INTRO
கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல 10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக பாராளுமன்றம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்தது.
குறித்த அறிக்கையில் அசோக ரன்வல மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பொறியியல் பட்டதாரி என்றும் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் தனது கலாநிதி பட்டத்தை முடித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிவிப்பை பார்வையிட
அதன்படி, புதிய சபாநாயகரின் கல்வித் தகமை குறித்து பல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருந்தன்
Virakesari | Archived Link | The Island | Archived Link
ரன்வலவின் பெயரில் உள்ள Linkedin கணக்கு, தற்போது அணுக முடியாத நிலையில் உள்ளதோடு, குறித்த கணக்கில் அவரது கல்வித் தகைமைகள் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளன.
இதேவேளை அசோக ரன்வல முன்னர் பணிபுரிந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அவரது சமகாலத்தவர்களின் கருத்துப்படி, அவர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு இயந்திர செயற்பாட்டாளராகவே (Operator) பணிபுரிந்துள்ளதாகவும், மேலும் அவரது தகுதி என வழங்கப்பட்ட தகவல்கள் தவறானவை என்று சமூக ஊடகங்களின் தொடர் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சபாநாயகரின் கல்வித் தகமை தொடர்பில சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ள அதேவேளை பிரதான ஊடகங்களிலும் அது தொடர்பான பல செய்திகள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தின் வெளியீடு
சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வில் தகைமைகள் குறித்து பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை மேற்கோள்காட்டி பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததால், பாராளுமன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அசோக ரன்வலவின் தகவல்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்
இதன்போது பாராளுமன்ற இணையத்தளத்தில் அசோக ரன்வல தொடர்பான விபரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 10 ஆம் திகதி மேற்கொண்ட ஆய்வில் குறித்த இணையத்தளத்தில் கலாநிதி என குறிப்பிடப்படவில்லை என்பதனையும் நாம் அவதானித்தோம்.
ஆனால், முன்னதாக பாராளுமன்ற இணையதளத்தில் வெளியான செய்திகளிலும், நேற்று (2024.12.10) பாராளுமன்றத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் அவரின் பெயருக்கு முன் கலாநிதி என குறிப்பிடப்பட்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது.
அசோக ரன்வலவின் கல்வித் தகைமைகள் குறித்தும் பாராளுமன்றத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்தும் நாம் பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சேவைகள் / தொடர்பாடல் பணிப்பாளர் (பதில்) எம். ஜயலத் பெரேராவிடம் வினவினோம் இதன்போது, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கூறியது போல் இது குறித்து அசோக ரன்வல அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதால் அதனை தற்போது குறிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழகம்
இது தொடர்பான உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறை பொறியியல் துறையிடம் பல தடவைகள் வினவினோம் இருப்பினும் பதிவு எண், பட்டம் பெற்ற ஆண்டு அல்லது வேறு எந்த தகவலும் இன்றி மாணவரின் பட்டப்படிப்பு பற்றிய தகவல்களைப் பெயரால் மட்டுமே கண்டுபிடிப்பது கடினமான பணியாகும் என அவர்கள் தெரிவித்ததுடன் அவர்களிடமிருந்து உரிய பதில்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
ஹிரு செய்திச் சேவை நடத்திய ஆய்வில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டமும் பெற்றதாக அவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியை பார்வையிட Archived Link
அசோக ரன்வலவின் கருத்து
இது தொடர்பில் நாம் அசோக ரன்வலவிடம் கடந்த 2024.12.05 ஆம் திகதி வினவினோம். இதன்போது தான் மொரட்டுவ பல்கலைக்கழத்தின் பட்டாதாரி என தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என அவர் குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் மீண்டுமொருமுறை அவரை தொடர்புகொண்ட போது, தான் ஜப்பானின் வசேடா பல்கலைக்கழத்தில் கலாநிதி பட்டம் பெற்றதாகவும், ஆனால் தான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகம்
ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில், குறித்த பல்கலைக்கழகத்தில் படித்த மற்றும் படிக்கும் இலங்கை மாணவர்களின் பெயர்களை நாம் பார்வையிட்டோம். இருப்பினும் அவற்றில் அசோக ரன்வலவின் பெயரை எம்மால் காண முடியவில்லை.அத்துடன் Google Scholar உட்பட பல அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ( கலாநிதி பட்டம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் ) பல இணையதளங்களில் அசோக ரன்வலவின் பெயர் தொடர்பில் நாம் ஆராய்ந்தபோதும் எமக்கு உரிய பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, சபாநாயகர், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா அப்படியானால், அது எந்த வகையான கலாநிதி பட்டம் போன்றவற்றைச் சரிபார்க்க அந்தப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் பீடத்திற்கு மின்னஞ்சல் மூலம் வினவியிருந்த போதிலும் இன்று வரை (டிசம்பர் 11) எங்களுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை. அந்த பதிலைப் பெற்றவுடன் இந்தக் கட்டுரையில் அதுகுறித்த தகவல்களை இணைப்பதற்கு காத்திருக்கின்றோம்.
எதிர்க்கட்சிகள் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவின் கருத்து
எதிர்கட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தனர், மேலும், ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படித்ததாக எந்த பதிவும் இல்லை என்றும், மேற்படி பல்கலைக்கழகம் தங்களுக்கு அதை உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சர்ச்சை தொடர்பில் சபாநாயகர் எதிர்வரும் நாட்களில் விளிக்கமளிக்கவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நேற்று (10) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் அசோக ரன்வலவின் கல்வித் தகைமை தொடர்பில் அறிந்துகொள்வதற்கு குறித்த பல்கலைக்கழகங்களின் உதவி கட்டாயமாக தேவைப்படும் நிலையில் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அது குறித்த உண்மையை வெளிகொணர்வது கடினம்.மேலும் உறுதிப்படுத்தபடாத தகவல்களை வெளியிடுவது எமது கோட்பாடுகளுக்கு முரணான விடயமாகும்.
இதேவேளை அசோக ரன்வல தனது ஆரம்ப பட்டப்படிப்பை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார் என தெரிவிக்கப்பட்ட விடயம் தவறானவை என நாம் மேற்கொண்ட ஆய்வின் போது அவரால் உறுதிப்படுத்தப்பட்டது.
எனவே அசோக ரன்வலவின் இளங்கலை பட்டம் தொடர்பில் தெளிவின்றி இருக்கும் பட்சத்தில் இளங்கலை பட்டம் பெறாத ஒருவரினால் எவ்வாறு கலாநிதி பட்டம் பெற முடியும் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.
கலாநிதி பட்டம் என்பது பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் உயரிய கல்விப் பட்டமாகும், மேலும் இது பொதுவாக ஆழமான கற்றல் முறைகள் மற்றும் ஆராய்ச்சி அறிக்கைகளை நிறைவு செய்வதன் மூலம் பெறப்படும் பட்டமாகும்.
ஒரு தொழில்நுட்ப துறையில், இளங்கலை பட்டம் இன்றி கலாநிதி பட்டம் பெற முடியுமா?
பெரும்பாலான பல்கலைக்கழகங்களால் கலாநிதி பட்டம் பெறுவதற்கு, முன்மொழியப்பட்ட ஆராய்ச்சி தலைப்பு தொடர்பான பட்டம் (இளங்கலை அல்லது முதுகலை) பூர்த்தி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
முதுகலை பட்டப்படிப்பு அல்லது குறைந்தபட்சம் ஒரு அடிப்படைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டாலும், சில பல்கலைக்கழகங்கள் அவ்வாறான பட்டங்கள் இன்றி கலாநிதி பட்டம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளன,எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன.
குறிப்பாக உயர்கல்வி முடித்து பட்டதாரி படிப்புகளுக்குச் செல்லாத, ஆனால் சம்பந்தப்பட்ட துறையில் அதிக தொழில், ஆராய்ச்சி அனுபவமுள்ள மற்றும் விரிவான அனுபவத்தின் மூலம் இந்தத் துறையில் புதிய அறிவைப் பெற நேரடியாகப் பங்களிப்புச் செய்த தொழில் வல்லுநர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த முறையில் கலாநிதி பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், ஆராய்ச்சி அனுபவத்தின் விரிவான ஆவணங்கள் உட்பட, அங்கீகரிக்கப்பட்ட பிற தொழில்முறை தகுதிகளுக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. Link
கலாநிதி பட்டம் பெறுவதற்கான முறை
அடிப்படை பட்டம்: தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெறுதல்.
முதுகலை பட்டம் (விரும்பினால்): சில திட்டங்களுக்கு கலாநிதி பட்டம் பெறுவதற்கு முன் முதுகலைப் பட்டம் பெறுவது அவசியமாகின்றது.
கலாநிதி பட்டம்: சாதரணமாக இந்த கற்கைநெறி, விரிவான பரீட்சைகள் மற்றும் ஆய்வறிக்கையின் இறுதி ஆராய்ச்சி திட்டம் தேவைப்படுகிறது. (research project)
இது தவிர, கலாநிதி பட்டம் பெறுவதற்கு வேறு வழிகளை பல பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
தொழில்முறை கலாநிதி பட்டங்கள்:
MD (Medical Doctor), JD (Juris Doctor) அல்லது EdD (Doctor of Education) போன்ற பட்டங்கள் இதில் அடங்கும். இருப்பினும், இவை பெரும்பாலும் ஆய்வறிக்கையை விட நடைமுறை செயற்பாட்டில் கவனம் செலுத்துகின்றன.
நேரடி கலாநிதி பட்டங்கள்: சில சந்தர்ப்பங்களில், முதுகலை பட்டப்படிப்பைத் தவிர்த்து, இளங்கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் நேரடியாக கலாநிதி பட்டப்படிப்பில் இணைய முடியும்.
கௌரவ கலாநிதி: பல்கலைக்கழகத் துறை, சமூகம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த நபர்களுக்கு கௌரவ கலாநிதி பட்டங்கள் வழங்கப்படலாம். இவற்றுக்கு கல்வித் தகைமை எதுவும் தேவையில்லை. கல்விப் படிப்பு அல்லது ஆய்வறிக்கைகள் இன்றி விதிவிலக்கான சாதனைகளுக்காக இவை வழங்கப்படுகின்றன.
வாழ்க்கை அனுபவ பட்டங்கள்: சில அங்கீகாரம் பெறாத நிறுவனங்கள் தொழில்முறை அனுபவத்தின் அடிப்படையில் இவற்றை வழங்குகின்றன, ஆனால் அவை கல்விச் சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
தெளிவுபடுத்தல்
இந்த கட்டுரையானது சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பான முழுமையான ஆய்வுக் கட்டுரை அல்ல என்பதுடன் குறிப்பிட்ட திணைக்களங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அது குறித்த தெளிவினை பெற நாம் தொடர்ந்தும் முயற்சிக்கும் அதேவேளை அவர்கள் அது குறித்த உரிய பதில்களை எமக்கு வழங்குவதற்கு தாமதிப்பதனால் இது குறித்த முழுமையான தகவல்களை வழங்குவதிலும் தாமதங்கள் ஏற்படுகின்றன.
எனவே இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் நாம் இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம். அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் மாத்திரமே எங்கள் உண்மை கண்டறியும் அறிக்கைகளை வழங்க எங்கள் குழு எப்போதும் உறுதிபூண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதிப் பட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்
Written By: Suji ShabeedhranResult: Insight
