிப்பு தொடர்பில் நாம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஊடகச் செயலாளரையும் தொடர்புகொண்டு வினவியிருந்தோம், இதன்போது அவர் உயர்ஸ்தானிகராயலயத்தின் பதிவில் சிறு பிரச்சினை உள்ளது என குறிப்பிட்டதுடன், இலங்கைக்கு வரும் இந்தியர்கள் ETA அனுமதியை பெறுவது கட்டாயம் எனவும் ஆனால் அதற்காக எந்த கட்டணமும் அறவிடப்படாது என்பதனையும் உறுதிப்படுத்தினர்.
சாதாரணமாக இந்தியர்கள் இலங்கை வருவதற்காக visit visa கட்டண முறைகள்
இந்தியர்கள் இலங்கை வருவதற்கான சுற்றுலா விசா (Tourist Visa) மற்றும் இதர கட்டணங்கள் குறித்த விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
சுற்றுலா விசா கட்டணங்கள் (SAARC நாடுகள்): இந்தியா, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்க (SAARC) நாடுகளின் கீழ் வருவதால், அதற்கான விசேட கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன.
- 30 நாட்கள் செல்லுபடியாகும் இரட்டை நுழைவு (Double Entry) சுற்றுலா விசா:
- இணைய வழியாக (ETA) விண்ணப்பதாரர் நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பினர் மூலமாகவோ விண்ணப்பிக்கும் போது: 20 அமெரிக்க டொலர்கள் (US$ 20).
- இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் அல்லது கொழும்பிலுள்ள குடிவரவு திணைக்களத் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளும் போது: 20 அமெரிக்க டொலர்கள் (US$ 20).
- இலங்கைக்கு வருகை தந்தவுடன் விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் (On arrival) பெற்றுக்கொள்ளும் போது: 25 அமெரிக்க டொலர்கள் (US$ 25).
- இலவச விசா: 12 வயதிற்குட்பட்ட எந்தவொரு நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் சுற்றுலா விசா இலவசமாக வழங்கப்படும். மேலும், இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு விசேட “இலவச விசா” திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இது நீடிக்கப்படும் போது கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
விசா காலத்தை நீடிப்பதற்கான கட்டணங்கள்: 30 நாட்களுக்கு மேல் சுற்றுலா விசா காலத்தை நீடிக்க விரும்பினால், பின்வரும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் (அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற சில நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு):
- 30 முதல் 60 நாட்கள் வரை நீடிக்க: 60 அமெரிக்க டொலர்கள்.
- 61 முதல் 180 நாட்கள் வரை நீடிக்க: 150 அமெரிக்க டொலர்கள்.
- 181 முதல் 270 நாட்கள் வரை நீடிக்க: 200 அமெரிக்க டொலர்கள்.
விசா காலம் கடந்து தங்கியிருப்பதற்கான (Overstay) அபராதங்கள்: விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு 2023 ஜூன் 21 முதல் திருத்தப்பட்ட அபராதங்கள் விதிக்கப்படுகின்றன:
- விசா காலம் முடிந்து 7 நாட்களுக்குள் வெளியேறினால், அபராதம் இன்றி உரிய விசா கட்டணத்தை மட்டும் செலுத்தி வெளியேறலாம்.
- விசா காலம் முடிந்து 8 முதல் 14 நாட்கள் வரை தங்கியிருந்தால்: உரிய விசா கட்டணத்துடன் 250 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
- விசா காலம் முடிந்து 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால்: உரிய விசா கட்டணத்துடன் 500 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
இதர விசாக்கள்:
- வியாபார விசா (Business Visa): 30 நாட்களுக்கு பலமுறை நுழையக்கூடிய (Multiple Entry) வியாபார விசாவிற்கான கட்டணம் 30 அமெரிக்க டொலர்கள்.
- இடைத்தங்கல் விசா (Transit Visa): 2 நாட்களுக்கான ஒற்றை நுழைவு இடைத்தங்கல் விசா இலவசமாக வழங்கப்படுகிறது
தற்போது (2026) இந்தியர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச சுற்றுலா விசா நடைமுறையில் உள்ளது
இந்தியர்களுக்கான தற்போதைய நிலை:
- இந்திய குடிமக்கள் இலங்கைக்கு வர சாதாரண Tourist Visa கட்டணம் செலுத்த தேவையில்லை.
- ஆனால், Electronic Travel Authorization (ETA) இணையவழியில் விண்ணப்பிப்பது கட்டாயம்.
- இந்த ETA மூலம்:
- 30 நாட்கள் வரை இலங்கையில் தங்க அனுமதி
- Zero cost / கட்டணமின்றி ETA பெற முடியும் (Free Visa Pilot Scheme கீழ்).
- 30 நாட்கள் வரை இலங்கையில் தங்க அனுமதி
முக்கிய குறிப்பு:
- ETA இல்லாமல் நேரடியாக வர முடியாது.
- இணையவழியில் ETA அனுமதி முன்கூட்டியே பெற வேண்டும்.
- 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால் பின்னர் விசா நீட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.
இது குறித்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளவும் Link | Link | Link
இந்தியர்களுக்கான இலவச ETA பெறும் முறைகள்
- அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்
Department of Immigration and Emigration அதிகாரப்பூர்வ ETA இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
(குறிப்பு: எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளத்தையே பயன்படுத்தவும்.)
2️. “Apply for Individual” தேர்வு செய்யவும்
- “Tourist ETA” (சுற்றுலா ETA) என்பதை தேர்வு செய்யவும்.
- நாட்டை (Nationality) India என்று தெரிவுசெய்யவும்.
3. விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
பின்வரும் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்:
- கடவுச்சீட்டு விவரங்கள்
- முழுப்பெயர் (கடவுச்சீட்டில் இருப்பதுபோல்)
- பிறந்த தேதி
- பயண விவரங்கள்
- தொடர்பு மின்னஞ்சல் முகவரி
4. கட்டண பகுதி
- இந்தியர்களுக்கு தற்போது Tourist ETA கட்டணம் விலக்கப்பட்டுள்ளது (Free Visa Scheme).
- எனவே, கட்டணம் “0 USD” எனக் காட்டப்பட வேண்டும்.
- ஏதேனும் கட்டணம் காட்டப்பட்டால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.
5. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
- Submit செய்த பின், ஒரு Reference Number கிடைக்கும்.
- ETA அனுமதி பொதுவாக 24–48 மணிநேரத்தில் மின்னஞ்சல் மூலம் வரும்.
6. ETA அனுமதியை அச்சிட்டு வைத்துக்கொள்ளவும்
- அனுமதி மின்னஞ்சலை Print எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இலங்கை வருகையின்போது கடவுச் சீட்டுடன் காட்ட வேண்டும்.
- அல்லது உடன் அனுமதி கிடைக்காவிடின் pending approval ஐ காண்பித்து இலங்கைக்கு வந்த பின்னர் விமானநிலையத்தில் அதன் அனுமதியை பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய குறிப்புகள்
- ETA மூலம் 30 நாட்கள் வரை இலங்கையில் தங்கலாம்.
- 6 மாதங்களுக்கு குறைந்தது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இருக்க வேண்டும்.
- திரும்பிச் செல்லும் விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.
- 30 மேல் தங்கவேண்டுமெனில் விசா நீட்டிப்பு பெறலாம் (கட்டணம் செலுத்தி).
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


