வலஸ்முல்ல பகுதியில் குழந்தை காணாமற்போன சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

Insight இலங்கை | Sri Lanka

INTRO

கடந்த சில நாட்களாக பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கண்டுப்பிடித்து தரும் படியான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை நாம் அவதானித்தோம்.

மேலும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருந்தமையும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியுமாறு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் குழந்தை காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விபரம் (what is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் மாத்தறை வலஸ்முல்ல பகுதியில் காணமற்போன தனது குழந்தையை கண்டுப்பிடித்து தருமாறு கோரி தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டு குழந்தையின் புகைப்படும் கடந்த 2024.12.28 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் தமது சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

மேலும் குறித்த பதிவை வெளியிட்ட அதே பேஸ்புக் கணக்கில் மீண்டுமொருமுறை அந்த குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தி கடந்த 2024.12.29 ஆம் திகதி வெளியிட்ட பதிவில், குறித்த புகைப்படத்தில் உள்ள குழந்தையின் தந்தை கொடுத்த தகவல்களுக்கு அமையவே தான் இதனை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலில் இவர் வெளியிட்ட பதிவில் தான் இந்த குழந்தையின் தந்தை என்ற அடிப்படையிலேயே தகவல்கள் காணப்பட்டன. ஆனால் மீண்டும் இவர் வெளியிட்ட பதிவில் அவருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய பதிவிடப்பட்ட ஒன்று என்ற அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த பதிவில் இது எந்த இலாப நோக்கத்திற்காகவும் வெளியிடப்பட்ட ஒன்று அல்ல எனவும் குழந்தையை கண்டுப்பிடித்து கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் மாத்திரமே இது வெளியிடப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Fb| Archive

மேலும் இது தொடர்பான உண்மையை கண்டறியுறுமாறும் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் கவிந்து ஜனன்ஜய என்ற பேஸ்புக் கணக்கில் குறித்த குழந்தையின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தமை தெரியவந்ததுடன், அண்மைக் காலமாக குறித்த குழந்தையின் எந்தவொரு புகைப்படமும் அந்த கணக்கில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. மேலும் காணாமற்போன குழந்தையை கண்டுப்பிடித்து தருமாறு தெரிவிக்கப்பட்ட எந்தவொரு பதிவுகளும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

நாம் மேற்குறிப்பிட்ட பேஸ்புக் கணக்னை தொடர்ந்து ஆராய்ந்த போது அந்த கணக்கு உரிமையாளரின் வசிப்பிடமாக வலஸ்முல்ல பிரதேசம் குறிப்பிடப்பட்டிருந்தது. 

குறித்த குழந்தையும் மாத்தறை வலஸ்முல்ல பிரதேசத்தில் வைத்தே காணாமற்போனதாக குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் இது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் குழந்தை காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தை Truecaller இல் ஆராய்ந்த போது குறித்த இலக்கமானது காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டிருந்த பேஸ்புக் கணக்கு உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், அதில் இருந்த புகைப்படமும் கவிந்து ஜனன்ஜய என்ற பேஸ்புக் கணக்கில் பதவிட்டிருந்த புகைப்படத்தை ஒத்தாக இருந்தமையும் கண்டறியப்பட்டது.

மேலும் நாம் இந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்ட போது, சமூக ஊடகப் பதிவுகளில் உள்ள குழந்தையின் தந்தை தான் என்பதை கவிந்து ஜனன்ஜய என்ற நபர் எமக்கு உறுதிப்படுத்தினார்.

அத்துடன் தனது மகளுக்கு நான்கரை வயது என்றும், அவரது மனைவியே தனது மகளை அழைத்துச் சென்றுள்ளதாகவும், தற்போது தாய் மற்றும் குழந்தை இருவரையும் தேடி வருவதாகவும், அருகில் உள்ள கட்டுவன பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

இதேவேளை  கீர்த்திகா தமயந்தி என்பவர் தனது மனைவியின் தாய் எனவும், தனது மனைவி தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவரின் தாய் வீட்டில் தங்கியிருந்ததாகவும், இதனால் மனைவியின் தாயாரே கட்டுவன பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தனது மனைவிக்கு திருமணத்துக்குப் புறம்பான ஒரு உறவு இருப்பதாகவும், குழந்தையுடன் அந்த நபரிடம் சென்றுவிட்டதாக தாம் சந்தேகதிப்பதாகவும் தெரிவித்தார். 

தனது மனைவி குழந்தையுடன் வீட்டை விட்டுச் சென்ற தினத்தன்று, தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார் எனவும், இதன்போது அவர் கடவத்தை பகுதியில் இருப்பதாக  குறிப்பிட்டதாகவும், ஆனால் தற்போது அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை என்றும் அவர் எம்மிடம் கூறினார்.

இது குறித்து மனைவி திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்திருந்த நபரிடம் கேட்டபோது, ​​மனைவி மற்றும் குழந்தை தன்னிடம் வரவில்லை என அந்த நபர் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தனது குழந்தையைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறும் அவர் எம்மிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட முறைப்பாட்டு பத்திரத்தின் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

குறித்த முறைப்பாட்டு பத்திர புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள தகவலின்படி, கீர்த்திகா தமயந்தி என்ற பெண் தனது மகளான இஷா ரித்னி ஹன்சமாலிகா என்பவர் தனது நான்கரை வயது பேத்தியான தேசாதி திலீஷாவை அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து சென்றதாக 28.12.2024 அன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் காரணமாக இவ்விடயத்தை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தொடர்புகொண்டு  இது குறித்து நாம் வினவினோம்.

கட்டுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

இது உண்மை சம்பவம் எனவும் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் கட்டுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த குழந்தை கடத்தப்படவில்லை எனவும்,  22 வயதான தாய் தனது நான்கரை (4 2/1) வயது மகளை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

குழந்தையின் தாயாருக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாகவும், இதற்கு முன்னரும் தாயார் தனது திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்தவருடன் சென்று, மூன்று மாதங்கள் பிலியந்தலை பிரதேசத்தில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு எச்சரித்ததை அடுத்து தாய் திரும்பி வந்ததாகவும், 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும்  தனது மகளையும் அழைத்துச் சென்றுள்ளதகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

மேலும் குழந்தையை அழைத்துக்கொண்டு குறித்த  தாய் தனது காதலனிடம் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும், இருப்பினும் குறித்த பெண்ணின் காதலனிடம் விசாரித்தபோது  அந்த பெண்ணும் குழந்தையும் தன்னுடன் இல்லை என அவர் தெரிவித்தாகவும் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். 

குறித்த நபர் பொய் கூறுகிறார் என சந்தேகிப்பதாகவும் எவ்வாறாயினும், குழந்தை மற்றும் தாயை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் கட்டுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

குழந்தையின் தந்தை கொழும்பில் கட்டுமான வேலைகளின் போது உதவியாளராக தொழில் புரிவதாகவும் கட்டுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

கவிந்து ஜனன்ஜயவின் பேஸ்புக் கணக்கில் அது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

தெளிவுபடுத்தல்

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பெண் குழந்தையொன்றை காணவில்லை என தெரிவிக்கப்பட்டு பதிவிடப்பட்ட புகைப்படங்களில் உள்ள குழந்தையை அவரின் தாயே அழைத்துச் சென்றுள்ளமை தெளிவாகின்றது.

மேலும் இந்த குழந்தை கடத்தப்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன் குறித்த குழந்தையின் தாயாரே அந்த குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். எவ்வாறாயினும் இதுவரை காணாமற்போனதாக கூறப்பட்ட குழந்தை மற்றும் அவரது தாய் தொடர்பான எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:வலஸ்முல்ல பகுதியில் குழந்தை காணாமற்போன சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

Written By: Suji Shabeedhran  

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *