விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக NPP பாடல் வெளியிட்டதா?

Insight சமூகம் | Society

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பலரு அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வந்தனர். அதேபோன்று இந்த தேர்தலை மையமாகக் கொண்டு பல போலியான செய்திகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது.

அந்தவகையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் அமைப்பதாக தெரிவித்ததாகவும் அதனை பரைசாற்றும் விதமாக ஒரு பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.

எனவே இதன் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archive | Archive

குறித்த பதிவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு  ஆதரவாக பல தமிழ் பாடல்களை வெளியிட்டுள்ளது, அவற்றில் ஒன்றில், தேசியத் தலைவருக்கு (பிரபாகரன்) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதாக உறுதியளிக்கும் ஒரு பாடலை தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் வெளியிட்டுள்ளார்.

அதனை இளங்குமரன் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டதாக தமிழ் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் பெயரில் ஒரு துறைமுகம் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளும் தமிழ் தேசியத் தலைவரின் கொள்கைகளும் ஒன்றுதான் என்பதையும் இந்தப் பாடல் கூறுகிறது.

அந்தப் பாடலின் யூடியூப் இணைப்பையும் அந்த இணையதளம் வெளியிட்டது, மேலும் அந்தப் பாடலின் வரிகளின் ஆங்கிலப் பதிப்பு பின்வருமாறு, என சிங்கள மொழியில் தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.05 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Explainer (விளக்கமளித்தல்)

மேற்குறிப்பிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப்போன்று இவ்வாறான பாடல்கள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது தேர்தல் காலங்களில் சில பிரதேசங்களை பிரதானப்படுத்தி சில பாடல்கள் வெளியாகியிருந்ததுடன் அவற்றை தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவரின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனினும் வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருக்கு சிலை வடிப்பதாக தெரிவிக்கப்பட்ட பாடல் அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை.

எனவே உண்மையில் அவ்வாறான வரிகளைக் கொண்ட பாடல் எதுவும் வெளியிடப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்தபோது, குறித்த வரிகளைக் கொண்ட பாடல் Tamilnews1 என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

அத்துடன் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று Tamil Guardian இணையதளத்திலும் குறித்த பாடல் தொடர்பிலும், பாராளுமன்ற உறுப்பினர் அந்த பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது தொடர்பிலும் செய்தி வெளியாகியிருந்தது.

Archived Link

அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பின்னர் அதனை நீக்கவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றமையையும் எம்மால் காண முடிந்தது.

Facebook| Archived Link

பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன்

எனவே இது தொடர்பில் தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது குறித்த பாடல்கள் தேசிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்டவை அல்ல எனவும் இந்த பாடல்கள் வெளிநாட்டில் வசிக்கும் சிலரினால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டவை எனவும் தெரிவித்தார்.

“இந்த பாடல்களை உங்கள் பேஸபுக் பக்கத்தில் பகிர்ந்தீர்களா ?” என நாம் வினவியபோது, “ஆம் நான் இவற்றை எனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்நதேன், ஆனால் வல்வெட்டித்துறை பாடலை நான் கேட்ட போது அதில் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் காணப்பட்டமையினால் நான் அந்த பாடலை மாத்திரம் எனது பேஸ்புக் பக்கத்தில் பகிரவில்லை” எனவும் குறிப்பிட்டார்.

மேலும் “நான் எனது பேஸ்புக் பக்கத்தில் குறித்த பாடலை பகிர்ந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் தெரிவிக்கும் விடயம் முற்றிலும் தவறானது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வாறான வாக்குறுதிகளை நானோ எமது கட்சியின் உறுப்பினர்களோ தேர்தல் மேடைகளில் எப்போதும் தெரிவிக்கவில்லை. அத்துடன் இவ்வாறான போலியான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் வழங்கியதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறித்த பாடல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்தார். இதன்போது, தான் இந்த பாடலை முதற் தடவையாகவே இப்போதே கேட்பதாகவும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Facebook

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

எனவே இவற்றின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு சிலை வடித்தல் போன்ற வரிகளைக் கொண்ட பாடல் வெளியிடப்பட்டுள்ளமை உண்மை எனினும் அந்த பாடல் யாரால் வெளியிடப்பட்டது என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அத்துடன் குறித்த பாடல் தேசிய மக்கள் சக்தியால் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டாலும், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் அந்த பாடல் வெளிநாட்டில் உள்ள சிலரினால் தயாரிக்கப்பட்டதாகவும், அது தேசிய மக்கள் சக்தியினால் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த பாடல் வெளியாகியுள்ளமை உண்மை எனினும் அது யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக NPP பாடல் வெளியிட்டதா?

Written By: Suji Shabeedhran  

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *