கையடக்க தொலைபேசிகளின் IMEI எண்ணை கட்டாயமாக பதிவு செய்வது தொடர்பான தெளிவுபடுத்தல்

Insight இலங்கை | Sri Lanka

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளை, இலங்கை தொலைபேசி வலையமைப்பிற்குள் இயக்க முடியாமல் தடைசெய்வது குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

எனவே இது குறித்து உண்மை அறியம் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் ஜனவரி 29, 2025 முதல் லோக்கல் நெட்வொர்க்குகளில் இருந்து பதிவு செய்யப்படாத மொபைல் சாதனங்களைத் தடை செய்ய TRCSL இலங்கை , பதிவு செய்யப்படாத சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, 29 ஜனவரி 2025 முதல் சர்வதேச மொபைல் சாதன அடையாள (IMEI) பதிவு முறையை அமல்படுத்தவுள்ளது.

 அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் சிம் இயக்கப்பட்ட சாதனங்கள் TRCSL-அங்கீகரிக்கப்பட்ட IMEI ஐக் கொண்டிருக்க வேண்டும்.

 காலக்கெடுவிற்குப் பிறகு அனைத்து உள்ளூர் நெட்வொர்க்குகளிலிருந்தும் பதிவு செய்யப்படாத சாதனங்கள் தடுக்கப்படும்.  ஜனவரி 28, 2025க்கு முன் உள்ளூர் நெட்வொர்க்குகளுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட சாதனங்கள் பாதிக்கப்படாது.

 நாட்டிற்கு சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது எடுத்துச் செல்லும் பயணிகள் அவற்றை ஆன்லைன் அனுமதி முறை மூலம் பதிவு செய்ய வேண்டும், இதற்கு TRCSL, இலங்கை சுங்கம் மற்றும் பிற அரசாங்க அமைப்புகளின் ஒப்புதல்கள் தேவைப்படும்.

உங்கள் சாதனத்தைச் சரிபார்க்க, IMEI <15-இலக்க எண்> என்று 1909 க்கு SMS செய்யவும். வாங்குவதற்கு முன் உறுதிப்படுத்தவும். என தெரிவிக்கப்பட்ட கடந்த 2025.01.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Explainer ( தெளிவுபடுத்தல்)

கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அறிவித்துள்ளதாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன்படி IMEI இலக்கம் பதிவு செய்யாத கையடக்கத் தொலைபேசிகளில் குறித்த கால அவகாசத்தின் பின்னர் தொலைபேசி வலையமைப்பு இயங்காது என ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Link | Link

மேலும் இது குறித்து மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் இணையதளத்தில் ஆராய்ந்த போது அதில் குறித்த விடயம் தொடர்பில் அறிவித்தல் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.

எனினும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர்  IMEI இலக்கத்தை பதிவு செய்தவர்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது என இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் IMEI இலக்க பதிவு நிலையை எவ்வாறு சரிபார்ப்பது தொடர்பான அறிவுறுத்தல்களும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMEI <15-இலக்க IMEI எண்>” என்ற வடிவத்தில் 1909 க்கு SMS அனுப்புவதன் மூலம் உங்கள் சாதனத்தின் IMEI பதிவு நிலையைச் சரிபார்க்கலாம்.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களைஇலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் துரித தொலைபேசி இலக்கமான 1900 இற்கு அழைப்பதன் ஊடாகவோ அல்லது www.trc.gov.lk  என்ற அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தின் ஊடாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின் ஊடாக பலருக்கு இது தொடர்பான சந்தேகங்கள் உள்ளன என்பதனை அறிந்துகொண்டதன் பின்னரே நாம் இது குறித்த முழுமையான தெளிவினை பெற்றுக்கொள்ள எண்ணினோம்.

கைடக்கதொலைபேசிகளின் பதிவை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு கட்டாயப்படுத்தியதினால் கிடைக்குப் நன்மைகள் என்ன?

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவால் (TRCSL) தொலைபேசிகள் பதிவுசெய்யப்படுவதனால் தொலைபேசிகள் மூலம் செய்யப்படும் மோசடி மற்றும் ஊழலைக் குறைக்கிறது. சரியான தர உத்தரவாதத்துடன் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறுவீர்கள். ஒரு தொலைபேசி TRCSL ஆல் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், அந்த தொலைபேசி அசல் தொலைபேசிதானா என்பதையும் நீங்கள் சரிபார்க்கலாம்.

TRCSL-ஆல் அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி தொலைந்து போனால், பொலிஸார், TRCSL மற்றும் தொலைபேசி சேவை வழங்குநர் உங்கள் தொலைந்த தொலைபேசியை விரைவில் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்பது இதன் தனித்துவமான நன்மையாகும்.

குறிப்பாக, தொலைபேசிகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் TRCSL அனுமதியை பெறுவதற்கு அரசாங்கத்திற்கு வரிகளை சரியாகச் செலுத்த வேண்டும். அந்த வரியைச் செலுத்துவது நாடு பொருளாதார ரீதியாகத் முன்னோக்கி செல்ல வழிவகுக்கும் அதே வேளையில், TRCSL அனுமதி இல்லாமல் மோசடியான வழிகளில் தொலைபேசிகளை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதால், நாட்டிற்குச் செலுத்த வேண்டிய வரிகள் கிடைக்காது.

அதன்படி, இதுபோன்ற சூழ்நிலைகளில் இறக்குமதி செய்யப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அங்கீகரிப்பது அவசியமானதாகும்.

இந்த புதிய சட்டம் தற்போது TRCSL இல் அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகளுக்கும், வெளிநாட்டினருக்குச் சொந்தமான தொலைபேசிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்துமா?

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளபடி, ஜனவரி 28 ஆம் திகதி வரை இலங்கை வலையமைப்புகளில் இணைக்கப்பட்டு, ஆனால் TRCSL ஆல் அங்கீகரிக்கப்படாத IMEI எண்களைக் கொண்ட தொலைபேசிகள், ஜனவரி 28 ஆம் திகதிக்கு பிறகு உள்நாட்டு வலையமைப்புகளில் செயலிழக்கப்படாது.

இந்தப் புதிய சட்டம் ஜனவரி 29, ஆம் திகதி முதல் TRCSL ஆல் அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இது தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த புதிய திட்டமானது தற்போது பயன்பாட்டில் உள்ள கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்துவதிலோ அல்லது வெளிநாட்டினரின் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதிலோ தலையீடு செய்யாது என அவர்  கூறினார்.

இதேவேளை தரமற்ற தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதால் ஏற்படும் பல்வேறு தடைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத முறைகள் மூலம் தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதால் நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாகவும் அதன்படி, இந்த நாட்டு மக்கள் சரியான தரச் சான்றிதழ்களின் கீழ் சந்தையில் இருந்து சரியான தரத்திலான சட்டப்பூர்வ சாதனங்களை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைய இந்த மாத இறுதிக்குள் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு எதிர்பார்ப்பதாகவும், இது குறித்து பொதுமக்களுக்கு முறையாகத் தெரிவிக்கவும், முறையான விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தொலைபேசிகளின் விற்பனையைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

ஜனவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகளுக்கு TRCSL அங்கீகாரத்தைப் பெற முடியுமா?

இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் நாம் வினவியபோது, இலங்கையில் உள்ள விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யப்படும் TRCSL அங்கீகாரமற்ற தொலைபேசிகளுக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் நுகர்வோர் TRCSL  அனுமதியை பெறமுடியாது எனவும் அதற்கான அனுமதியை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களே பெறமுடியும் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை 29 ஆம் திகதி முதல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து புதிய தொலைபேசிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

மேலும் நுகர்வோர் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் கொள்வனவின் போது அவை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதனை பரிசோதித்ததன் பின்னரே அதனை கொள்ளவனவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

TRCSL அனுமதி இன்றி சந்தையில் விற்கப்படும் தொலைபேசிகளுக்கு ஜனவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் என்ன நடக்கும்?

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி இன்றி சந்தையில் விற்பனை செய்வதற்காக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தொலைபேசிகளை ஜனவரி 29 ஆம் திகதிக்குப் பிறகு தொலைத்தொடர்பு ஆணைக்குழுவால் அங்கீகரிக்க முடியாது. எனவே அத்தகைய நபர்கள் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு சிம் கார்டை உட்செலுத்தி இந்நாட்டின் வலையமைப்பிற்குள் செயல்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் ஜனவரி 29 ஆம் திகதிக்குப் பிறகு அத்தகைய தொலைபேசிகளை நாட்டில் பயன்படுத்த முடியாது என்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நீங்கள் வெளிநாட்டில் பயன்படுத்திய தொலைபேசியை இந்த நாட்டிற்கு கொண்டு வந்தால் அல்லது வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அனுப்பப்பட்டால் அதற்கான TRCSL அனுமதியை எவ்வாறு பெறுவது?

இது குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் வினவியபோது,  அவ்வாறான அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்கான இணைப்பு எதிர்காலத்தில் அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் சேர்க்கப்படும் எனவும் எதிர்காலத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரும் தொலைபேசிகளுக்கான அனுமதியை பெறுவதற்கு குறித்த இணைப்பின் ஊடாக சென்று கடவுச்சீட்டு உள்ளிட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் அதற்கான அனுமதியை பெறலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் குறித்த இணைப்பானது இதுவரை அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் அதன் பின்னர் அனுமதியை பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

TRCSL அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசிகளின் பயன்பாட்டை கட்டாயமாக்குவதற்கான முந்தைய முயற்சிகள்

இந்தச் சட்டத்தை இந்த நாட்டில் பல ஆண்டுகளாக அமுல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தற்போதுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அது முறையாக அமுல்படுத்தப்படவில்லை.

இறக்குமதிகளின் போது TRCSL அனுமதியை பெறுவதில் காணப்பட்ட சில சிக்கல் நிலைகள் காரணமாக இறக்குமதியாளர்களின் எண்ணிக்கையில் சில பின்னடைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும்.

மேலும், விற்பனையாளர்கள் TRCSL இனால் அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசிகளின் விலைகளை அதிகரிக்க முயற்சிப்பதால், பொதுமக்கள் நல்ல தரமான தொலைபேசிகளை வாங்குவதிலும் பின்னடைவுகள் காணப்படுகின்றன.

இருப்பினும், இந்த நோக்கத்தை அடைய, இந்த மாத இறுதிக்குள் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆணையம் எதிர்பார்ப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  கூறுகிறார். எனவே இம்முறை இந்த சட்டமானது முறையாக அமுல்படுத்தப்படும் என நாங்களும் எதிர்பார்க்கின்றோம்.

தொலைத்தொடர்பு செயற்பாட்டாளர்களின் வலையமைப்பு

ஜனவரி 29 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டின் தகவல் தொடர்பு வலையமைப்புகளில் TRCSL அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகள் செயல்படுத்தப்படுவதைத் தடுப்பது குறித்தும் TRCSL அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகள்/தொடர்பு சாதனங்களை குறிப்பாக அடையாளம் காண பிரத்தியேக நடைமுறைகள் எதுவும் உள்ளனவா என நாம் டயலொக் நிறுவனத்திடம் வினவினோம்.

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதனால் அதுகுறித்த தகவல்களை எதிர்காலத்தில் வழங்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே அது தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன் இந்த கட்டுரையில் இணைப்பதற்கு காத்திருக்கின்றோம்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நாட்டிற்குள் கையடக்க தொலைபேசிகள்/ தொலைத் தொடர்பு சாதனங்களை கொண்டு வரும்போது TRCSL அனுமதியை பெறுதல்

சிம் ஒன்றை உபயோகித்து தொலைத்தொடர்பு வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள எந்த வகையான கையடக்கத் தொலைபேசிகளையும்/ சாதனங்களையும் இறக்குமதி செய்வதற்கு/கொண்டு வருவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடமிருந்து (TRCSL) அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல் அவசியமானதாகும்.Link

தனிப்பட்ட பயன்பாட்டிற்கான கையடக்க தொலைபேசிகள்  / சாதனங்களை கொண்டு வருதலின் போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

  1. ஐந்து (5) அலகுகள் வரை மட்டுமே இறக்குமதி / தனிப்பட்ட பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.
  2. விண்ணப்பமானது பின்வரும் ஆவணங்களை இணைத்து பரிசீலனைக்காக TRCSL க்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    1. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
    2. பெறுனரின் பெயர் மற்றும் இறக்குமதி செய்ய/விடுவிப்பு செய்யவுள்ள உபகரணங்களின் விபரங்களை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விலைப்பட்டியல் / தடுப்பு பற்றுச்சீட்டு (Detention Receipt) / விமான வழி பற்றுச்சீட்டு (Air way Bill) / பொருள் அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு (Parcel Receipt) .
    3. மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களின் தொழில்நுட்ப விபரக்குறிப்பு (Specifications).
    4. தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
    5. மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர் சார்பில் வேறு யாரேனும் அனுமதியைப் பெற வேண்டுமாயின் அதிகாரமளித்தல் கடிதம் மற்றும் இருவரினதும் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டின் பிரதிகள்.
  3. TRCSL இனால் செயல்முறைப்படுத்தப்படும் விண்ணப்பப் படிவம்.
  4. இறக்குமதிசெய்ய/விடுவிக்க உத்தேசித்துள்ள உபகரணத்திற்காக கட்டணங்கள் ஏற்புடையதாயின் வரி விலைப்பட்டியல் TRCSL மூலம் விண்ணப்பதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கீகாரத்தை பெறுவதற்கு பணம் செலுத்தப்படவும் வேண்டும்.
  5. மேலே 2 (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் விண்ணப்பதாரிக்கு பின்வரும் இரண்டு கடிதங்கள் வழங்கப்படும்.
    1. ஏற்றுமதி மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதம்.
    2. சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதம்.

கையடக்க தொலைபேசிகள்/  சாதனங்களின் மொத்த இறக்குமதி

  1. TRCSL இனால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் வியாபாரி உரிமம் இருக்க வேண்டும்.
  2. இந்த வகையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள்  / சாதனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. வகை ஒப்புதல் பெறுவதற்கான விவரங்கள்
  3. விண்ணப்பபடிவமானது பரிசீலனைக்காக பின்வரும் ஆவணங்களுடன் TRCSL க்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    1. இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள உபகரணங்களின் விபரங்களைக் குறிக்கும் கோரிக்கைக் கடிதம்
    2. முன்மாதிரி விலைப்பட்டியல் (Pro-forma Invoice) (அசல் + 3 நகல்கள், அசல் சரிபார்பின் பின் மீளளிக்கப்படும்)
    3. வகை ஒப்புதல் இலக்கம் மற்றும் திகதி அல்லது வகை அனுமதி தொடர்பாக TRCSL ஆல் வழங்கப்பட்ட வேறு ஏதாவது ஆவணங்கள் (ஏற்புடையதாயின்)
    4. செல்லுபடியாகும் விற்பனையாளர் உரிமத்தின் நகல்
  4. பாதுகாப்பு அனுமதிக்காக (ஏற்புடையதாயின்) விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு (MOD) அனுப்பப்படும்
  5. வரி விலைவிவரப் பட்டியல் TRCSL இனால் தயாரிக்கப்பட்டு விண்ணப்பதாரிக்கு வழங்கப்படுகின்றது (கட்டணங்கள் ஏற்புடையதாக இருப்பின்)
  6. TRCSL விடயங்கள் 3(i) மற்றும் 3(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து கட்டுப்பாட்டாளர்/இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு ஆட்சேபனை இல்லை கடிதத்தை அனுப்பி வைக்கும்.
  7. கீழ்குறிப்பிடப்பட்ட  ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர் TRCSL சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதமொன்றை விண்ணப்பதாரருக்கு வழங்கும் .
    1. கட்டுப்பாட்டாளரினால் வழங்கப்பட்ட அதிகாரமளித்தல் கடிதத்தின் பிரதி (இறக்குமதி உரிமம்)
    2. வணிக விலைப்பட்டியல் (அசல் +3 பிரதிகள், அசல் சரிபார்த்தத்தின் பின்னர் மீள்ளளிக்கப்டும்  அல்லது LC இன் TT ஆல் பணம் அனுப்பப்பட்டது / பணம் செலுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வங்கியால் முறையாக சான்றளிக்கப்பட்ட வணிக விலைப்பட்டியலின் நகல்)
    3. கட்டுப்பாட்டாளர்/இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு முகவரியிடப்பட்ட TRCSL யால் வழங்கப்பட்ட  கடிதத்தின் பிரதி (மேலே 6 வது விடயம்)
    4. படிவ விலைவிவரப் பட்டியலின் பிரதி (மேலே உள்ள விடயம் 3(ii) )
    5. கையடக்க தொலைபேசி /சாதனங்களின் IMEI எண்களை இணைப்பு 1 வடிவத்தில் [email protected] மின்னஞ்சல் செய்ய வேண்டும்
    6. மேலே 05 ஆம் விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைவிவரப் பட்டியலுக்கு முழுமையாக பணம் செலுத்துவதற்கான ஆதாரம்  (ஏற்புடையதாயின்)
  8. கையடக்கத் தொலைபேசிகள்/ சாதனங்கள் இறக்குமதி விடயத்தில் TRCSL குறிப்பு இலக்கமொன்றை வழங்குவதுடன் அது கையடக்கத் தொலைபேசியின்/ சாதனத்தின் பெட்டியில் வாடிக்கையாளர் குறிப்புக்கான (மாதிரி ஸ்டிக்கர்) ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்படும்.

கையடக்கதொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படுமா?

இலங்கை சந்தையில், TRCSL அங்கீகாரம் பெற்ற தொலைபேசிகள், TRCSL அங்கீகாரம் இல்லாத தொலைபேசிகளை விட பொதுவாக விலை அதிகம். தொலைபேசிகளை இறக்குமதி செய்யும் போது, ​​வரி செலுத்துதல் மற்றும் TRCSL அனுமதி பெறப்பட வேண்டும், மேலும் அவ்வாறு செய்வதற்கான நடைமுறை ஓரளவு சிக்கலானது என்பதால், TRCSL அனுமதி பெற்ற தொலைபேசிகளின் விலை ஓரளவு அதிகமாக இருக்கும். இருப்பினும், அத்தகைய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்போது, ​​விற்பனையாளர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நியாயமற்ற முறையில் விலைகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றது.

உங்கள் தொலைபேசியி உள்ள IMEI இலக்கம் என்றால் என்ன?

உங்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளின் IMEI எண், சர்வதேச அளவில் கையடக்க தொலைபேசிகளுக்கான அடையாள எண் ஆகும். இந்தத் தனித்துவமான எண் பல சந்தர்ப்பங்களில், தொலைந்துபோன தொலைபேசியை கண்டறிவதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது.

IMEI எண் என்பது 15 இலக்கங்கள் கொண்ட எண்ணாக இருக்கும். உங்களிடம் இரட்டை சிம் தொலைபேசி இருந்தால், இரண்டு 15 இலக்க IMEI எண்கள் இருக்கும். இது சாதனத்தின் பின்புறத்தில் இருக்கலாம்.

மேலும *#06# என டயல் செய்தால், ஒரு தகவல் பெட்டி திறக்கும். அதில் IMEI எண் இருக்கும். உங்கள் தொலைபேசி எத்தனை சிம்களை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட IMEI எண்கள் இருக்கும்.

அண்ட்ரொய்ட் தொலைபேசிகளில் செட்டிங்சில் இருக்கும் About phone என்ற பகுதியில் உங்கள் ஸ்மார்ட்போன் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இருக்கும். இதில் IMEI எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஐபோன் செட்டிங்சில் About என்ற பகுதியில் IMEI எண் காணப்படும்.

மேலுமு் போலியான IMEI எண்களைக் கொண்ட தொலைபேசிகளும் உள்ளன, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்த போலி, மோசடி தொலைபேசிகள் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

எனவே, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தொலைபேசிகளுக்கு இந்த IMEIஎண் பதிவை கட்டாயமாக்குவதன் மூலம் தொலைத்தொடர்பு நுகர்வோர் தரமான தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதே தெலைதொடர்பு ஒழுப்படுத்தல் ஆணைக்குழுவின் நோக்கமாகும்

இருப்பினும், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு  முந்தைய ஆண்டுகளில் இந்த முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது, ஆனால் அந்த முயற்சிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால் இம்முறை அது முறையாக செயல்படுத்தப்படும் என நாங்கள் நம்புகின்றோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Avatar

Title:கையடக்க தொலைபேசிகளின் IMEI எண்ணை கட்டாயமாக பதிவு செய்வது தொடர்பான தெளிவுபடுத்தல்

Written By: Suji Shabeedhran  

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *