UPDATE:
குறித்த சம்பவம் தொடர்பில் நாம் இன்றைய தினம் (2025.03.18) குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது நேற்று (2025.03.17) சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஏனைய மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பிரிவு அதிகாரிகளினால் கம்பளை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், இதன்போது கம்பளை நீதவான், 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் செய்யும் தவறுகளை நீதிமன்றத்தினால் தவறாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், அவர்களை நீதிமன்றத்தினால் தண்டிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த மாணவர்கள் 11 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த மூன்று மாணவர்களும் 9 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த சிறுவன் மீது சக மாணவர்களினால் டினர் ஊற்றி பற்றவைக்கப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டனார்.
சிங்கள மொழி பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ் மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்றவைத்தாக தெரிவித்து சமூக ஊடகங்களில் மாணவனின் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்று பரவாலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது.
எனவே குறித்த தகவல் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் நாவலப்பிட்டி தொகுதியை சேர்ந்த ஒரு சிங்கள பாடசாலைக்கு போகும் தமிழ் மாணவன் இவரை பாடசாலை சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்றவைத்து உள்ளார்கள்
பல நாட்களாக கம்பளை வைத்திய சாலையில் இருந்து வீட்டுக்கு வந்திருக்கிறார்
பாடசாலை நிர்வாகம் பொலிஸ் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அது தொடர்பில் உண்மை அறியாத பலரும் அதனை சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Explainer (தெளிவுபடுத்தல்)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று ஒரு மாணவன் மீது சக மாணவர்களினால் டினர் ஊற்றி பற்ற வைத்திருந்தால் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும், எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் பிரதான ஊடகங்களில் இவ்வாறான செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காண முடியவில்லை.
குறித்த பதிவில் அந்த பாடசாலையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்காவிடினும் குறித்த பதிவின் கமெண்ட பக்கத்தில் அந்த பதிவை பதிவிட்டவரினால் குறித்த பாடசாலையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே நாம் முதலில் இது எந்த பகுதியில் இடம்பெற்ற சம்பவம் என்பதனை ஆராய்ந்தோம், இதன்போது குறித்த சம்பவமானது நாவலப்பிட்டிய குறுந்துவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் என்பதனை அறிந்துகொண்டோம்.
குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
குறித்த சம்பவம் தொடர்பில் நாம் குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவினோம். இதன்போது குறித்த சமூக ஊடகப்பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று சக மாணவர்களினால் குறித்த மாணவன் மீது டினர் ஊற்றி பற்ற வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தகவலானது தவறாக பகிரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்
மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனும் மேலும் 3 மாணவர்களும் வகுப்பறையில் விளையாடிக்கொண்டிருந்தாகவும் இதன் போது பாடசாலையில் இருந்து எடுக்கப்பட்ட வெற்று டினர் போத்தல் ஒன்றை இந்த 3 மாணவர்களும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பையில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் அதனை பாதிக்கப்பட்ட மாணவன் கண்டெடுத்துள்ளார். அதன் பின்னர் ஏனைய மூன்று மாணவர்களும் அருகில் இருந்த புத்தர் சிலைக்கு முன் ஏற்றப்பட்டிருந்த விளக்கில் அந்த டினர் போத்தலை பற்ற வைத்துள்ளனர். பின்னர் அந்த போத்தல் பற்றி எரியும் போது குறித்த மாணவர்கள் அதை தூக்கி எறிந்துள்ளனர் அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த மேசையில் அந்த டினர் போத்தல் மோதி காயமடைந்த மாணவனின் கால்களில் வீழ்ந்து எரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த சம்பவமானது குறுந்துவத்த யடபஹன ஆரம்பநிலை பாடசாலையிலேயே நடைபெற்றதாகவும், திருச்செல்வம் செல்வகுமார் என்ற 14 வயது மாணவனே குறித்த சம்பவத்தில் காயமடைந்தாகவும், பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு பாடசாலை நிர்வாகத்தினால் உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தாலும் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனைப் போன்று குறித்த மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்றவைத்ததாக பகிரப்படும் தகவல் தவறானது எனவும் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது அறியாமல் செய்த செயலாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் சமூக ஊடகங்களில் இவ்வாறு தவறாக பரப்பப்படும் விடயங்களினால் அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும் குறுந்துவத்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் கம்பளை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இன்றைய தினம் (2025.03.17) குறித்த மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் தரப்பினரை பொலிஸ் நீதி பிரிவிற்கு அழைத்து அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த மாணவர்கள் 15 வயதிற்கும் குறைந்தவர்கள் என்பதனால் அவர்களை கைது செய்யவோ அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார்
சம்பவத்தில் காயமடைந்த சிறுவனின் தாயாரான திலகமணி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி குறித்த சம்பவம் தொடர்பில் நாம் வினவியிருந்தோம்.
இதன்போது தனது மகனுக்கு குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தில் தான் ஊரில் இருக்கவில்லை எனவும் அவரின் சொந்த ஊரான பண்டாரவளைக்கு தனது தனிப்பட்ட வேலை ஒன்றுக்காக சென்றிருந்த போதே மகனுக்கு இவ்வாறு நடந்து விட்டதாக தனக்கு தொலைபேசியில் பாடசாலை நிர்வாகம் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் தனது பிள்ளை உட்பட மேலும் 3 மாணவர்கள் இணைந்து விளையாடிக்கொண்டிருந்த போது பாடசாலையில் காணப்பட்ட டினர் போத்தலை குறித்த மாணவர்கள் பற்ற வைத்ததாகவும் அந்ந சந்தர்ப்பத்தில் அந்த போத்தல் தீப்பற்றி எரிவதை கண்டு சக மாணவர்கள் அந்த போத்தலை தனது மகனை் இருக்கும் பக்கத்திற்கு தூக்கி எறிந்ததாகவும் அப்போது அந்த போத்தல் அங்கிருந்த மேசையில் மோதி தனது மகனின் கால்களில் வீழ்ந்து தீப்பற்றியதாக தனது மகன் தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவருடைய மகனான செல்வகுமாருக்கு 14 வயது எனவும் அவர் அந்த படசாலையில் படிக்கும் வயது அல்ல எனவும் எனினும் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக அவரை வேறு பாடசாலை மாற்ற முடியாதமையினால் அவர் தொடர்ந்து அந்த பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி பயின்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பாடசாலையில் 1ஆம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரை மாத்திரமே இருப்பதாகவும் தனது மகனுடன் விளையாடிய ஏனைய 3 மாணவர்களுக்கும் 11 வயது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அவர்கள் தமது சொந்த ஊரான பதுளையில் இருந்து குறுந்துவத்த பிரதேசத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் தனது மகன் பாடசாலை செல்லாமல் இருந்ததாகவும் அப்போது அந்த பகுதி கிராம சேவகர் மற்றும் குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இணைந்தே இந்த யடபஹன ஆரம்பநிலை பாடசாலையில் தனது மகனை சேர்த்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த சம்பவம் மாணவர்கள் இணைந்து விளையாடிக்கொண்டு இருக்கும் போது இடம்பெற்ற ஒரு சம்பவமே தவிர சக மாணவர்கள் இணைந்து வேண்டும் என்றே தனது மகன் மீது டினர் ஊற்றி பற்றவைக்கவில்லை எனவும் சமூக ஊடகங்களில் இவ்வாறு தவறாக பகிரப்பட்டு வருகின்றமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பாடசாலை நிர்வாகத்தின் கவனக்குறைவினாலேயே வெற்று டினர் போத்தல்கள் அவ்வாறு வைக்கப்பட்டிருந்தாகவும் தனது மகனுக்கு இவ்வாறு இடம்பெற்றதன் பின்னர் பாடசாலை நிர்வாகத்தினால் அவர்களுக்கு வீட்டிற்கு தேவையான சில உணவுப்பொருட்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டதாகவும் குறித்த மாணவனின் தாயார் எம்மிடம் தெரிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவருடைய தயார் சம்பவம் தொடர்பில் நேரில் சென்று விசாரித்த போது தெரிவித்த காணொளி பின்வருமாறு
பிராந்திய ஊடகவியலாளர்கள்
குறித்த சம்பவம் தொடர்பில் நாம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கம்பளை பகுதி பிராந்திய செய்தியாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது குறுந்துவத்த யடபஹன ஆரம்ப நிலை பாடசாலையில் தமிழ் மாணவர் ஒருவருக்கு எரிகாயங்கள் ஏற்பட்ட சம்பவம் உண்மை எனிலும் அந்த மாணவர் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி எரித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பாடசாலையில் வெற்று டினர் போத்தலை வைத்து மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது அதை மாணவர்கள் பற்ற வைத்துள்ளனர். பின்னர் பற்றி எரியும் போத்தலை மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவன் இருக்கும் திசையை நோக்கி தூக்கி எறிந்துள்ளனர் அந்த சந்தர்ப்பதிலேயே குறித்த மாணவனின் மீது அந்த டினர் போத்தல் வீழ்ந்து அவரின் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டதக அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் உண்மையில் சக மாணவர்களினால் குறித்த மாணவன் மீது டினர் ஊற்றி பற்ற வைக்கப்பட்டிருந்தால் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் நாம் அறிக்கையிட்டிருப்போம். எனினும் இது மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் அறியாமயைினால் இடம்பெற்ற ஒரு சம்பவம் இதனை சிலர் சமூக ஊடகங்கள் வழியாக கொலை முயற்சியாக சித்தரிப்பது மிகவும் தவறான செயல் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கம்பளை வலயக் கல்வி பணிப்பாளர் நிஹால் அலஹகோன்
குறித்த சம்பவம் தொடர்பில் நாம் கம்பளை வலயக் கல்வி பணிப்பாளர் நிஹால் அலஹகோன் அவர்களை தொடர்பு கொண்டு வினவினோம், குறித்த பாடசாலையில் இடம்பெற்ற சம்பவமானது மாணவர்கள் விளையாடும் போது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் எனவும் சக மாணவர்களினால் தமிழ் மாணவர் ஒருவர் மீது டினர் ஊற்றி எரிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த சம்பவமானது கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் குறித்த பாடசாலையானது சிங்கள மொழி மூலமான ஆரம்பநிலை பாடசாலை எனவும் அந்த பாடசாலையில் கிட்டதட்ட 75 மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் அதில் பாதிக்கப்பட்ட மாணவன் உட்பட 3 தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியிலேயே கல்விப் பயில்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மாணவர்கள் விளையாடும் போது தவறுதலாக இடம்பெற்ற இந்த சம்பவத்தினை சக மாணவர்கள் இணைந்து குறித்த மாணவனை கொலை செய்ய முயற்சித்தாக சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனால் இது மக்களிடையே இனவாதப் பிரச்சினையை தோற்றுவிப்பதோடு இந்த மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த சம்பவம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு அது குறித்த சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறுந்துவத்த யட்டிபஹன ஆரம்ப நிலை பாடசாலையின் அதிபர்
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் நாம் குறுந்துவத்த யட்டிபஹன ஆரம்பநிலை பாடசாலையின் அதிபரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் அவரை தொடர்புகொண்ட பின்னர் பாடசாலை தரப்பில் அவரின் கருத்துக்களை இந்த கட்டுரையில் இணைப்பதற்கு நாம் காத்திருக்கின்றோம்.
குறுந்துவத்த பிரதேச வைத்தியசாலை
மேலும் நாம் இது குறித்து குறுந்துவத்த பிரதேச வைத்தியசாலைக்கு தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த சிறுவன் முதலில் குறுந்துவத்த வைத்தியசாலைக்கே கொண்டுவரப்பட்டதாகவும், அங்கிருந்து அவரை மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டனர். மேலும் தற்போது பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தீக்காயங்களுக்கு மருந்து போடுவதற்காக தமது வைத்தியசாலைக்கே வந்து செல்வதாகவும் குறிப்பிட்டனர். அத்துடன் அவர் வரும் சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவனோ அல்லது அவரின் தயாரோ இது ஏனைய மாணவர்களினால் வேண்டும் என்றே டினரை தனது கால்களில் ஊற்றி பற்றவைத்தாக அவர்கள் குறிப்பிடவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
அத்துடன் தற்போது அந்த சிறுவனின் தீக்காயங்கள் படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் யட்டிபஹண சிங்கள மொழி மூலமான ஆரம்பநிலை பாடசாலையில் கல்விப்பயின்று வந்த தமிழ் மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி எரித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலானது தவறானது என்பதுடன். 14 வயதான செல்வகுமார் என்ற மாணவனுடன் 11 வயதுடைய ஏனைய மூன்று மாணவர்கள் இணைந்து விளையாடிக்கொண்டிருந்த சர்ந்தர்ப்பத்தில் அருகில் இருந்த டினர் போத்தலை பற்றவைத்துள்ளனர் அந்த சந்தர்ப்பத்தில் அந்த போத்தல் பற்றி எரிந்ததனை கண்டு மாணவர்கள் அதனை தூக்கி எறிந்துள்ளனர் அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த மேசையில் அந்த டினர் போத்தல் மோதி குறித்த மாணவனின் கால்களில் வீழ்ந்து அந்த மாணவனுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது தொடர்பில் கம்பளை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
மேலும் மாணவர்கள் விளையாடும் பொது தவறுதலாக இடம்பெற்ற ஒரு சம்பவத்தினை சக மாணவர்கள் இணைந்து குறித்த தமிழ் மாணவன் மீது வேண்டுமென்றே டினர் ஊற்றி பற்ற வைத்ததாக சமூக ஊடகங்களில் தவறாக பகிரப்படுவதன் மூலம் மக்கள் மத்தியில் இனப்பிரச்சினைகளை தோற்றுவிப்பதுடன் அதனால் குறித்த மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்படும் எனவும் கம்பளை வலயக் கல்வி பணிப்பாளர் நிஹால் அலஹகோன் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் மாணவர்களிடையே இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையும் காரணம் என்பதனை நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
மேலும் பாடசாலையில் மாணவர்களினால் அவர்களின் சிறு வயதில் அறியாமல் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் ஆபத்தான நிலைகளையும் தோற்றுவிக்கக் கூடும் எனினும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அத்துடன் இவ்வாறு சிறு பிள்ளைகளின் அறியாமையினால் நடைபெற்ற விடயங்களை சமூக ஊடகங்கள் வழியாக தவறாக சித்தரிக்கப்படுவதும் தவறான செயலாகவே பார்க்கப்படுகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்ற வைத்தார்களா?
Fact Check By: suji shabeedharanResult: Insight
