
இந்தியாவில் பிராயக்ராஜில் மஹா கும்பமேளா இடம்பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்வை மையப்படுத்தில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஷிகர் தவான் இந்திய திரைப்பட நடிகையான ஹூமா குரேஷியுடன் மஹா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
எனவே குறித்த புகைப்படங்கள் தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் பிரயாக்ராஜில் உள்ள புனித மஹாகும்பத்தில் ஹுமா மற்றும் ஷிகர் தவான் ஆன்மீகத்தை தழுவினர் என ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.01.27) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மஹா கும்பமேளாவை முன்னிட்டு சமூக ஊடகங்களில் இவ்வாறான பல புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட புகைப்படங்கள் தொடர்பில் நாம் உண்மை அறியும் நோக்கில் இம்முறை மஹா கும்பமேளாவில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுடன் இந்திய நடிகையான ஹூமா குரேஷி வருகைத் தந்தமை தொடர்பான செய்திகள் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்தோம்.
இதன்போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை எனினும் இந்த நிகழ்வில் கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பிரபல ஆன்மீகவாதிகள் பங்கேற்று வருவதாகவும், இதில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சில செய்திகள் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது. Link
இதன் பின்னணியில் ஷிகர் தவான் மற்றும் ஹூமா குரேஷி கும்பமேளாவில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் பார்ப்பதற்கு AI தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டவை போன்று தென்படுவதன் காரணத்தினால் குறித்த புகைப்படங்களை Hive Moderation AI detection tools ஐ உபயோகப்படுத்தி ஆய்வு செய்தபோது அவை AI தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
மேலும் மஹா கும்பமேளாவில் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன.
அதனைத் தொடரந்து குறித்த புகைப்படங்களும் AI தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டவை என்பதனை எமது இந்திய தமி்ழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் (fact crescendo tamil ) ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கும்பமேளா
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் (திரிவேணி சங்கமம்) இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழாவே பூரண கும்பமேளா எனப்படுகிறது.
மஹா கும்பமேளா
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மஹா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மஹா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கிய இந்த மஹா கும்பமேளா பெப்ரவரி 26 ஆம் திகதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில் இன்றுடன் முதல் அமிர்த ஸ்நானம் (புனித நீராடல்) முடிவடைந்து நாளை (ஜனவரி 29) மவுனி அமாவாசையையொட்டி 2 ஆம் கட்ட அமிர்த ஸ்நானம் தொடங்குகிறது.
மவுனி அமாவாசை நாளில், மக்கள் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வார்கள். இந்த நாளில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னோர்கள் பூமிக்கு வருவதாக நம்பப்படும் இந்த நாளின் முக்கியத்துத்தால் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எனவே நாளை திரிவேணி சங்கமத்தில் நீராட மஹா கும்பமேளாவுக்கு இலட்சக்கணக்கானோர் இன்றுமுதலே படையெடுத்து வருவதாக இந்திய செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மஹா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பெப்ரவரி 26 ஆம் திகதிக்குள் மொத்தமாக 40 கோடி பேர் வருகை தருவார்கள் என இந்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் இந்திய ஊடகங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளன.Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஷிகர் தவான் மற்றும் இந்திய திரைப்பட நடிகையான ஹூமா குரேஷி ஆகியோர் மஹா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் போலியானது என்பதுடன் அவை AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஷிகர் தவான், ஹூமா குரேஷி ஆகியோர் மஹா கும்பமேளாவில் பங்கேற்றனரா?
Fact Check By: Suji ShabeedharanResult: False
