பாடகி யோஹானி நேர்காணல் நிகழ்ச்சியில் உடனடியாக பணம் சம்பாதிக்கும் வழி தொடர்பில் வெளிப்படுத்தினாரா?

False இலங்கை | Sri Lanka

இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பிரபலமான இலங்கை இசை நட்சத்திரமான யோஹானி டி சில்வா, ஒரு நாளைக்கு 616,467 ரூபா முதல் 820,969 ரூபா வரை சம்பாதிக்கக் கூடிய இரகசிய முறை ஒன்றை பற்றி வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

அத்துடன் குறித்த முறையில் இலகுவில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பெருமளவானோர் குறித்த முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதிக தொகையை முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளனர்

இதனைத்தொடர்ந்தே இது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

லங்காதீப பத்திரிகையினால் சிங்கள மொழியில் நடத்தப்படும் “தனுட்ட கியன்ன”  என்ற  நேர்காணல் நிகழ்ச்சியின் போது, ​​இலங்கை பாடகி யோஹானி டி சில்வா மிகவும் எளிதான மற்றும் இலாபகரமான வருமான முறையை வெளிப்படுத்திய பின்னர் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், இந்த இலாபகரமான முதலீட்டின் பொருளாதார தாக்கம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளதாகவும் தெரிவித்து ஆங்கிலத்தில் குறித்த பதிவு கடந்த 2025.02.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

கையடக்க தொலைபேசியில் பார்க்குப் ஒருவர்  இந்தப் பதிவைக் கிளிக் செய்தால், ஆங்கில பத்திரிகையான  Daily Mirror இல் வெளியிடப்பட்டதாக கூறப்படும் ஒரு கட்டுரைக்கு நீங்கள்செல்வீர்கள்

அந்தக் கட்டுரையில், குறித்த நேரடி நிகழ்ச்சியின் போது யோஹானி டி சில்வா, தனுவிடம், இலகு வைப்பு முறை மூலம் ஒரு நாளைக்கு ரூ.616,467 முதல் ரூ.820,969 வரை சம்பாதிப்பதாகவும், அந்த முதலீட்டில் இணைவதற்கு  Immediate Flex இணையதளத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்து, 74,000 ரூபா என்ற சிறிய தொகையை முதலீடு செய்து, ஒரு நாளைக்கு 6 தொடக்கம் 8 இலட்சம் ரூபா வரை தான் சம்பதிப்பதாக கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில்,குறித்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தனு இன்னசித்தம்பி, முதலீடு செய்த உடனேயே பலன்களைக் காண முடியும் என்று கூறி, நிகழ்ச்சியின் போதே அதில் முதலீடு செய்ததாகவும் பின்னர், குறித்த நிகழ்ச்சியின் நடுவிலேயே தனது முதலீடுகள் அதிகரித்ததாகவும், எளிதாக நிறைய பணம் சம்பாதிக்கும் முறையை வெளிப்படுத்தினால், அது நாட்டின் பொருளாதார சமநிலைக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும், எனவே அது தொடர்பிலான சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் ஆனால், இது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் திட்டம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி குறித்த செயலி மூலம் பணம் முதலீடு செய்ய ஊக்குவிக்குவித்துள்ளார். என அந்ந  கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Desktop மூலம் குறித்த பேஸ்புக் பதிவை  கிளிக் செய்யும்போது, ​​அது உங்களை நேரடியாக அந்த முதலீட்டு இணையதளத்திற்கு அழைத்துச்செல்லும்

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று “தனுட்ட கியன்ன“ (Danuට කියන්න) எனும் நிகழ்ச்சியில் பாடகி யோஹானி பங்குப்பற்றியுள்ளாரா என நாம் ஆராய்த போது  Daily Mirror பத்திரிகை செய்தி என தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட செய்தியில் பிரசுரிக்கப்பட்டிருந்த நோர்காணல் புகைப்படத்தின் பின்னணியை ஒத்த ஒரு நிகழ்ச்சியை எம்மால் காணமுடிந்தது.

குறித்த நிகழ்ச்சியானது 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி Youtube இல் ஒளிபரப்பப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை முழுமையாக நாம் அவதானித்த போது அதில் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று எந்தவொரு முதலீட்டு திட்டங்களை பற்றி யோஹானி தெரிவிக்கவில்லை என்பதுடன் தொகுப்பாளர் தனு இனசித்தம்பியால் அந்த சர்தர்ப்பத்தில் எந்தவித முதலீடுகளும் செய்யப்படவில்லை என்பது எமக்கு உறுதியானது.

குறித்த நிகழ்ச்சியை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Link

பின்னர் நாம் மேற்குறிப்பிட்ட பேஸ்புக் பதிவில் உ்ள்ள இணைப்பை கிளிக் செய்தவுடன் உள் செல்லும் Daily Mirror ஆங்கில் பத்திரிகையின் கட்டுரை தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, உண்மையில் Daily Mirror  பத்திரிகையில் அவ்வாறான எத்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்பதனை எம்மால் உறுதிப்படுத்த முடிந்தது.

அத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பத்திரிகையின் domain ஐ நாம் பரிசோதித்த போது ( vutreswize.com) அது Daily Mirror இணையதளத்தின் domain(dailymirror.lk) அல்ல என்பதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

சமூக ஊடகப் பதிவில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் domain இற்கும் உண்மையான Daily Mirror இணையதளத்தின் domain இற்கும்  இடையிலான புகைப்பட ஒப்பீடு பின்வருமாறு

யோஹானி டி சில்வா

மேலும் இது குறித்து நாம் பாடகி யோஹானியின் முகாமையாளர் திலஞ்சன் செனவிரத்னவிடம் வினவியபோது இது முற்றிலும் போலியான பதிவு எனவும் குறித்த நேர்காணலின் போது யோஹானி எந்தவொரு முதலீட்டு திட்டங்கள் குறித்தும் தெரிவிக்கவில்லை எனவும் அதுமட்டுமன்றி அவர் எந்தவொரு முதலீட்டு திட்டங்களிலோ அல்லது நிதி ஊக்குவிப்பு முறைகளிலோ ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் தனு இனசித்தம்பி

குறித்த விடயம் தொடர்பில் நிகழச்சியை தொகுத்து வழங்கிய தனு இனசித்தம்பியிடம் வினவியபோது, இது போலியான தகவல் எனவும் தான் தொகுத்து வழங்கும் குறித்த நிகழ்ச்சியில் பங்குப்பற்றிய யோஹானியிடமோ அல்லது வேறு எவரிடமோ தான் நிதி ஊக்குவிப்பு அல்லது முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் எந்தவித கேள்விகளையும் கேட்கவில்லை என்பதனை அவர் எம்மிடம் தெரிவித்தார்.

Daily Mirror

இது குறித்து நாம் Daily Mirror பத்திரிகையின் செய்தி ஆசிரியரிடம் வினவியபோது இதுபோன்ற ஒரு செய்தியை தாம் ஒருபோதும் வெளியிடவில்லை எனவும், தமது பத்திரிகையின் பெயர் மற்றும் இலட்சிணையை பயன்படுத்தி இவ்வாறான மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தாம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT)

இது தொடர்பில் நாம் இலங்கை கணிணி அவசர தயார்நிலை குழுவிடம் கேட்டபோது, இதுவொரு மோசடி எனவும், இவ்வாறான மோசடியான முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களின் பேஸ்புக் உள்ளிட்ட கணக்குகளின் தகவல்கள் மோசடிக்காரர்களினால் கையகப்படுத்தப்படுகின்றன எனவும் இவை நம்பகத்தன்மை நிறைந்த விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இவற்றின் மூலம் மக்கள் முழுமையாக ஏமாற்றப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார குறிப்பிட்டார்.

மேலும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக இந்த மோசடிக்காரர்கள் சமூகத்தில் பிரபல்யமானவர்களும் அதில் முதலீடு செய்து இலாபம் ஈட்டியுள்ளதாக விளம்பரப்படுத்தி அதன் மூலம் மக்களை முதலீடு செய்யும் நிலைக்கு தள்ளி அவர்களின் பணம் மற்றும் தனிப்பட்ட தரவுகளை கொள்ளையடிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான மோசடிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

மக்களை கவரும் வகையின் ஒரு நாளைக்கு 6 இலட்சம் முதல் 8 இலட்சம் வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கும் விளம்பரங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்பதனை முதலில் உணர வேண்டும்.

மக்களை நம்பவைப்பதற்காக பத்திரகைகளில் இது தொடர்பில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து போலியான பத்திரிகை செய்திகளை வெளியிடுதல் – எனவே இது தொடர்பில் எம்போது அவதானமாக செயற்படுதல் வேண்டும்

பரீட்சயமற்ற இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் இவ்வாறான முதலீட்டு திட்ட இணையதளங்களுக்கு தானாகவே கொண்டு செல்லப்படுவதற்கான அவதானம்.

தூண்டுதல் மற்றும் அழுத்தம்: அதாவது இவ்வாறான நடைமுறைகளின் போது காலவரையறைக்குள்  நடைமுறைப்படுத்துங்கள், அரிய வாய்ப்பு போன்ற சொற் பிரயோகங்கள் மூலமாக இவற்றை சரிபார்க்காமல் செயற்படுத்துவதற்கு மக்களை தூண்டுதல்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் முதலீட்டு திட்டம் தொடர்பில் பாடகி யோஹானி டி சில்வா நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் உடனடியாக பணம் சம்பாதிக்கக் கூடிய முதலீட்டும் திட்டம் தொடர்பில் வெளிப்படுத்தியதாக பகிரப்படும் தகவல் போலியானது என்பதுடன், அது தொடர்பில் Daily Mirror ஆங்கில பத்திரிகையில் கட்டுரை வெளியாகியுள்ளதாக பகிரப்பட்ட கட்டுரையானது Daily Mirror பத்திரிகையின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட கட்டுரை என்பதுவும் தெளிவாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பாடகி யோஹானி நேர்காணல் நிகழ்ச்சியில் உடனடியாக பணம் சம்பாதிக்கும் வழி தொடர்பில் வெளிப்படுத்தினாரா?

Fact Check By: Suji Shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *